ஆர்.எஸ்.எஸ். சுயரூபத்தை உணர்ந்து கொள்ளும் தலித்கள்!

0

பசு பாதுகாப்பு என்று ஆங்காங்கே நடத்தப்படும் தலித்கள் மீதான தாக்குதல்களினால் தலித்கள் மத்தியில் பா.ஜ.க.வின் செல்வாக்கு சரிந்ததோடு ஆர்.எஸ்.எஸ். மீதான எதிர்ப்பும் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக ஆர்.எஸ்.எஸ்.ஸின் சாகாக்களில் பங்கேற்று வந்த தலித் சமூகத்தினர் பெருமளவில் விலகிவிட்டனர். இந்த சாகாக்களில் பல மோடி ஆட்சி பொறுப்பேற்றதும் தலித்களை குறி வைத்து அவர்கள் வாழும் பகுதிகளில் துவங்கப்பட்டது.

இந்துத்துவவாதிகளால் தலித்கள் மீது நாடு முழுவதும் நடத்தப்படும் தாக்குதல்களை கண்டித்து குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தலித் சமூக மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தலித் எழுச்சி உத்திர பிரதேசம் மற்றும் பஞ்சாபிலும் நிகழும் என்று தெரிய வருகிறது. மேலும் பீகார் மற்றும் ஹரியானாவிலும் ஆர்.எஸ்.எஸ். சாகாக்களில் இருந்து தலித் சமூக மக்கள் விலகியுள்ளனர்.

இந்துத்துவாவினரின் தலித்கள் மீதான தாக்குதல்களும் அதனை தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ்.ஸிலிருந்து தலித்கள் விலகி வருவதும் தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் தங்களது இருப்பை நிலை நிறுத்த முயற்சிக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு தர்ம சங்கடமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.

“முதலில் மக்கள் பெரும் உற்ச்சாகத்துடன் காணப்பட்டனர். ஆனால் தற்போது ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் எவ்வளவு முயற்சித்தும் இந்த சாகாக்கள் தோல்வியடைந்துவிட்டன” என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஒருவர் தலித்கள் வாழும் பகுதிகளில் உள்ள சாகாக்கள் குறித்து தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். சாகாக்களின் இந்த தலித்கள் அற்ற நிலை, மீரட், உத்திர பிரதேசம், மகாராஷ்டிரம், குஜராத், பஞ்சாப், ஹரியானா, பீகார் ஆகிய மாநிலங்களில் நிலவி வருகிறது.

பா.ஜ.க. மீதான தலித்களின் வெறுப்பு கடந்த ஜூலை மாதம் 31ம் தேதி ஆக்ராவில் அமித் ஷா தலைமை தாங்கி நடத்த இருந்த பேரணியை தலித்கள் பங்கேற்காத காரணத்தால் பா.ஜ.க ரத்து செய்த போது தெளிவாகிவிட்டது. 40,000 தலித்களை ஒருங்கிணைக்கும் பேரணி என்று திட்டமிட்ட பா.ஜ.க.விற்கு தங்களால் அதனை செய்ய இயலாது என்று இரண்டு நாட்களுக்கு முன்னரே தெரிந்து விட்டதன் பேரில் இந்தப் பேரணி ரத்து செய்யப்பட்டதாக தெரிய வருகிறது.

சங்பரிவாரங்கள் தலித்களை தங்களுடன் இணைக்கும் முயற்சிகளை 1983லிருந்தே துவங்கிவிட்டனர். அத்துடன் ஃபுலே மற்றும் அம்பேத்கரின் கருத்துகளை இந்துத்துவ சித்தாந்தங்களுடன் இணைக்கும் பணிகளையும் அவர்கள் செய்யத் துவங்கினர். ஆனால் ஆர்.எஸ்.எஸ். இல் இருக்கும் உயர் சாதியினரை கோபப்படுத்தாமல் அவர்களால் தலித்களை தங்களுடன் இணைத்துக்கொள்ள முடியவில்லை. சாதிகளை ஒழிக்க வேண்டும் என்ற அம்பேத்கரின் கொள்கைகள் இவர்களது கொள்கைகளுக்கு நேர்மாற்றமாக அமைந்துள்ளதும் இவர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது.

பொதுவாகவே தலித்கள் ஆர்.எஸ்.எஸ்.ஐ எப்போதும் ஒரு சந்தேகக் கண்ணுடனேயே பார்த்து வந்தனர்.  இதனால் 2014 தேர்தலுக்கு முன்னர் சங்க பரிவார அமைப்புகள் தலித்களை மோடியின் ஆதரவாளர்களாக மாற்ற பெரும் பிரச்சாரங்களை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்தே ஆர்.எஸ்.எஸ். அதிகளவிலான சாகாக்களை தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் பகுதிகளில் துவங்கியது. இவர்களின் இந்த அனைத்து முயற்சிகளும் தலித்கள் மீது இந்துத்துவா கும்பல் நடத்தி வரும் தாக்குதல்களாலும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட தலித் எழுச்சியினாலும் பயனற்று போய்விட்டது.

Comments are closed.