ஆம்பூர் கஸ்டடி மரணம் மற்றும் கலவரம்: மர்மங்கள் விலகுமா?

0

 – ரியாஸ்

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பகுதியை சேர்ந்த பழனி என்பவரின் மனைவி பவித்ரா. இவர் காணாமல் போனதை தொடர்ந்து பள்ளிகொண்டா காவல்நிலையத்தில் புகார் அளித்தார் பழனி.வழக்கை விசாரித்த ஆய்வாளர் மார்டின் ஷகீல் அஹமது என்ற வாலிபரை விசாரித்துள்ளார். விசாரணையின் போது ஷகீல் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். அவருடைய உடம்பில் காயங்களும் காணப்பட்டன. வீடு திரும்பிய ஷகீல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் ஜூன் 25 இரவு மருத்துவமனையில் வைத்து ஷகீல் மரணமடைந்தார்.
ஷகீலின் மரணத்தை தொடர்ந்து ஆம்பூரில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு தடியடியும் நடத்தப்பட்டது. சாலைமறியலின் போது வாகனங்களுக்கு தீ வைப்பு சம்பவங்களும் நடைபெற்றன. ஆனால் இந்துத்துவ இயக்கத்தை சேர்ந்தவர்கள் சில வாகனங்களுக்கு தீ வைத்ததாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனர். புகார் அளிக்க சென்றவர்களின் வாதத்தை ஏற்காத காவல்துறை அவர்களையும் மிரட்டியும் உள்ளது.
பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் போராட்டங்களை தொடர்ந்து ஆய்வாளர் மார்டின் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். வழக்கு விசாரணை சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி நூற்றுக்கும் அதிகமான முஸ்லிம்களை காவல்துறை இதுவரை கைது செய்துள்ளது.
இதனிடையே காணாமல் போன பவித்ரா என்ன ஆனார் என்ற கேள்விக்கு பதில் கிடைக்காமல் இருந்து வந்தது. பிரச்சனையில் குளிர்காய விரும்பிய இந்து முன்னணி போன்ற பிரிவினைவாத அமைப்புகள் பல வதந்திகளை பரப்பினர். இந்து முன்னணி அமைப்பாளர் இராமகோபாலன் உள்ளிட்டோரின் அறிக்கைகள் பிரச்சனையை தூண்டும் விதத்தில் அமைந்திருந்தன. பெண் காவலர்கள் மரணம், ஆயிரம் கோடி ரூபாய் சேதம் என்று உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பினர்.
பவித்ரா கடத்தப்பட்டதாகவும் வெளிநாட்டிற்கு விற்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் பொய்களை சிலர் பரப்பினர். ஆம்பூரில் நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டதாக சில சேனல்களும் பொய் செய்தி வெளியிட்டன.
பவித்ராவை கண்டுபிடித்து ஒப்டைக்குமாறு பழனி ஆட்கொணர்வு வழக்கொன்றை தாக்கல் செய்தார். புகழேந்தி, சரவணன் ஆகியோர் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாக முதலில் இருந்தே கூறி வந்துள்ளார் பழனி. தனது மனுவிலும் இவர்கள் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து ஜூன் 5 அன்று சென்னையில் பவித்ராவை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். தனியார் மகளிர் விடுதியொன்றில் அவர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சரவணன், சுரேந்திரன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணையை காவல்துறையினர் நடத்தி வருகின்றனர்.
தற்போது வேலூரில் உள்ள காப்பகத்தில் பவித்ரா தங்கவைக்கப்பட்டுள்ளார். ஷகீலுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று முதல்கட்ட விசாரணையில் அவர் தெரிவித்தாக தெரிகிறது. மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டால் முழு உண்மையும் வெளியே வரும் என்று தெரிகிறது.
ஷகீல் அஹமதின் கஸ்டடி மரணம் குறித்து விசாரணை நடத்தும் அதே சமயம், நடைபெற்ற கலவரத்தில் இந்துத்துவ கும்பல்களுக்கு உள்ள தொடர்பையும் முழுமையாக விசாரிக்க வேண்டும். ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் நள்ளிரவு முதல் 15ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்து முன்னணி நாளை நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
மக்களை பிளவு படுத்தி அதன் மூலம் குளிர்காய விரும்பும் பாசிச சக்திகள் குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அரசும் இவர்கள் மீது முழுமையான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் அரசியல் அனாதை என்ற நிலையில் உள்ள பா.ஜ.க. வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்குகளை பெறுவதற்கு எதையும் செய்ய தயங்காதவர்கள் என்பதை இவர்களின் வரலாற்றை அறிந்தவர்கள் நன்றாக அறிவார்கள்.

Comments are closed.