ஆர்.எஸ்.எஸ். இந்து முஸ்லிம் பிளவை ஏற்படுத்த முயல்கிறது – விகாஸ்புரி மக்கள்

1

மேற்கு டில்லியில் அமைத்துள்ள விகாஸ்புரியின் ஜே ஜே காலனியில் வசிக்கும் மக்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அப்பகுதியில் வசிக்கும் இந்து முஸ்லிம்களுக்கு இடையே மோதலை உண்டு பண்ணி முஸ்லிம்களை துரத்தியடிக்க முயற்சித்தனர் என்று கூறியுள்ளனர்.

இந்த பகுதியில் தான் சென்ற வாரம் பல் மருத்துவர் பங்கஜ் நரங் ஒரு கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அப்பொழுதே அவரது கொலையை இந்து முஸ்லிம் சமூகத்தினர் இடையேயான மோதலாக மாற்ற பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஐ.பி.எஸ் அதிகாரி மோனிகா பரத்வாஜின் முயற்சியால் ஒரு பெரும் மோதல் தடுத்து நிறுத்தப்பட்டது. (படிக்க செய்தி)

தற்பொழுது அப்பகுதியில் கடந்த ஞாயிறு மாலை 4 மணியளவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கூடி முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளை பேசியுள்ளனர். ஆனால் அங்கு நிலைமை மோசமடைவதற்கு முன் காவல்துறையினர் விரைந்து வந்து கூட்டத்தை கலைத்துள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதியிலும் கொலை செய்யப்பட்ட மருத்துவர் பங்கஜ் நரங் வசித்த பகுதியிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் குறிப்பிடுகையில் குழப்பத்தை விளைவிக்க நினைத்த சிலர் திங்கள்கிழமையும் அப்பகுதிக்கு வருகை தந்ததாகவும் ஆனால் காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்திவிட்டனர் என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அது அவர்களின் வழமையான சாஹா பயிற்சி கூட்டமென்றும் அங்கு முஸ்லிம்களுக்கு எதிராக எதுவும் நடைபெறவில்லை என்றும் கூறியுள்ளனர்.

ஆனால் இப்பகுதி மக்கள் வேறு தகவல்களை கூறியுள்ளனர். இப்பகுதியில் வசிக்கும் யமின் என்பவர் இது குறித்து கூறுகையில் ஞாயிறு மாலை 50-60 வரையிலான ஒரு கும்பல் அப்பகுதி ராதா கிருஷ்ண கோவில் முன்புள்ள மைதானத்தில் கூடினர். அவர்கள் அப்பகுதியில் வாழ்ந்த இந்துக்களை தங்கள் வீடுகளில் இருந்து அழைத்தனர். சில நிமிடங்களில் அங்கு சுமார் 500 மக்கள் ஒன்று கூடினர். இவை அனைத்தையும் ஆர்.எஸ்.எஸ்.சினர் உடன் வந்த இந்து தொலைகாட்சி ஒன்று வீடியோ பதிவு செய்தது என்று கூறியுள்ளார்.

முஸ்லிம் பெரியவரான சோட்டே கான் என்பவர் இது குறித்து கூறுகையில் “அங்கு கூடியிருந்த இந்துக்களிடம் அந்த காலனி அப்பகுதியில் இருக்க வேண்டுமானால் அப்பகுதியில் உள்ள முஸ்லிகளை அங்கிருந்து விரட்டியடிக்கும்படி கூறினர்” என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் “தலையில் தொப்பி அணிந்த அனைவரையும் அவர்கள் விரட்டினர். அவர்களை நிறுத்தும்படி நான் கூறியபோது என் நெத்தியில் திலகமிடப் போவதாக கூறினர். பிரச்சனைகள் வேண்டாம் என்று நான் விலகிவிட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.

இதுவரை இப்பகுதியில் இந்துக்களும் முஸ்லிம்களும் 27 வருடங்களாக அமைதியாக வாழ்ந்து வருவதாகவும் ஒருவர் வீட்டு விஷேஷத்திற்கு மற்றொருவர் பங்கெடுக்காமல் இருபதில்லை என்றும் அமர்ஜீத் என்பவர் கூறியுள்ளார். பல் மருத்துவர் பங்கஜ் நரங்கின் கொலையை அடுத்து இப்பகுதியில் மக்களை பிளவு படுத்த பல முயற்ச்சிகள் நடந்து வருகின்றன.

Discussion1 Comment

  1. India unmaiyaga nesippavan

    Intha Rss theeviravadhigalai azithu ozithalthan india makkal anaivarukkum nalvazvu?!?!? Nadakmumaaaa???