ஆளும்கட்சிக்கு ஆதரவு: தேர்தல் ஆணையர்களுக்குள் முரண்பாடு!

0

தேர்தல் ஆணையர் அசோக் லவசாவின் கருத்துகள் ஏற்கப்படுவதில்லை என்பதால் தேர்தல் ஆணையம் தொடர்பான கூட்டங்களில் அவர் பங்கேற்பதில்லை என தகவல் வெளியாகியுள்ளன.

இந்தியத் தேர்தல் ஆணையம் 3 தேர்தல் ஆணையர்களை கொண்டுள்ளது. சுனில் அரோரா தலைமைத் தேர்தல் ஆணையராகவும், அசோக் லவசா மற்றும் சுசில் சந்த்ரா தேர்தல் ஆணையர்களாகவும் உள்ளனர். இவர்களில், அசோக் லவசா தன்னுடைய கருத்துகளைப் புறக்கணிப்பதால் இனி தான் தேர்தல் ஆணையம் தொடர்பான கூட்டங்களில் பங்கேற்கப்போவதில்லை என தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு மே 4ஆம் தேதி கடிதம் அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா மீதான தேர்தல் நடத்தை விதிமீறல் புகாரில் தன் முடிவுகள் ஏற்கப்படவில்லை என்பதே இவருடைய இம்முடிவுக்கு காரணமாக உள்ளது. அவர் சுனில் அரோராவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “பிரதமர் மோடியின் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான 6 புகார்களில் 4ல் தேர்தல் விதிமீறல் நடந்ததை நான் உறுதி செய்தேன். ஆனால் என்னுடைய முடிவு பதிவு செய்யப்படாமல் 2:1 என்ற விகிதத்தில் மோடியின் மீதான புகார் தள்ளுபடி செய்யப்பட்டது. அதேபோல அமித்ஷா மீதான அனைத்துப் புகார்களிலும் தேர்தல் நடத்தை விதிமீறல் இருப்பதை உறுதிப்படுத்தினேன். அதுவும் ஏற்கப்படவில்லை. 3 பேர் கொண்ட இந்த ஆணையத்தில் சிறுபான்மை முடிவுகள் ஏற்கப்படுவதில்லை. இந்த ஆணையத்தில் நான் இருப்பது அர்த்தமற்றதாக உள்ளது. எனவே இனி தேர்தல் ஆணையம் தொடர்பான கூட்டங்களில் பங்கேற்கப்போவதில்லை” என்று கூறியுள்ளார்.

இந்தக் கடிதம் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு கிடைத்தவுடன் அசோக் லவசாவை அழைத்துப் பேசியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ”மத்தியஸ்தப் பணிகளில் மட்டுமே தேர்தல் ஆணையத்தின் சிறுபான்மை கருத்துகள் பதிவு செய்யப்படும். தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்களில் சிறுபான்மை கருத்துகளை பதிவு செய்ய வேண்டிய தேவையில்லை” என்று அவர் அசோக் லவசாவிடம் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வரும் வேளையில், தேர்தல் ஆணையத்துக்கு உள்ளேயே எழுந்துள்ள இக்கருத்து முரண்பாடு பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Comments are closed.