இந்தியாவில் இருந்து விடுதலை அல்ல இந்தியாவில் விடுதலை வேண்டும் – கன்னையா குமார்

0

தேச விரோத குற்றம் சாட்டி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட கன்னையா குமார் விடுதலை ஆனதை அடுத்து ஜவஹர்லால் பல்கலைகழக வளாகத்தில் மிகப்பெரிய மாணவ கூட்டத்தின் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர்  “எங்களுக்கு இந்தியாவிடமிருந்து விடுதலை வேண்டாம், இந்தியாவில் விடுதலை வேண்டும், இந்தியாவில் பரவியிருக்கும் ஊழலில் இருந்து விடுதலை வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

அவரது உரையில் மத்திய அரசியும் மோடியையும் தாக்கிய கண்ணைய குமார், மத்திய அரசு JNU மற்றும் JNU மாணவர்களை குறிவைப்பது ஏனென்றால் அவர்கள் OCCUPY UGC இயக்கத்தினை நடத்தியதாலும் ஹைதராபாத் பல்கலைகழக மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலைக்கு நீதி கேட்டதாலும் தான் என்று கூறியுள்ளார்.

மேலும் JNU மீதான இந்த தாக்குதல் திட்டமிடப்பட்டது என்றும் ரோஹித் வெமுலாவிற்கு ஆதரவான போராட்டங்களை நீர்த்துப் போக செய்யவே அவர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டனர் என்றும் கூறியுள்ளார்.

மோடியை குறித்து அவர் கூறுகையில் “நான் கிராமத்தை சேர்ந்தவன். எங்கள் ஊரில் மந்திர வித்தை காட்டுபவர்கள் உண்டு. அவர்கள் மந்திரங்களை காட்டி ஆசைகளை நிறைவேற்றக்கூடியது என்று கூறி மோதிரங்களை விற்பார்கள். நம் நாட்டிலும் அப்படியான நபர்கள் இருக்கிறார்கள், அவர்கள் கருப்புப் பணத்தை திரும்ப கொண்டு வருவோம் என்றும் அனைவருக்கும் முன்னேற்றம் என்றும் கூறிக்கொண்டு இருக்கிறார்கள் ” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் ” இந்தியர்களாகிய நாம் அனைத்தையும் எளிதில் மறக்கக் கூடியவர்கள். ஆனால் இந்த முறை நடத்தப்பட்ட நாடகங்கள் எவ்வளவு பெரியது என்றால் தேர்தல் நேரத்தில் அவர்கள் பயன்படுத்திய ஜூம்லாக்களை எல்லாம் இன்னும் நியாபகம் வைத்துள்ளோம். அரசுக்கு எதிராக நீங்கள் பேசினால் அவர்களது சைபர் செல் உங்களுக்கு எதிராக போலி வீடியோக்களை வெளியிடும், உங்கள் விடுதிகளில் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளின் எண்ணிக்கையை எண்ணுவார்கள். இத்தகைய கொள்கைக்கு எதிராக 69% மக்கள் இந்த நாட்டில் வாக்களித்தனர். இவர்களின் ஜூம்லாக்களில் ஏமாந்தவர்கள் வெறும் 31% பேர் தான்.” என்று கூறியுள்ளார்.

விடுதலை என்ற வார்த்தைக்காக கைது செய்யப்பட்ட அவர் அந்த விடுதலைக்கு அர்த்தம் கூறிய பொழுது, “இந்த தேசத்திற்கு நான் ஒன்ற கூற விரும்புகிறேன். அது நாங்கள் கேட்கும் விடுதலை என்ன என்பதை பற்றி. எங்களுக்கு முதலாளித்துவத்தில் இருந்து விடுதலை வேண்டும், பிராமணியத்தில் இருந்து விடுதலை வேண்டும், சாதியத்தில் இருந்து விடுதலை வேண்டும், இது தான் நாங்கள் கேட்கும் விடுதலை” என்று கூறியுள்ளார்.

“இது மிக பெரிய ஒரு போராட்டம், நாங்கள் தலை குனியாமல் போராடுவோம்” என்றும் அவர் கூறினார்.

மேலும் படிக்க: JNU

Comments are closed.