இந்தியா மீது போர் தொடுத்ததாக குற்றச்சாட்டு: 17 ஆண்டுகளுக்குப் பின் ஐந்து முஸ்லிம்கள் குற்றமற்றவர்கள் என்று விடுதலை

0

இந்தியா மீது போர் தொடுத்ததாக குற்றச்சாட்டு: 17 ஆண்டுகளுக்குப் பின் ஐந்து முஸ்லிம்கள் குற்றமற்றவர்கள் என்று விடுதலை

மத்திய பிரதேச மாநிலத்தின் கொஹல்பூரை சேர்ந்தவர்கள் அனீஸ் அஹமத், முஹம்மத் அலி, முஹம்மத் யூனுஸ், சுல்தான் அஹமத் மற்றும் கியாசுதீன் ஆகியோர். கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டெம்பர் 27 ஆம் தேதி முதல் அக்டோபர் 1 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் இவர்கள் முஹர்ரம் சந்திப்புகளில் பங்கெடுத்துள்ளனர். அங்கு விநியோகிக்கப்பட்ட துண்டு பிரசுரங்கள் ஹிந்தி மற்றும் உருது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டியதாக இருந்ததால் இவர்கள் அதனை செய்து தர முன்வந்துள்ளனர். இவர்களின் இந்த செயல் பின்னர் இவர்கள் தேசத்திற்கு எதிராக போர் தொடுத்தனர் என்கிற குற்றம்சாட்டப்பட்டு காவல்துறையினர் கைது செய்ய காரணமாகிவிட்டது.

2001 அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி ஜபல்பூரில் இந்தியாவிற்கு எதிராக சிலர் கூட்டம் நடத்துகின்றனர் என்று செய்தி தங்களுக்கு கிடைத்ததாகவும் அதனை அடுத்து காவவல்துறையினர் இவர்களை கைது செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இன்னும் இவர்கள் சிமி இயக்கத்து உறுப்பினர்கள் என்றும் குறிப்பிட்ட அந்தக் கூட்டத்தில் இவர்கள் இந்தியாவிற்கு எதிராகவும், ஒசாமா பின் லேடன் மற்றும் தாலிபான்களுக்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்பியதாகக் கூறி கைது செய்யப்பட்டனர். இவர்கள் பின்னர் பிணையில் வெளிவந்தாலும் அடுத்த எட்டு வருடங்களுக்கு இவர்கள் மேல் தொடரப்பட்ட வழக்கு எந்த ஒரு விசாராணை இன்றி கிடப்பில் போடப்பட்டது. இந்த காலக்கட்டத்தில் இந்த வழக்கின் பாதிப்பால் இவர்கள் எந்த ஒரு அரசு மற்றும் தனியார் வேலைகளில் ஈடுபட முடியாமல் அவதிக்குள்ளாயினர். இதன் காரணத்தால் இவர்கள் தங்கள் பிழைப்பிற்காக சிறு சிறு தொழில்களை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

பின்னர் 2008 ஆம் ஆண்டு அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்த போது இவர்களை மீண்டும் கைது செய்து விசாரணை நடத்த காவல்துறை முடிவெடுத்தது. இறுதியாக 2009 ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை தொடங்கியது. அப்போது இவர்களுக்கு எதிராக தங்களிடம் போதுமான ஆதாரங்கள் இருபதாகவும் இவர்களிடம் இருந்து ஜிஹாதிய புத்தகங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், மேலும் இவர்களுக்கு எதிராக பல சாட்சியங்கள் உள்ளது என்றும் காவல்துறை நீதமன்றத்தில் கூறியது. ஆனால் ஒன்பது வருடங்கள் கழிந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை என்ற காரணத்தினால் இவர்களை குற்றமற்றவர்கள் என்று கூறி நீதிமன்றம் விடுவித்துள்ளது.

இவர்களின் வழக்கை ஏற்று நடத்திய வழக்கறிஞர் முஹ்ஹர்ரம் அலி இது குறித்து கூறுகையில், இவர்கள் நிரபராதிகள் என்று வெளியான தீர்ப்பு சிலருக்கு அதிர்ச்சியை தரலாம், ஆனால் இது தற்போது வாடிக்கையாகிவிட்டது. சிமி இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று ஐந்து வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிரபராதிகள் என்று கூறி நீதிமன்றம் விடுவித்துள்ளது. அதில் நான்கு வழக்குகள் ஜபல்பூரை மையமாக கொண்ட வழக்குகள் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வழக்குகள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை என்றும் காவல்துறை இவர்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டிற்கு எந்த ஒரு ஆதாரத்தையும் நீதிமன்றத்தில் சமர்பிக்க முடியவில்லை என்றும் முஹர்ரம் அலி தெரிவித்துள்ளார். இன்னும் அவர்கள் சமர்பித்த ஆதாரங்கள் கூட வேறு வழக்குகளுடையது, இருந்த போதிலும் காவல்துறை அதனை இந்த வழக்கில் சமர்பித்தது என்றும் முஹர்ரம் அலி தெரிவித்துள்ளார். இவ்வழக்கில் காவல்துறை சமர்பித்த ஆதாரங்களை நீதிமன்றமே புரம்தள்ளிவிட்டது என்றும் காவல்துறை தரப்பு சாட்சியங்களுக்கு காவல்துறை கூறுவது போல எந்த ஒரு சம்பவமும் நடந்ததாக தெரியவில்லை என்று கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இன்னும் இவ்வழக்கில் இவர்கள் சிமி அமைப்பின் உறுப்பினர்கள் என்று கூட காவல்துறையால் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியவில்லை. இருந்தும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் உள்ள ஒரே பலகீனம் என்ன என்றால் அவர்கள் தங்கள் தரப்பின் சாட்சியங்கள் எதையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இயலவில்லை என்பது தான். அதுவும் காவல்துறைக்கு எதிராக எவரும் வந்து சாட்சி கூற விரும்பாததும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தில் இருந்து எவரும் முன்வராதது தான் காரணம் என்று முஹர்ரம் அலி தெரிவித்துள்ளார்.

மேலும் கூறிய அவர், “இந்த வழக்கு விசாரணை சென்ற வேகத்தை இங்கே கவனிக்க வேண்டும் என்றும் காவல்துறை ஒரு சாட்சியத்தை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த பல மாதங்களை எடுத்துக்கொண்டது, சில நேரங்களில் மொத்தமாக ஒரு வருடத்தை கூட எடுத்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற கீழ் நீதிமன்றங்களை நாங்கள் அணுகினோம். பின்னர் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தை கூட அணுகினோம். ஆனால் இவர்களின் அனைத்து பிணை மனுக்களும் இவ்வழக்கு மிக தீவிரமான வழக்கு என்று கூறி நிராகரிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேர் அவர்களது 30 வயதின் தொடகத்தில் இருந்தனர். இருவர் தங்களது 40 வயதின் தொடக்கத்தில் இருந்தனர். தங்களது கண்முன்னே அவர்களது வாழ்க்கை தொலைந்தும் நீதிமன்றம் இதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.” என்று முஹர்ரம் அலி தெரிவித்துள்ளார்.

இந்திய அரசை பொறுத்தவரை, ஒரு வழக்கில் சிலரை கைது செய்ததும் அவ்வழக்கு முடிவுற்றது என்பது போல் உள்ளது என்று கூறிய அவர், “இந்த ஐந்து பேர் மீது குஜராத் காவல்துறை அகமதாபாத் மற்றும் சூரத் குண்டு வெடிப்பு தொடர்பாகவும் மொத்தம் 38 வழக்குகளை பதிவு செய்துள்ளது. தற்போது இவர்கள் இவ்வழக்கில் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டாலும் இவர்களுக்கு சுந்தந்திரம் கிடைக்கவில்லை.” என்று அலி தெரிவித்துள்ளார். இன்னும் “அகமதாபாத் சூரத் வழக்கில் காவல்துறை மொத்தம் 3000 சாட்சியங்களை தங்கள் பட்டியலில் சேர்த்துள்ளது. இதில் கடந்த பத்து வருடங்களில் மொத்தம் 1000 சாட்சியங்களை மட்டுமே காவல்துறை நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டால் இந்த வழக்கு முடிய இன்னும் 10 அல்லது 20 வருடங்கள் ஆகலாம். அதனால் இந்த வழக்கில் இவர்கள் நிரபராதிகள் என்று வெளியான தீர்ப்பு இவர்களுக்கு எந்த ஒரு மாற்றத்தையும் தரப்போவதில்லை.” என்று அலி தெரிவித்துள்ளார்.

Comments are closed.