சுனில் ஜோஷி கொலை வழக்கில் இருந்து பிரக்யா சிங் விடுதலை!

0

ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக் சுனில் ஜோஷி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிரக்யா சிங் தாகூர் மற்றும் ஏழு நபர்களை மத்திய பிரதேச நீதிமன்றம் விடுவித்துள்ளது.
இவ்வழக்கில் மாநில காவல்துறை மற்றும் தேசிய புலனாய்வுத்துறை பாரபட்சமாக நடந்துகொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சரியான ஆதாரங்களை வழங்கவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. இதனையடுத்து இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரக்யா சிங் தாகூர், ஹர்ஷத் சோலங்கி, வாசுதேவ் பர்மர், ராம்சரண் படேல், ஆனந்தராஜ் கடாரியா, லோகேஷ் ஷர்மா, ராஜேந்திர சவுத்திரி மற்றும் ஜிதேந்திர ஷர்மா ஆகியோரை விடுவித்து செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி ராஜீவ் மதுசூதன் ஆப்தே தீர்ப்பளித்தார்.
பிரக்யா சிங்கின் நெருகிய கூட்டாளியாக செயல்பட்டு வந்தவர் சுனில் ஜோஷி. இவ்விருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இவர்கள் பிரிந்ததாக கூறப்பட்டது. பிரக்யா சிங்கிடம் தவறாக நடக்க இவர் முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. 2007 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி தேவாசில் வைத்து சுனில் ஜோஷி சுட்டுக் கொல்லப்பட்டார். குண்டுவெடிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்ட சுனில் ஜோஷி அது குறித்த தகவல்களை சொல்லி விடக் கூடாது என்பதற்காகவே கொலை செய்யப்பட்டதாக தெரிகிறது.
கொலை செய்யப்பட்ட சமயம் சுனில் ஜோஷி தலைமறைவாக இருந்தார் என்பதும் அவர் தலைமறைவாக இருந்த இடம் குறிப்பிட்ட ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களுக்கு மட்டுமே தெரியும் என்பது கவனிக்கத்தக்கது. சுனில் ஜோஷி கொலை செய்யப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன் அவர் வீட்டிற்கு சென்ற பிரக்யா சிங் ஒரு சூட்கேசை எடுத்து சென்றுள்ளார்.
நீண்ட நாட்களாக எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில் இருந்த இவ்வழக்கில் ராஜஸ்தானை சேர்ந்த ஒருவர் முதலில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து பிரக்யா சிங் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டார். முதலில் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு பின்னர் அங்கிருந்து போபாலில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர் இது ஒரு தீவிரவாத வழக்கு இல்லை என்றும் வெறும் கொலை வழக்கு என்பதாலும் மாவட்ட நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் மேல் முறையீடு செய்வது தொடர்பான முடிவை இந்த தீர்ப்பை படித்துவிட்டு மாநில அரசு மேற்கொள்ளும் என்று வழக்கறிஞர் கிரீஸ் முஞ்சி தெரிவித்துள்ளார். சுனில் ஜோஷியை கொலை செய்வதற்கான திட்டத்தை தீட்டியவர் பிரக்யா சிங் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் உட்பட அனைவரும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் அனைவரும் நிரபராதிகள் என்றால் சுனில் ஜோஷியை கொலை செய்தது யார் என்ற கேள்வியும் எழுகிறது.

Comments are closed.