ஆர்.எஸ்.எஸ்.சமூக சேவையின் நோக்கங்கள் என்ன?

0

பா.ஜ.க ஆட்சி அமைத்ததில் ஆர்.எஸ்.எஸ். இன் சமூக சேவை பிரிவுகளின் பங்களிப்பு அதிகமாக உள்ளது என ஏல் பல்கலைகழக பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஏல் பல்கலைகழகத்தின் அரசியல் அறிவியல் துறையில் துணை பேராசிரியராக பணியாற்றி வருபவர் தாரிக் தாசில். டில்லியில் பிறந்த இவர் தனது இளங்கலை பட்டத்தை பொருளாதார துறையில் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைகழகத்தில் பெற்றார். பின்னர் முதுகலை பட்டம், டாக்டரேட் என்று தந்து உயர்கல்விகளை தொடர்ந்த தாரிக் கடந்த வாரம் வாஷிங்டனில் உள்ள Carnegie Endowment இல் இந்திய அரசியலில் காங்கிரசின் வீழ்ச்சியும், பா.ஜ.க மற்றும் மாநில கட்சிகளின் வளர்ச்சி பற்றியும் விளக்கினார். அப்போது அவர் எழுதிய lite Parties, Poor Voters: How Social Services Win Votes in India என்ற புத்தகத்தை பற்றி அவர் குறிப்பிட்டார்.

அதில், பா.ஜ.க வும் ஆர்.எஸ்.எஸ். உம் தாழ்த்தப்பட்ட சமூக மக்களை சென்றடைய பல வழிகளை பின்பற்றின என்றும் ஆனால் அவை சொற்பமான அளவே பயன் தந்தன என்றும் அவர் கூறினார். பிராமணர்களுக்கு முன்னுரிமை தரும் அக்கட்சிக்கு பிற்படுத்தப்பட்ட சமூகத்தாரையும் சென்றடைய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதனை அக்கட்சி ஆர்.எஸ்.எஸ். இன் சமூக சேவை பிரிவுகள் மூலம் சாதித்து கொண்டது என்று அவர் தெரிவித்தார்.

சமூக சேவையில் பல காலமாக தன்னை ஈடு படுத்திக்கொண்ட ஆர்.எஸ்.எஸ். முன்பு குறிப்பிட்ட தருணங்களில் மட்டும் அச்சேவையில் ஈடுபட்டது. உதாரணமாக, இயற்கை பேரழிவுகள் மற்றும் மனிதன் ஏற்படுத்திய பிரிவினை போன்ற தருணங்களில் அது தன்னை ஈடுபடுத்திக் கொண்டது. ஆனால் சேவா பாரதி, வனவாசி கல்யான் ஆசிரமம் ஆகிய அமைப்புகள் மூலம் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு சேவைகளை தினந்தோறும் வழங்கத் தொடங்கியது.
இந்த இரண்டுமே பல ஆண்டுகள் முன்னதாக நிறுவப்பட்டவை என்ற போதும் 1990க்கு பிறகே இவை பரவலாக்கப்பட்டன. இது தான் மத்திய இந்தியாவில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் ஆதிவாசிகளிடையே பா.ஜ.க விற்கு ஆதரவை பெற்றுத் தந்தது என்று தாரிக் கூறியுள்ளார்.

“1990களில் இந்துத்துவவாதிகள் தங்களை விரிவுபடுத்திக்கொள்ள பல யுக்திகளை கையாண்டனர். சேவைகளின் ஊடே மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்துவது இவர்களின் திட்டம்.இந்த வகையில்தான் ராம் ஜென்மபூமி இயக்கம் தொடங்கப்பட்டது. இது இந்துக்களை முஸ்லிம்களுக்கு எதிராக ஜாதி பாகுபாடின்றி அணி திரட்டும் என்பதில் இந்துத்துவவாதிகளுக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. இது தலித்களையும் அத்வானியின் ரத யாத்திரையின் கீழ் அணிதிரட்டியது.

ஆனால் இதனை தொடர்ந்து 1993 இல் நடத்தப்பட்ட ஐந்து மாநில தேர்தல்களில் கடுமையான தோல்வியை சந்தித்தது பா.ஜ.க. ராமர் கோவில் விவகாரம் தாழ்த்தப்பட்ட மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

கே.என். கோவிந்தாச்சார்யாவின் கருத்துப்படி ராமர் கோவில் விவகாரத்தில் தலித்களின் பங்களிப்பு வெறும் சடங்காகவே மட்டும் பார்க்கப்பட்டது என்றும் அதில் அவர்களுக்கு லாபம் ஏதும் இல்லை என்றும் கருதப்பட்டது.

இதனை அடுத்து பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் இருந்த தலைவர்கள் பங்காரு லக்ஷ்மன், உமா பாரதி போன்றோரை முன்னிறுத்தி புதிய யுக்தியை கையாண்டது. ஆனால் இதனை அப்படியே கடைப்பிடிக்க அவர்களால் இயலவில்லை. ஏனென்றால் இது உயர்சாதியினருக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. இன்னும் இது ஆர்.எஸ்.எஸ்.ல் வரவேற்பையும் பெறவில்லை. உயர் ஜாதியினரை தக்க வைப்பதுடன் தாழ்த்தப்பட்ட மக்களையும் எவ்வாறு இணைத்துக் கொள்வது என்ற குழப்பத்தில் சங் பரிவாரம் அப்போது இருந்தது.

இந்த சேவை யுக்தி என்பது பிற்படுத்தப்பட்டோருக்கு பெயரளவில் நன்மைகளை வழங்கியதோடு மட்டுமல்லாமல் உயர்ஜாதியினரின் நலன்களையும் பாதிக்கவில்லை. இன்னும் ஆர்.எஸ்.எஸ். இந்த சேவைகளை கிருஸ்தவ மிஷனரிகளின் சேவைகளுக்கும் அதன் மூலம் ஏற்படும் மத மாற்றத்திற்கும் ஒரு பதிலடியாக நினைத்தது. ஆனால் இத்தகைய முக்கியத்துவங்களுக்கு மத்தியிலும் இது பெருவாரியான மக்கள் கவனத்தை ஈர்க்கவில்லை.

ஆனால் இத்தகைய சேவைகள் முதன் முறையாக பல இடங்களில் பா.ஜ.க. தேர்தலில் வெற்றிபெற உதவின. அடுத்ததாக இத்தகைய சேவைகள் மூலம் பா.ஜ.க வில் அதிகப்படியான தலித்கள் மற்றும் ஆதிவாசிகள் இணைந்தனர்.ஆனால் இதில் பா.ஜ.க விற்கு ஏற்பட்ட மற்றொரு சவால் என்னவெனில் இவர்களுக்கு பெரும் அரசியல் இலட்சியங்கள் இருந்தன. இது பா.ஜ.க வில் சில உரசல்களை ஏற்படுத்தியது. ஏனென்றால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட தனித் தொகுதிகளை தாண்டி பா.ஜ.க தலித் மற்றும் ஆதிவாசிகளை வேட்பாளர்களாக நிறுத்துவதில்லை” என்று தாரிக் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மோடி குறித்தும் மோடியின் வெற்றி குறித்தும் குறிப்பிட்ட தாரிக் “மோடி பிரதம வேட்பாளராக முன்னேறியது பா.ஜ.க வில் தடுக்க முடியாத ஒன்றாகவே இருந்தது. இந்த நிலைக்கு அவர் உயர்வதற்கு அக்கட்சியின் பல மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப் பட்டனர். அனுபவமுள்ள அத்வானி போன்ற பல தலைவர்களும் மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதை எதிர்த்தனர். 2004ல் பா.ஜ.க தோல்வியின் பிறகு குஜராத் கலவரத்தின் பிம்பம் பா.ஜ.க.வின் தேசிய அளவிலான மதிப்பை பாதித்தது. ஆனால் அப்படியொரு நிலையில் இருந்து மோடி தன்னை மீட்டு பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தினார்.

தற்போது ஒரு தனிமனிதனை சார்ந்தே மொத்த கட்சியின் பிம்பமும் உள்ளது. அந்த தனி மனிதனின் மதிப்பு சரிந்தால் பின்னர் கட்சியை மீட்டெடுப்பது சுலபமில்லை. இந்திரா காந்திக்கு பிறகு காங்கிரஸின் நிலை குறித்து பா.ஜ.க சிந்திக்கவில்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.
சங்பரிவார்களின் சேவை அமைப்புகளின் உண்மையான நோக்கத்தை இப்புத்தகம் வெளிப்படுத்தியுள்ளது.

Comments are closed.