ஆழ்வாரில் பசுவின் பெயரால் மீண்டும் ஒரு கொலை 

0

ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வாரில் பால் பண்ணை உரிமையாளர் பெஹ்லு கான் பசு பாதுகாவலர்கள் என்ற பசு பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு இன்னும் நீதி கிடைக்காத நிலையில் தற்போது மேலும் இரண்டு முஸ்லிம்கள் மீது பசு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பசு பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உமர் என்பவர் உயிரிழந்துள்ளார்.

உமர் உடன் சென்ற தாகிர் என்பவர் பலத்த காயங்களுடன் ஹரியானாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். உமரின் உடல் ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை ஆழ்வாரில் இருந்து பாரத்பூர் மாவட்டத்தில் உள்ள காத்மிகா கிராமத்திற்கு தங்கள் வாகனங்களில் பசுக்களை ஏற்றிச் சென்ற இவர்கள் மீது பசு பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மியோ சமூக மக்கள், இது வலது சாரி இந்து அமைப்புக்களும் காவல்துறையும் கூட்டாக நடத்திய தாக்குதல் என்றும் இந்த கொலை தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

இதே ஆழ்வாரில் கடந்த மாதம் முஸ்லிம் குடும்பம் ஒன்றிற்கு சொந்தமான 51  பசுக்களை பசு பயங்கரவாதிகள் அவர்களிடம் இருந்து பிடுங்கி கோசாலை ஒன்றிற்கு தானமாக கொடுத்துள்ளனர். பின்னர் மாவட்ட நிர்வாகத்தின் தலையீடு மட்டும் விசாரணைக்குப் பிறகு அந்த பசுக்கள் முஸ்லிம் குடும்பத்திற்கு சொந்தமானது என்று நிரூபிக்கப்பட்டு அவர்களிடம் திருப்பி வழங்கப்பட்டது. பெஹ்லு கான் கொலை வழக்கில் மரண வாக்குமூலத்தில் பெயர் குறிப்பிடப்பட்ட நபர்களை கூட காவல்துறை தப்ப வைக்க முயலும் நிலையில் (பார்க்க செய்திகள்) இது போன்ற சம்பவங்கள் அங்கு நடப்பதை கட்டுப்படுத்துவது இயலாத காரியம்.

Comments are closed.