ஆர்.எஸ்.எஸ்., பாஜகவிற்கு எதிராக எழுதவில்லை என்றால் கெளரி லங்கேஷ் உயிருடன் இருந்திருப்பார். கர்நாடக பாஜக எம்.எல்.ஏ

0

மூத்த பத்திரிக்கையாளரும் சமூக ஆர்வலருமான கெளரி லங்கேஷ் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவிற்கு எதிராக எழுதாமல் இருந்தால் உயிருடன் இருந்திருப்பார் என்று கர்நாடக மாநில பாஜக எம்.எல்.ஏ D.N.ஜீவராஜ் கூறியுள்ளார். இவரின் இந்த வாக்குமூலம் கெளரி லங்கேஷின் கொலைப் பின்னணி என்னவென்பதை தெளிவாக விளக்கும் விதத்தில் உள்ளது.

கடந்த வியாழக்கிழமை பாஜகவின் யுவ மோர்ச்சா பேரணியை துவக்கி வைக்கையில் கெளரி லங்கேஷின் படுகொலை குறித்து கருத்து தெரிவித்த ஜீவராஜ், லங்கேஷ் அவரது “சட்டிகளா மரண ஹோமா” என்ற டிரவ்சர்களின் இறுதிச்சடங்கு கட்டுரைக்காகவே கொலை செய்யப்பட்டார் என்று கூறியுள்ளார்.

தனது ஊடக பயணத்தில் வலது சாரி இந்துத்வா ஃபாசிஸ்டுகளின் மிகப்பெரிய சவாலாக திகழ்ந்தவர் கெளரி லங்கேஷ். தனது எழுத்துக்களாலும் சிந்தனை மற்றும் உரைகளாலும் ஃபாசிச சக்திகளை மக்கள் மன்றத்தில் தோலுரித்து காட்டியவர் இவர். இவரது கொலையில் ஃபாசிச சக்திகளின் பங்களிப்பு உள்ளதென்று தொடக்கம் தொட்டே பேசப்பட்டு வந்தாலும் ஜீவராஜின் இந்த வாக்குமூலம் இதனை உறுதி செய்யும் வகையில் உள்ளது.

ஜீவராஜின் பேச்சு அடங்கிய வீடியோவில், “காங்கிரஸ் ஆட்சியில் ஆர்எஸ்எஸ் ஊழியர்கள் எவ்வாறு தங்களது உயிர்களை இழந்தனர் என்று நாம் பார்த்தோம். கெளரி லங்கேஷ் சட்டிகளா மரண ஹோமா என்றொரு கட்டுரை எழுதியுள்ளார். அவர் இது போன்ற கட்டுரைகளை எழுதுவதை விட்டு தவிர்த்திருந்தால் அவர் உயிருடன் இருந்திருப்பார். கெளரி எனக்கு சகோதரி போன்றவர், ஆனால் அவர் நமக்கு எதிராக எழுதிய விதம் ஏற்றுக்கொள்ள முடியாதது.” என்று கூறியுள்ளார்.

இவரின் இந்த கருத்துக்கள் பல தரப்பில் இருந்து எதிர்ப்புகளை பெற்று வருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்த கர்நாடக முதல்வர் சித்தாராமையா, “இந்த கருத்து மூலம் என்ன கூற விரும்புகிறீர்கள்? இது இந்த கொலையின் பின்னணியில் யார் உள்ளார் என்பதை விளக்குகிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஜீவராஜ் மீது காங்கிரஸ் கட்சியினர் சிலர் ஸ்ரீங்கேறி காவல்துறையிடம் புகாரளித்துள்ளனர்.

தனக்கு எதிராக எதிர்ப்பு கிளம்பியதை உணர்ந்துகொண்ட ஜீவராஜ் தனது கருத்துக்கள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் கொலைகளை கெளரி லங்கேஷ் விமர்சித்து சித்தாராமையா அந்த கொலைகளுக்கு காரணமானவர்களை சிறையில் அடைத்திருந்தால் கெளரி லங்கேஷை கொலை செய்யும் தைரியம் யாருக்கும் வந்திருக்காது என்று மட்டுமே தான் கூறியதாக விளக்கமளித்துள்ளார். மேலும் தான் கெளரி லங்கேஷின் கொலைக்கு கண்டனத்தை தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

கெளரி லங்கேஷ் கொலை குறித்து விசாரித்து குற்றவாளிகளை பிடிக்க 21 நபர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொலையை செய்த குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்றும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

Comments are closed.