இணையதள நாட்டாமையாக மாறி வரும் ஃபேஸ்புக்

0

இணையதளம் என்றாலே எந்தவித அரசு தலையீடும் இல்லாமல் சுதந்திரமாக செயல்படும் ஒரு ஊடகம் என்ற நிலை தற்பொழுது மாறி வருகிறது. பெரும்பாலான ஊடகங்கள் ஏதாவது ஒரு சார்புநிலையை பின்பற்றி வரும் இந்நாட்களில் இணையம் ஒன்றே அனைத்து தரப்பு மக்களின் குரலுக்கும் சம உரிமை கொடுக்கின்றது. பொழுதுபோக்கிற்காக கண்டுபிடிக்கப்பட்டது என்றாலும் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஃபேஸ்புக் போன்ற இணையதளங்களின் பங்கு அதீதமானது. ஆனால், இந்த ஃபேஸ்புக் போன்ற தளங்களும் தற்பொழுது இணைய நாட்டாமைகளாக மாறி வருகின்றன.

அரபு வசந்தத்திற்கு பெருவாரியாக வலுசேர்த்தது ஃபேஸ்புக்தான் என்றால் அது மிகையாகாது. ஒரு அரசாங்கத்தையே கவிழ்த்துவிடும் ஆற்றல் பெற்றது ஃபேஸ்புக் என்று அப்பொழுது எந்த அரசும் நினைத்துப் பார்க்கவில்லை. ஆனால், அந்த அரபு வசந்தத்தின் பின் ஃபேஸ்புக்கை ஒவ்வொரு அரசாங்கமும் கவனிக்கத் தொடங்கியது. ஃபேஸ்புக்கும் அதனை நன்றாக பயன்படுத்திக் கொண்டது. சார்புநிலை அல்லாத இணையதளம் என்ற நிலை மாறி அரசியல் ஆதாயம் தேட ஆரம்பித்தது ஃபேஸ்புக்.

facebook security checkஃபேஸ்புக்கின் சார்புநிலைக்கு தற்போதைய எடுத்துக்காட்டு பாரிஸ் குண்டு வெடிப்பும் பெய்ரூத் குண்டுவெடிப்பும். இந்த இரண்டிலுமே பலியானது அப்பாவி உயிர்கள். இரண்டிலும் உயிர்ச்சேதம் மிக அதிகம். ஆனால், பாரிஸ் தாக்குதலுக்கு பலியானவர்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் பிரான்ஸ் நாட்டு கொடியை அறிமுகப்படுத்தியது, தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கான பாதுகாப்பு சோதனை செயலியை அறிமுகம் செய்தது போன்ற எதுவுமே அதற்கு ஒரு நாள் முன் நடந்த பெய்ரூத் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்காக செய்யப்படவில்லை.
பாதுகாப்பு செயலி மூலம் பாதிக்கப்பட்ட இடத்தில் உள்ள ஒருவரின் நிலையை ஃபேஸ்புக் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். (இருவரும் ஃபேஸ்புக் உபயோகிப்பவர்களாக இருக்கும் பட்சத்தில்) இதனை பலர் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பர்கிடமே கேட்டும் விட்டனர். உடனே இனிமேல் இதுபோன்ற அசம்பாவிதங்கள் எங்கு நடந்தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஃபேஸ்புக் குரல் கொடுக்கும் என்று கூறியிருந்தார். நைஜீரியாவில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு பாரிஸை போல் பாதுகாப்பு செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவும் கூட ஒரு கண்துடைப்பு என்றே கூற வேண்டும். இத்தனை காலம் குண்டு மழைக்கு நடுவில் வாழ்க்கை நடத்திவரும் ஃபலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இதுவரை வாய் திறக்கவில்லை ஃபேஸ்புக். மாறாக, அந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு எதிரான செய்திகளை முடக்கிக் கொண்டிருக்கிறது.

மில்லிகெசட் பத்திரிகையின் ஃபேஸ்புக் பக்கத்தில் அரபு நியூஸ் செய்தி தளத்தில் வெளியான World Must Act to Halt Israeli Aggression என்ற தலைப்பிட்ட ஒரு செய்தியை அந்த பக்கத்தின் அட்மின் பகிர முயன்றுள்ளார். ஆனால், அவரால் அந்த செய்தியை பகிர முடியவில்லை. மேலும், அவரின் நண்பர்களுக்கு மெசேஜ் செய்ய முயன்ற போதும் ஃபேஸ்புக் அதனையும் தடுத்துவிட்டது. இதை இச்ணூச்திச்ணஞீச்டிடூதூ.ஞிணிட் என்ற இணையதளம் இஸ்ரேலின் மக்கள் தொடர்பு சாதனமாக ஃபேஸ்புக் செயல்படுகிறதா என்று கடுமையாக சாடி செய்தி வெளியிட்டது. ஃபேஸ்புக்கின் இந்த சார்பு நிலை புதிதல்ல என்றாலும், அதன் தாக்கம் இந்திய துணைக்கண்டம் வரை நீண்டுள்ளது நம்மை கவலையடையச் செய்துள்ளது. குறிப்பாக, இந்திய அரசு ஃபேஸ்புக்குடன் காட்டும் நெருக்கம் கவனிக்கப்பட வேண்டியது.

மோடி ஃபேஸ்புக்கின் தலைமை அலுவலகத்திற்கு செல்வதையும் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் இந்தியா வருவதையும் சாதாரண நிகழ்வுகளாக எடுத்துக் கொள்ள முடியாது. இந்த வருகைகளில் பல அரசியல்களும் ஆதாயங்களும் சூழ்ந்திருப்பது தற்பொழுது தெளிவாகிக் கொண்டிருக்கிறது. ஃபேஸ்புக் தனது ‘ஸ்பாம் ஃபில்டர்’ மூலம் மோடியின் இமேஜை குறைப்பது தொடர்பான பதிவுகளை தடுத்து வருகிறது. இதன்மூலம் மோடி குறித்த செய்திகள் வடிகட்டப்படுகின்றன. இதனை இப்போது பலர் உணர்ந்து வருகிறார்கள்.

கடந்த செப்டம்பர் 2015 ஷஷான்க் பெங்காலி லாஸ் ஏன்ஜெல் டைம்ஸ் பத்திரிகையில் மோடியை விமர்சித்து எழுதிய கட்டுரை ஒன்றை ஃபேஸ்புக் தடுத்துள்ளது. இந்த கட்டுரை முன்னாள் காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட் பற்றிய கட்டுரை ஆகும். இதே ஆசிரியர் மோடியை புகழ்ந்தும் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். ஆனால், அவரது இந்த கட்டுரையை பிறருக்கு பகிர பல கட்டுப்பாடுகளையும், பகிரப்பட்ட பதிவை ஆபத்தானது என்று ஃபேஸ்புக் வகைப்படுத்தி இருக்கிறது.

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பார்க் உடன் பிரதமர் மோடி
ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பார்க் உடன் பிரதமர் மோடி

மற்றொரு நிகழ்வில் மோடியின் லண்டன் பயணத்தை குறித்த ஒரு பதிவு தனது டைம்லைனில் இருந்து மாயமாகி விட்டது என பலரும் புகார் அளித்துள்ளனர். ஆனால், இதனை மறுத்துள்ளது ஃபேஸ்புக். மோடியின் செப்டம்பர் மாத ஃபேஸ்புக் அலுவலக பயணத்திற்கு பிறகு இதுபோன்ற நிகழ்வுகள் ஃபேஸ்புக் மீதான சந்தேகங்களை வலுக்கச் செய்கின்றன. When Mr.Modi went to London என்ற சட்யப்ரடா பால் எழுதிய கட்டுரையை கிட்டத்தட்ட ஆயிரம் நபர்களுக்கு மேல் தங்கள் பக்கங்களில் பகிர்ந்திருந்தனர். ஃபேஸ்புக் இந்த பதிவையும் நீக்கியது. கஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா இந்த பதிவு உங்களை எவ்வாறு பாதித்துள்ளது என்று ஃபேஸ்புக்கிடமே கேட்கும் அளவிற்கு ஃபேஸ்புக்கின் இன்றைய நிலை இருக்கின்றது.

அமெரிக்காவை மையமாக வைத்து இயங்கும் Sikh for Justice என்ற அமைப்பு இந்தியாவில் நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் குறிப்பாக, குஜராத்தில் 2002ல் நடத்தப்பட்ட இனப்படுகொலைகளுக்கு எதிராகவும் குரல் எழுப்பி வருகிறது. தற்பொழுது இந்த அமைப்பின் ஃபேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டு விட்டது. இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்த அந்த அமைப்பு ஃபேஸ்புக் இந்திய அரசுக்கு அடிபணிந்து கருத்துரிமைகளை முடக்க நினைக்கிறது என்று கூறியுள்ளது. நீதிமன்றத்தில் ஃபேஸ்புக் இந்தப் பக்கத்தை முடக்கியது சரியே என்று வாதிட்டு வெற்றியும் கண்டுள்ளது. எப்படியானாலும் நீதி கிடைக்காமல் விடப்போவதில்லை என்று Sikh for Justice அமைப்பு அமெரிக்க உயர்நீதிமன்றத்தை நாட உள்ளது. இதே அமைப்பின் இணையதளத்தை இந்திய அரசு முடக்க ஆலோசித்து வருவது ஃபேஸ்புக் மற்றும் இந்திய அரசிற்கு இடையேயான புரிந்துணர்வை வெளிப்படுத்துகிறது.

2015ல் இந்திய அரசு 15,155 பதிவுகளை நீக்க கோரியிருந்ததாக ஃபேஸ்புக்கே அறிவித் துள்ளது. அத்துடன் ஃபேஸ்புக் கணக்குகளின் IP முகவரி உள்ளிட்ட பயனர்களின் தகவல்களையும்
அரசாங்கம் கேட்டுள்ளதாகவும் அது தெரிவித் துள்ளது.

இதுபோன்ற செய்திகளை வெறும் பதிவுகளையும் பக்கங்களையும் அழித்தல் என்று மட்டுமே எடுத்துக் கொள்ள முடியாது. 2015 டிசம்பரில் இந்தியா இரண்டாவது பெரிய இணையதள பயனாளர்கள் தளமாக உருவெடுக்கும் என்று Internet and Mobile Association of India (IAMAI) and IMRB
International அறிவித்துள்ளன. இத்துடன் ஃபேஸ்புக் இந்தியாவில் அறிமுகப்படுத்திய Internet.org யையும் இணைத்து பார்த்தால் ஃபேஸ்புக்கின் வியாபார உள்ளர்த்தங்கள் பல புரியவரும்.
இணையதளம் என்பது ஒவ்வொரு மக்களின் அடிப்படை உரிமை, அது இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்ற போர்வையில் ஃபேஸ்புக் ரிலையன்ஸ் தொலைத்தொடர்புடன் இணைந்து Internet.org யை அறிமுகம் செய்தது. இதன்மூலம் குறிப்பிட்ட சில இணையதளங்களை மட்டுமே மக்களால் பார்வையிட முடியும். எந்த செய்தி தளத்தின் செய்தியை வாசிக்க வேண்டும் என்பது தொடங்கி அனைத்திலும் ஃபேஸ்புக்கின் தலையீடு இருக்கும். உண்மையான சுதந்திரமான இணையதள சேவையின் விலை அதிகரிக்கப்படும். இதேபோல, ஏர்டெல் நிறுவனம் முன்னெடுத்த ஒரு முயற்சி இணையதள பயனாளர்களின் கடும் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது. ஆகவே, தற்பொழுது தன்னுடைய காய்களை மிகவும் கவனமாக நகர்த்தி வருகிறது ஃபேஸ்புக்.
402 மில்லியன் பயனாளர்களை கொண்ட ஒரு நாட்டில், அதுவும் இலவசங்களை விரும்புபவர்கள் அதிகம் இருக்கும் ஒரு நாட்டில் இணையதளத்தை இலவசமாக வழங்குவோம் என்றால் அந்த நிறுவனம் சாமானியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெரும். ஆனால், இதற்கு அவர்கள் விலையாய் கொடுக்கப்போவது இணையதள சுதந்திரத்தை.

வெறும் ஃபேஸ்புக் என்ற தளத்திலேயே இவ்வளவு அடக்குமுறைகளை செய்ய முடியும் என்றால், இந்த internet.org திட்டத்தில் ஃபேஸ்புக் வெற்றி கண்டுவிட்டால் விளைவு மிகவும் மோசமானதாக இருக்கும்.

பொதுவாக, இணையதளத்தில் எந்த ஒரு செய்தியையும் தணிக்கை செய்வது சாத்தியம் இல்லாத ஒன்று. ஆனால், இணைய பயனாளர்களில் பெரும்பான்மையாக இருக்கும் சாமானியர்களின் பார்வையில் என்ன பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியை ஒரு குறிப்பிட்ட நிறுவனமோ அரசோ பெற்றுவிட்டாலே அது கருத்துரிமைக்கு மிகப்பெரிய தோல்விதான். இந்த நிலை நீடித்தால் தகவல் களஞ்சியம் என்ற நிலை மாறி இந்த நூற்றாண்டின் இடியட் பாக்ஸாக கணினியும் மாறிவிடும்.

Comments are closed.