ஆழ்வார் பசுக்கொலை நடந்து ஒருமாதத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் பேரணி

0

பசுவை கடத்தியதாக கூறப்பட்டு பசு பாதுகாவல் கும்பலால் பால் வியாபாரி பெஹ்லு கான் அடித்துக் கொல்லப்பட்டு ஒரு மாதம் ஆக இருக்கிற நிலையில் அவரது கொலைக்கு நீதி கேட்டு மியோ பஞ்சாயத்தினர் பேரணி நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரியுள்ளனர். அதே நேரம் பசு பாதுகாவல் கும்பலுக்கு ஆதரவு கோரி சிவ சேனா கட்சியும் அதே நாளில் பேரணி நடத்த உள்ளதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த இரு குழுவிற்கும் இதுவரை பேரணி நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெஹ்லு கான் கொலைக்கு நீதி கேட்டு அமைத்தி பேரணி ஒன்றை ஆழ்வார் மாவட்ட தலைமையகத்தில் இருந்து பெஹ்ரோர் வரை நடத்த ஷேர் முஹம்மத் தலைமையிலான மியோ பஞ்சாயத்தினர் அனுமதி கோரியுள்ளனர். இந்த இடத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் தான் பெஹ்லு கான் பசு பாதுகாவல் குண்டர்களால் கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி தாக்கப்பட்டார். இந்த தாக்குதலில் ஏற்பட்ட காயங்களினால் எப்ரல் 3 ஆம் தேதி அவர் உயிரிழந்தார்.

இந்த பேரணி குறித்து ஷேர் முஹம்மத் கூறுகையில், “எங்களது பேரணி அமைதிக்கானதும், சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க நடத்தப்படுவதுமாகும். பெஹ்லு கானின் கொலைக்கு நீதி கேட்டு தற்போது ஒரு மாதகாலம் ஆகிறது” என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால் இவர்களது இந்த பேரணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிவ சேனாவும் அதே பகுதியில் பேரணியை அறிவித்துள்ளது என்றும் இந்த இரு பேரணிகளுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் மாவட்ட ஆட்சியர் முக்தானத் அகர்வால் தெரிவித்துள்ளார்.

தங்களின் இந்த முயற்ச்சியை சிதைக்க நினைக்கும் சிவ சேனா குறித்து ஷேர் முஹம்மத் கூறுகையில், “எங்களது இந்த பேரணி அமைதிக்கானது, ஆனால் சிவ சேனா இந்த முயற்சியை சேதப்படுத்த பசு பாதுகாவல் கும்பலுக்கு ஆதரவாக பேரணியை அறிவித்துள்ளது” என்று கூறியுள்ளார். இவரது கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் இவர்கள் அறிவித்த இடம் வழியாகவும், மியோ பஞ்சாயத்தினர் பேரணி அறிவித்த அதே நேரத்திலும் சிவ சேனா தங்களது பேரணிக்கு அனுமதி கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சிவ சேனா கட்சியின் மாநில தலைவர் ராஜ்குமார் கோயல் கூறுகையில், “மியோ பஞ்சாயத்தினருக்கு பேரணிக்கான அனுமதி வழங்கப்பட்டால் நாங்களும் எங்களது பேரணியை நடத்துவோம் என்று நாங்கள் மாவட்ட ஆட்சியரிடம் கூறிவிட்டோம்.” என்று கூறியுள்ளார்.

மேலும், “உள்துறை அமைச்சரே பெஹ்லு கானை ஒரு கடத்தல்காரர் என்று கூறியுள்ளார். அப்படியிருக்க அவருக்கு ஆதரவாக பேரணி நடத்தி ஆழ்வார் சூழ்நிலையை ஏன் அவர்கள் மோசமாக்க வேண்டும்? மே 3 க்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்யத் தொடங்கிவிட்டோம். அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டால், 2000 பேர் கொண்ட சிவ சேனாவின் பேரணியும் கண்டிப்பாக நடைபெறும்.” என்று அவர் கூறியுள்ளார்.

Comments are closed.