இந்தியாவில் முதன் முறையாக ஜார்கண்ட் மாநிலத்தில் 12 பசு பாதுகாவல் குண்டர்கள் கொலை குற்றவாளிகள் என்று தீர்ப்பு

0

இந்தியாவில் முதன் முறையாக ஜார்கண்ட் மாநிலத்தில் 12 பசு பாதுகாவல் குண்டர்கள் கொலை குற்றவாளிகள் என்று தீர்ப்பு

பசு பாதுகாப்பு என்கிற பெயரில் கடந்த வருடம் ஜூன் மாதம் 29 ஆம் தேதி ராம்கார்க் பகுதியில் வைத்து அஸ்கர் அன்சாரி என்ற அலிமுதீன் பசு பாதுகாவல் குண்டர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். நாட்டில் பசு பாதுகாப்பு என்கிற பெயரில் வன்முறைகளும் கொலை சம்பவங்களும் அதிகரித்த நிலையிலும் இந்த கொலைகளுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையிலும் இத்தகைய கொலைகள் ஏற்றுக்கொள்ள முடியாது என்று மோடி கருத்து தெரிவித்த நிலையில் அலிமுதீனின் கொலை நடைபெற்றது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்றத்தில் இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மொத்தம் 12 நபர்களில் 11 பேர் கொலை குற்றவாளிகள் என்று நிரூபணம் ஆகியுள்ளது. இவர்களில் 12 ஆம் நபர் சிறுவர் என்று கூறப்பட்ட நிலையில் அவர் 16 வயதை அடைந்தவர் என்பதால் தனது செயலின் தாக்கம் புரிந்து குற்றச் செயலில் அவர் ஈடுபட்டிருந்தால் அவரை வயது முதிர்ந்தவராக கருதலாம் என்று சட்ட திருத்தத்தை பயன்படுத்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

அலிமுதீன் கொலை முன் கூட்டிய திட்டமிடப்பட்டு நடைபெற்றது என்று தொடக்கம் முதலே சந்தேகங்கள் காவல்துறைக்கு இருந்தது. சம்பவத்தன்று அலிமுதீனை பசு பயங்கரவாதிகள் தாக்கியதோடு அவரது வாகனத்தையும் தீயிட்டு கொளுத்தினர். தகவல் அறிந்து வந்த காவல்துறை அதிகாரிகள் அலிமுதீனை வன்முறை கும்பலிடம் இருந்து மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தது. ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த தாக்குதலை தொடர்ந்து தனது கருத்தை தெரிவித்த காவல்துறை அதிகாரி R.K. மாலிக், “இது முன்பே திட்டமிடப்பட்ட கொலை” என்று கூறியிருந்தார். அலிமுதீனை கொலை செய்த கும்பல் அவருடன் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் என்று கண்டறியப்பட்டதாகவும் ஆனால் அலிமுதீன் மாட்டிறைச்சி வைத்திருந்தாரா என்பது குறித்து தகவல் ஏதும் இல்லை என்றும் அவர் அப்போது கூறியிருந்தார்.

இந்த கொலை தொடர்பாக ராம்கார்க் பகுதி பாஜக உறுப்பினரான நித்யானந் மஹ்தோ மற்றும் அப்பகுதி ABVP உறுப்பினரான ராஜேஷ் தாகூர் ஆகியோரை காவல்துறை கைது செய்தது குறிப்பிடத்தக்கது. வழக்கு விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் அப்பகுதி பாஜக தலைவர் மற்றும் காவ் ரக்ஷா சமிதி அமைப்பின் மூன்று உறுப்பினர்கள் உட்பட 11 இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 302இன் கீழ் குற்றவாளிகள் என்று நிரூபணம் ஆகியுள்ளது. மேலும் மூவர் மெது சதித்திட்டம் தீட்டுதல் என்ற குற்றப்பிரிவிலும் குற்றம் நிரூபணம் ஆகியுள்ளது.

தனது கணவர் கொல்லப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்த அலிமுதீனின் மனைவி மரியம் காத்தூன், இந்த கொலையில் பஜ்ரங்தள் உறுப்பினர்களின் பங்கு உள்ளது என்று குற்றம்சாட்டியிருந்தார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக சாட்சியளிக்க வந்த அலிமுதீனின் சகோதரர் மனைவி நீதிமன்ற வளாகம் முன்பாகவே விபத்து ஒன்றில் கொல்லப்பட்டார். அவர்கள் சென்ற இரு சக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத மற்றொரு இரு சக்கர வாகனம் மோதியது என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. ஆனால் இது சாட்சியங்களை மறைக்க எதிர்தரப்பினர் செய்யும் சதி என்று காத்தூன் தெரிவித்திருந்தார்.

Comments are closed.