ஆம்பூர் சம்பவம்: 144 தடை உத்தரவை நீக்க தலைவர்கள் கோரிக்கை

0

இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக இன்று (10.7.2015) காலை 12 மணிக்கு சென்னை சேப்பாக்கம் ரிப்போர்டர் கில்டு-ல் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஏ.கே.முஹம்மது ஹனிபா- ஒருங்கிணைப்பாளர்,தொல்.திருமாவளவன் – விடுதலை சிறுத்தைகள் கட்சி,கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி- எஸ்.டி.பி.ஐ கட்சி,அப்துல் ஹமீது – எஸ்.டி.பி.ஐ,முஹம்மது அன்சாரி – பொதுச்செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,T.S.S.மணி – மனித உரிமை ஆர்வலர்,எஸ்.என்.சிக்கந்தர் – வெல்ஃபர் ஃபார்ட்டி,கே.ஜலாலுதீன் – ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த்,மௌலான மன்சூர் காஷிஃபி,அ.ச.உமர் பாருக்,மௌலானா தர்வேஷ் ரஷாதி,எம்.ஜி.கே.நிஜாமுத்தீன் – இந்திய தேசிய லீக்,ரூபன் – தொழிற் சங்க கூட்டமைப்பு, ஆம்பூர்
உட்பட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த மாதம் 15 ஆம் தேதி ஆம்பூரை சேர்ந்த ஷமீல் பாஷா என்ற இளைஞர் காவல்துறை அதிகாரி மார்ட்டினால் அழைத்துச் செல்லப்பட்டு 4 நாட்கள் சட்டவிரோத காவலில் வைத்து சித்தரவதை செய்யப்பட்டதில் ஷமீல் பாஷா படுகாயமுற்றார். மருத்துவமனையில் 19ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட அவர் 26ஆம் தேதி மரணமடைந்தார்.
இது திட்டமிட்ட படுகொலையாகும். இதற்கு காரணமான காவல்துறை ஆய்வாளர் மார்டின் மற்றும் அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறோம். இது போன்ற காவல்நிலைய கொலைகள் இனியும் தொடராமல் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
Ø ஷமீல் பாஷாவின் மரணத்தை தொடர்ந்து 27 ஆம் தேதி ஆம்பூரில் நடைபெற்ற கலவரங்களும் வன்முறைகளும் கவலைக்குறியவை, கண்டனத்திற்குரியவை.
இதற்கு காரணமானவர்களை வன்மையாக கண்டிக்கிறோம். ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடிய நிலையில் காவல்துறை இன்னும் ஜாக்கிரதையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.. இந்த கலவரங்களிலும் காவல்துறையின் தடியடியாலும் காயமடைந்த காவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் எங்கள் ஆறுதலை தெரிவிக்கிறோம்.
Ø நடைபெற்ற கலவரத்தை தொடர்ந்து இதுவரை 130க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறை அதிகாரிகள் கலவரம் நடைபெற்று 15 நாட்கள் கழிந்த நிலையிலும் இன்னும் கைது நடவடிக்கைகளை தொடர்ந்து வருகின்றனர். இதனால் மக்களிடையே அச்சமும் பதட்டமும் தொடர்ந்துவருகிறது.
எனவே!
அப்பாவிகள் மீதான வழக்குகளை திரும்பப்பெற்று அவர்களை விடுதலை செய்யவேண்டும். கைது நடவடிக்கைகளை தொடராமல் உடனே நிறுத்த வேண்டும். மக்களிடையே அச்சத்தையும் பதட்டத்தையும் தவிர்க்கும் வகையில் காவல்துறை செயல்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
Ø ஆம்பூர் வாணியம்பாடி பகுதிகளில் 144 தடை உத்தரவை காவல்துறை பிறப்பித்துள்ளது. புனித ரம்ஜான் காலமென்பதால் இஸ்லாமியர்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர். ஏழை மக்களுக்கு உதவி செய்வதற்கும் கூட காவல்துறை தடையாக உள்ளது. எனவே புனித ரமலான் மாதத்தையும் ரம்ஜான் பெருநாளையும் மனதில் கொண்டு உடனே 144 தடை உத்தரவை திரும்பப்பெறுமாறு காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறோம்.
Ø எதிர்பாராமல் ஏதேச்சையாக நடைபெற்றுவிட்ட ஆம்பூர் கலவரத்தை காரணம் காட்டி பாஜக உட்பட மதவெறி அமைப்புகள் நடந்து கொள்ளும் விதம் கடுமையான கண்டனத்திற்குறியது.
Ø ஆம்பூர் மக்களிடையேயும் தமிழகம் முழுவதும் பிரிவையும், கலவரத்தையும் தூண்டும் வகையில் பேட்டிகள் கொடுப்பதும், செய்திகள் வெளியிடுவதும் சுவரொட்டிகள் ஒட்டுவதும், துண்டு பிரசுரங்கள் வெளியிடுவதும், பொது மேடைகளில் கலவரத்தை தூண்டும் விதமாக பேசுவது, வாட்ஸ்ஆப், பேஸ்புக் மற்றும் இணையதளங்களில் நச்சுக்கருத்துக்களை பரப்புவது போன்ற தீய செயல்களில் தமிழகம் முழுவதும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகத்தின் பொது அமைதிக்கும் பெருத்த குந்தகம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே காவல்துறையும் தமிழக அரசும் இத்தகைய இழி செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுகிறோம். தமிழக மக்கள் எத்தகைய அவதூறு மற்றும் பொய் செய்திகளையும் நம்பாமல் மதநல்லிணக்கத்தை கடைபிடிக்குமாறும் மதவெறி கும்பல்களை புறக்கணிக்குமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினர்.

Comments are closed.