ஆர்.எஸ்.எஸ்.ஸின் செயல் திட்டங்களுக்கு அடிபணிகிறதா நீதிமன்றம்?

0

ஆர்.எஸ்.எஸ்.ஸின் செயல் திட்டங்களுக்கு அடிபணிகிறதா நீதிமன்றம்?

‘‘சில நபர்களால் மட்டும் கையாளப்படக்கூடியதல்ல அதிகாரம். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும்போது அதனை தடுப்பதற்கான ஆற்றலை அனைவரும் பெறுவதே உண்மையான சுயராஜ்ஜியம்” – உலகிற்கு இந்த தத்துவத்தை கற்றுக்கொடுத்த காந்தியடிகளின் 150-ஆம் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் முந்தைய தினத்தில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு குடிமக்களின் சுதந்திரம் குறித்த முக்கியத்துவம் வாய்ந்த கருத்தினை தெரிவித்தது. ஜம்மு-கஷ்மீரில் ஊடகங்களுக்கும், தகவல்-தொடர்புகளுக்கும் தடை விதித்த அரசின் நடவடிக்கையை குறித்து கேள்வி எழுப்பி தாக்கல் செய்த மனுக்கள் தொடர்பான விசாரணையின்போது நீதிபதி பி.ஆர்.கவாய் இவ்வாறு கூறினார், ‘‘தனி நபர் சுதந்திரம் என்பது தேசப்பாதுகாப்பை சார்ந்திருக்கிறது. தனி நபர் சுதந்திரமும், தேச பாதுகாப்பும் இணைந்து செல்லவேண்டும்”.

அதாவது குடிமக்களுக்கு அரசியல் சாசனம் உறுதியளிக்கும் தனி நபர் சுதந்திரத்தின் மீது கைவைக்க தேசப்பாதுகாப்பின் பெயரால் அரசுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜம்மு-கஷ்மீரில் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட ஆகஸ்டு 5-ஆம் தேதிக்கு பிறகு, அங்கு மத்திய அரசு நடைமுறைப்படுத்திய அரசு பயங்கரவாதங்களை நியாயப்படுத்துவதற்காக மோடி அரசு பொய்களையும், போலியான செய்திகளையும் பரப்புரைச் செய்யும்போது குடிமக்களின் சுதந்திரத்தை பாதுகாக்கவேண்டிய உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடு குடிமக்களின் கடைசி நம்பிக்கையையும் தகர்க்கும் வகையில் அமைந்துள்ளதாக பெரும்பாலானோர் கவலை அடைந்துள்ளனர்.

குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144-வது பிரிவு தவறாக பயன்படுத்தப்படுவது, குடியுரிமை மீறல்கள், முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்பட நாலாயிரம் பேர் சிறைகளிலும், வீடுகளிலும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு துன்புறுத்தப்படும்போது அதிலெல்லாம் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதை குறித்து கவலைப்படாத உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடு விவாதத்திற்குரியதாகும்.

ஜம்மு-கஷ்மீர் உயர்நீதிமன்றத்தில் இரண்டு அமர்வுகளிடம் 250க்கும் மேற்பட்ட ஆள்கொணர்வு மனுக்கள் குவிந்து கிடக்கின்றன. அனைத்து வழக்குகளையும் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் நடவடிக்கை நீதித்துறை வட்டாரங்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜம்மு-கஷ்மீர் மறு சீரமைப்பு சட்டத்தின் அரசியல் சாசன ஏற்புடைமை குறித்து கேள்வி எழுப்பிய மனுக்களையும், தனி நபர் சுதந்திரத்தை மீண்டும் நிலை நாட்டுவதற்கான ரிட் மனுக்களையும், ஒரே இனத்தில் உட்படுத்தி, நீதிமன்றமே நீதியை மறுக்கும் நிலையை நாம் இதுவரை கண்டதில்லை.

கஷ்மீரின் தன்னாட்சியை ரத்து செய்த சட்டத்தின் அரசியல் சாசன ஏற்புடைமை குறித்து கேள்வி எழுப்பிய ரிட் மனுக்கள் உச்சநீதிமன்றத்திற்கு முதலாவதாக வந்தபோது மத்திய அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப தலைமை நீதிபதி உள்ளிட்ட ஐந்து நீதிபதிகளை கொண்ட அமர்வு உத்தரவிட்டது. அப்பொழுது அட்டர்னி ஜெனரலும், சோலிசிட்டர் ஜெனரலும் இணைந்து எல்லைக்கப்பால் இருந்து வரும் எதிர்வினைகளை காட்டி பயமுறுத்தி அந்த உத்தரவை எதிர்த்தனர். இந்துத்துவாவினரின் குறுகிய திட்டங்களுக்கு நாடு முழுவதும் அடிபணிய வேண்டும்; நீதிமன்றங்கள் கூட நீதியின் அருகில் சென்று விடக்கூடாது என்ற தீய எண்ணம் உச்சநீதிமன்றத்தை கூட ஆட்டிப்படைக்கிறது என்பதைத்தான் இவை தெளிவுப்படுத்துகின்றன.

தீவிர தேசிய வெறியை ஆயுதமாக எடுத்துக்கொண்டு ஆர்.எஸ்.எஸ். நடத்தி வரும் சிறுபான்மையினருக்கு எதிரான கொடுமைகளை தடுக்காமல் நீதிமன்றம் அவர்களுக்கு அடிபணிந்தால் இந்த தேசம் முன்னெப்போதும் இல்லாத ஆபத்தில் தள்ளப்படும் என்பது உறுதி.

Comments are closed.