ஆர்எஸ்எஸ் கொள்கைகளில் வார்த்தேடுக்கப்படும் 10 லட்சம் உத்திர பிரதேச மாணவர்கள்

0

உத்திர பிரதேசத்தில் ஆர்எஸ்எஸ் கொள்கைகளை பத்தாம் வகுப்பு மாணவர்களிடையே பரப்பும் விதமாக தீனதயாள் உபாத்யாய் நூற்றாண்டு கொண்டாட்டம் என்கிற பெயரில் வருகிற ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி மாநிலம் முழுவதும் தேர்வு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது பாஜக. இந்த தேர்வுக்கென மோடி மற்றும் உத்திர பிரதேச முதல்வர் யோகி அதித்யநாத்தின் சாதனைகள் (அதித்யநாத் ஆட்சியின் சாதனைகளை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்) மற்றும் ஆர்எஸ்எஸ் இன் கொள்கைகள் அடங்கிய சிறப்பு கையேடு ஒன்று அச்சடிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து பாஜக மாநில செய்த்தித் தொடர்பாளர் சாந்தமோகன் கூறுகையில், “இந்த தேர்வில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல் பத்து இடங்கள் பிடிக்கும் மாணவர்கள் வருகிற செப்டெம்பர் 25 ஆம் தேதி கவுரவிக்கப்படுவார்கள். இந்த தேர்வுக்கான வினாத்தாள் வருகிற ஆகஸ்ட் 1 இல் இருந்து 5 ஆம் தேதி வரை நடைபெறும் தேர்வுக்கான முன்பதிவின் போது வழங்கப்படும்.” என்று அவர் கூறியுள்ளார்.

இந்தத் தேர்விற்கென வழங்கப்படும் கையேடு ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக கொள்கைகளை பரப்புமாறு வடிவமைப்பு செய்யப்படும் என்றும் இதில் தீனதயாள் உபாத்யாயின் கொள்கைகள், அரசியல், மற்றும் சமூக வாழ்வு கலாச்சார தேசியவாதம் போன்ற தலைப்புகளுடன் ஒருங்கிணைந்த மனிதேயம் குறித்தும் கருத்துக்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் மோடி அரசின் முக்கிய முடிவுகளான GST, BHIM செயலி, பணமதிப்பிழப்பு, இராணுவத்தின் துல்லியத் தாக்குதல், Start up India, ஸ்வச் பாரத் போன்ற திட்டங்களுடன் அதித்யநாத் அரசின் ரோமியோ எதிர்ப்புப் படை உட்பட பல திட்டங்கள் குறித்தும் இந்த புத்தகத்தில் போதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராம்ஜி லால் சுமன், இவர்களின் இந்த முடிவு அவர்களின் மதவாத திட்டங்களை அதிகப்படுத்தும் ஒரு முயற்சி என்று கூறியுள்ளார். மேலும், “இதுபோன்ற பிரிவினைவாத யுக்திகளை கையாள்வதையும், வெறுப்பை பரப்புவதையும் விட்டுவிட்டு அரசு சராசரி மனிதர்களின் பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார். மேலும் “இது ஒரு மோசமான முன் உதாரணம்” என்று அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் தேசிய செயலாளர் விவேக் பன்சால் “ஒரு தலைமுறையையே மூளை சலவை செய்யும் முயற்சி இது” என்று கூறியுள்ளார். மேலும், “பிரிவினைவாத கொள்கைகளை விட ஒற்றுமைப்படுத்துதல் மிக அவசியம்.” என்று கூறியுள்ளார்.

இவ்வருடம் உபாத்யாய் பிறந்த இடமான மதுராவில் உள்ள நகலா சந்திரபன் கிராமத்தில் எட்டு நாள் கண்காட்சி ஒன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் முன்னதாக மூன்று நாட்கள் இந்த கண்காட்சியை நடத்த திட்டமிட்டு பின்னர் அது எட்டு நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தீனதயாள் தம் அமைப்பின் துணைச் செயலாளர் மனிஷ் குப்தா தெரிவித்துள்ளார். மேலும் இந்த கிராமம் சுற்றுலாத்தலமாக உருவாக்கப்படுகிறது என்றும் இங்கு வருகை புரிவோருக்கு இந்திய சுற்றுலாத்துறை அனைத்து வசதிகளையும் செய்து தருவதற்கு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சிகளை ஆர்எஸ்எஸ் அமைப்பினர் வருகிற செப்டெம்பர் 18 ஆம் தேதி தொடங்கி வைப்பார்கள் என்றும் இதன் நிறைவு நிகழ்ச்சியில் அதித்யநாத் பங்கு கொள்வார் என்றும் நம்பப்படுகிறது.

Comments are closed.