ஆழ்வாரில் பசுவின் பெயரால் தொடரும் கொலை

0

ஆழ்வாரில் பசுவின் பெயரால் தொடரும் கொலை

ராஜ்ஸ்தான் மாநிலம் ஆழ்வார் பகுதியில் பசு கடத்தலில் ஈடுபட்டதாக கூறி 31 வயது நபரை பசு பயங்கரவாதிகள் அடித்து கொலை செய்துள்ளனர்.

நாட்டில் தொடர் கதையாகி வரும் இத்தகைய கொலைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் தடுக்க தவறிவருவதை உச்ச நீதிமன்றம் கண்டித்த நான்கு நாட்களில் இந்த படுகொலை நடைபெற்றுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஹரியானாவின் மீவட் பகுதியில் உள்ள கொல் கிராமத்தை சேர்ந்த ரக்பர் கான் மற்றும் அஸ்லம் ஆகிய இருவர் தங்களின் பசுக்களை மேய்த்துக்கொண்டு சென்றுள்ளனர். அப்போது ஆழ்வாரில் உள்ள லாலாவண்டி கிராமத்தில் வைத்து அவர்களை ஒரு கும்பல் வழிமறித்து தாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் கானிற்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. அஸ்லம் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார் என்று ஆழ்வார் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் அனில் பெணிவாள் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்த போது கான் இரண்டு பசுக்களின் அருகே சகதியில் படுகாயமுற்ற நிலையில் கிடந்துள்ளார்.

அவர் மருத்துவமனை எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார் என்று மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் உயிரிழந்த ரக்பர் கானின் உடலை டில்லி ஆழ்வார் நெடுஞ்சாலையில் வைத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ரக்பர் கானை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் இறந்தவரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த கொலையில் ஈடுபட்டவர்களில் தர்மேந்திர யாதவ் மற்றும் பரம்ஜீத் சர்தார் ஆகிய இருவரை அப்பகுதி மக்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல்துறை கைது செய்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அப்பகுதியை சேர்ந்த ஒருவர், இந்த இருவரும் அப்பகுதி சிவசேனா அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்று தெரிவித்துள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று காவல்துறை ஐஜி தெரிவித்துள்ளார்.

இந்த கொலைக்கு பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி தலைவரும் ராஜ்ஸ்தானின் முன்னாள் முதல்வருமான அஷோக் ஜிலாத், இந்த கொலையை வன்மையாக கண்டித்துள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களில் வெறும் சந்தேகத்தின் பேரில் மக்கள் அடித்துக் கொல்லப்படுவது வழக்கமாகி வருகிறது என்று ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மத்திய அமைச்சரும் மூத்த பாஜக தலைவருமான அர்ஜூன் ராம் மேக்வால், இது போன்ற சம்பவங்கள் நரேந்திர மோடியின் புகழினால் ஏற்படுபவை என்றும் அவரது புகழ் அதிகமாக அதிகமாக இது போன்ற சம்பவங்களும் அதிகமாகும் என்று கூறியது சர்ச்சையை கிளப்பியது.

Comments are closed.