இசை முரசு’ நாகூர் ஹனீபா மரணம்!

0

பிரபல பாடகர் நாகூர் இ.எம்.ஹனீபா இன்று(08.04.2015) உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் மரணம் நிகழ்ந்தது.அவருக்கு வயது 90. இராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டினத்தில் 1925 டிசம்பர் 25 ஆம் நாள் முஹம்மது இஸ்மாயில் மரியம் பீவி தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார் நாகூர் ஹனீபா. இஸ்மாயில் முஹம்மது ஹனீபா என்பது இயற்பெயர். அப்பெயரைச் சுருக்கி இ.எம்.ஹனீபா என்று அழைக்கப்பட்டார். தந்தையின் பூர்வீகம் நாகூர் என்பதால் பெயரோடு நாகூரும் சேர்ந்து கொண்டது. இசை உலகில் பிரபலமானவுடன் ‘இசைமுரசு’ எனும் அடைமொழியும் அப்பெயரோடு இணைந்தது. சிறு வயதிலிருந்தே ஹனீபா பாடத் தொடங்கி விட்டார்.

1941 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம் தேரிழந்தூரில் ஒரு திருமண நிகழ்வில் இசைக்கச்சேரி செய்ய ஹனீபாவுக்கு வாய்ப்புக் கிடைத்தது. வெளியூர் சென்று இசைக் குழுவினருடன் ஹனீபா செய்த முதல் கச்சேரி அது. முறையாகப் பணம் பெற்றுக்கொண்டு செய்த கச்சேரியும் அதுவே.

ஹனீபா முறையாக சங்கீதம் கற்றவர் அல்லர். அவரது எடுப்பான குரல் இயற்கையாகவே அமைந்தது. 1954 இல் அவரது பாடல்கள் இசைத் தட்டில் பதிவாயின.
ஹனீபா ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். பல்லாயிரக்கணக்கான இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். சில திரைப்பட பாடல்களையும் பாடியுள்ளார்.

1940களில் தொடங்கி 2006 வரை சுமார் 65 ஆண்டுகள் தொடர்ச்சியாகக் கச்சேரிகள் செய்துள்ளார். எந்த இசைக் கலைஞரும் செய்யாத அரிய சாதனை இது. உலக நாடுகள் பலவற்றிலும் ஹனீபாவின் இசை முழக்கம் அரங்கேறியுள்ளது. ஹனீபா பாடிய பாடலான ‘இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை’ என்ற பாடல் முஸ்லிம்கள் மட்டுமின்றி இதர மதத்தவர்களின் வீடுகளிலும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

திராவிட முன்னேற்றக்கழகத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர். பல கட்சிப் பாடல்களையும் பாடியுள்ளார்.காயிதே மில்லத் இஸ்மாயீல் சாஹிப், பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் நேசத்திற்குரியவர்.

Comments are closed.