இந்தியா இஸ்ரேல் இடையே பாதுகாப்பு மற்றும் தீவிரவாத எதிர்ப்பு ஒப்பந்தங்கள்

0

கடந்த இருபது ஆண்டுகளில் முதன் முறையாக இஸ்ரேலிய ஜனாதிபதியின் இந்தியா வருகை இஸ்ரேல் இந்தியா உடனான நெருக்கத்தை அதிகப்படுத்தியுள்ளது. தொடர்ந்து இஸ்ரேல் ஆதரவு நிலைபாட்டையே எடுத்து வந்த பா.ஜ.க. தற்போதைய இஸ்ரேல் ஜனாதிபதியின் வருகை மூலம் தங்களின் இஸ்ரேல் உடனான நெருக்கத்தை வெளிப்படையாக அறிவித்துள்ளது.

இஸ்ரேலிய ஜனாதிபதியுடனான சந்திப்பிற்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த மோடி, இந்தியா இஸ்ரேலுடன் இணைந்து தீவிரவாதத்தை எதிர்த்து போராடும் என்று கூறினார். “தீவிரவாதம் ஒரு சர்வதேச சவால் என்று நாங்கள் அறிவோம். அதற்கு எல்லைகள் இல்லை. இதில் தீவிரவாதத்தை உருவாக்கி பரப்பும் நாடுகளில் ஒன்று இந்தியாவின் அண்டை நாடாக இருப்பது வருத்தமளிக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்த இஸ்ரேல் ஜனாதிபதி ரூவென் ரிவ்ளின், இந்தியா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரண்டு நாடுகளும் சுதந்திரத்தின் கொள்கைகளை உயர்த்திப் பிடிப்பதால் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தீவிரவாதத்தை எதனாலும் நியாயப்படுத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் தீவிரவாதத்தை எதிர்ப்பதில் இந்தியாவுடன் இணைந்து இஸ்ரேல் போராடும் என்று அவர் கூறியுள்ளார்.

இரு நாடுகளுக்கிடையே உள்ள கூட்டு பற்றி குறிப்பிடுகையில், இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கும், இந்தியாவுடன் சேர்ந்து உற்பத்தி செய்வதற்கும் இஸ்ரேல் தயாராக உள்ளது என்று அவர் கூறியுள்ளார். இஸ்ரேலின் இராணுவ தளவாடங்களை அதிகம் வாங்கும் நாடு இந்தியா. தற்போது வரை இது திரைமறைவாக நடந்து வந்த நிலையில் இனி இது வெளிப்படையாகவே நிகழும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.

இந்த சந்திப்பை தொடர்ந்து மோடி வருகிற 2017 இன் தொடக்கத்தில் இஸ்ரேல் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.