ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. குறித்து ஃபேஸ்புக்கில் பதிவு செய்ததால் இளைஞர் மீது தேசவிரோத வழக்கு

0

சண்டிகார்: ரோஹ்டக் காவல்துறையினர் சுரேந்தர் துஹான் என்ற இளைஞர் மீது அவர் ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ.க அரசு குறித்து பதிவுகளை ஃபேஸ்புக் தளத்தில் பதிவு செய்ததற்காக தேச விரோத வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ரகசிய புகாரின் அடிப்படையில் சுரேந்தர் துஹானின் ஃபேஸ்புக் பக்கம் சைபர் செல் காவல்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வந்ததாகவும், இதில் அவர் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க அமைப்புகளையும் அதன் தலைவர்களையும் இழிவு படுத்தியதோடு, தனி மனிதனின் உணர்வுகளை புண்படுத்துவது மூலம் சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த முயன்றதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனையடுத்து இந்த அந்த ஃபேஸ்புக் கணக்குக்கு சொந்தக்காரர் யார் என்பது குறித்த விசாரணையை சைபர் செல் நடத்தியது என்று கூறப்படுகிறது. அந்த விசாரணையில் இந்த ஃபேஸ்புக் கணக்கு திறக்க பயன்படுத்தப்பட்ட அலைபேசி என்னை கண்டறிந்ததாகவும், அந்த எண் ரோஹ்டக் இல் உள்ள ஜஸ்பிர் காலனியில் வசிக்கும் சுரேந்தர் துஹான் என்பவருடையது என்று கண்டரிந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சுரேந்தர் துஹான் மீது தேச விரோத வழக்கோடு ஐ.டி. பிரிவுகளிலும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் சுரேந்தர் துஹானின் ஃபேஸ்புக் கணக்கை முடக்க வேண்டும் என்றும் அந்த கணக்கில் உள்ள தகவல்களை விசாரணைக்காக பாதுகாக்கும்படியும் ஃபேஸ்புக்கிற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சுரேந்திர துஹான் செய்த குற்றமாக, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க வில் உள்ளவர்களை (பிராமணர்களை) பாண்டா என்று அழைத்ததாகவும், இன்னும் கீழ்த்தரமாக குறிப்பிட்டதாகவும் கூறப்படுகிறது.

Comments are closed.