இந்திய அரசின் BHIM செயலியிலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை போன்று தடுமாற்றம்

0

ரோக்கமில்லா பண பரிவர்த்தனைக்கு உதவும் வகையில் NCPI எனப்படும் National Payments Corporation of India, BHIM என்ற புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட மூன்றே நாட்களில் 86,000 பயனாளர்களை பெற்ற இந்த செயலி இந்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை போன்றே பெரும் எதிர்பார்ப்பை மக்களிடம் ஏற்படுத்தியது. அவர்களின் எதிர்ப்பார்ப்பை முற்றிலுமாக பூர்த்தி செய்யும் வகையில் இந்த BHIM செயலியும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை போன்றே பல நடைமுறை சிக்கல்களையும் பிரச்சனைகளையும் கொண்ட அரைகுறை முயற்சியாக உள்ளது என்று தெரியவந்துள்ளது.

தற்போது 1 மில்லியன் முறைக்கு மேல் பதிவிறக்கம் செய்யப்பட்டு கூகிள் ப்ளே ஸ்டோரில் 4.2 தரத்தை பெற்றுள்ள இந்த செயலி ஆண்டுராய்டு பயனாளர்களுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் பல பயனாளர்கள் இந்த செயலியை தாங்கள் பயன்படுத்தும் போது பல பிரச்சனைகள் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். இத்தகைய பிரச்சனைகளால் தங்களால் இதனை வைத்து பண பரிமாற்றத்தில் ஈடுபட முடிவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த பிரச்சனைகளை BHIM செயலியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கும் ஒப்புக்கொண்டுள்ளது. அதிகப்படியான மக்கள் இந்த செயலியை பயன்படுத்துவதால் இந்த பிரச்சனைகள் ஏற்ப்பட்டுள்ளதாகவும் விரைவில் இது சரி செய்யப்படும் என்றும் அவர்கள் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. ஆனால் மக்களுக்கு ஏனோ, பணமதிப்பிழப்பின் தொடக்கத்தில் இந்த பணப்பிரச்சனை இன்னும் இரண்டு வாரங்களில் சரியாகிவிடும் என்று மத்திய அரசு கூறியதை இது நினைவு படுத்துகிறது.

நாட்டின் 100 கோடி மக்களிடம் இருந்து பணத்தை பிடுங்கிவிட்டு அவர்களை அலைபேசி மூலம் பண பரிவர்த்தனையில் ஈடுபட கூறும் அரசு குறைந்த பட்ச நடவடிக்கையாக அனைத்து அலைபேசி பயனாளர்களும் இதில் பயன்பெறும் விதம் ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். ஆனால் விண்டோஸ் மற்றும் ஆப்பிள் போன்களை புறம் தள்ளி வெறும் ஆண்டுராய்டு போன்களுக்கு மட்டும் செயலியை அறிமுகம் செய்த அரசு அதிலாவது கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டாமா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தாங்கள் இதன் மூலம் பணம் அனுப்பப்படும் போது அதை பெறுபவருக்கு உறுதி படுத்தும் விதமாக குறுந்தகவல் செய்திகள் எதுவும் செல்வதில்லை என்றும் இதனால் ஒருவர் பணம் பெற்றதை உறுதி படுத்த ஒவ்வொரு முறையும் அவரது வங்கிக் கணக்கில் சென்று பார்க்க வேண்டியுள்ளது என்று ஒரு பயனாளர் புகாரளித்துள்ளர்.

சில நேரங்களில் பண பரிவர்த்தனை தோல்வியடைந்துவிட்டால் அனுப்புனர் கணக்கில் இருந்து பணம் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதுவும் கூட பயனாளர்களுக்கு தெரியப்படுத்தப் படுவதில்லை என்றும் வங்கி கணக்கில் சென்று பார்த்தாலே அதுவும் ககூட அறிந்துகொள்ள முடிகிறது என்று பயனாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சில பயனாளர்கள் பலமுறை தாங்கள் முயன்றும் தங்களால் பணம் அனுப்ப முடிவதில்லை என்றும் இந்த செயலி தொடர்பான புகார்களை தெரிவிக்கும் முறையும் பயனாளர்களை மிகுந்த சிரமதிற்குள்ளாக்குகிறது என்று பயனாளர்கள் கூறியுள்ளனர்.

பல சிறப்பு அம்சகளையும் நாட்டின் பெரும்பாலான வங்கிகளின் மூலம் பணம் செலுத்தும் வசதியை பெற்றும் ஆதார் மூலம் பணம் அனுப்பும் வசதி விரைவில் வர இருக்கிறது என்றும் பல சிறப்புகள் இந்த செயலியில் இருப்பதாக கூறப்பட்டாலும் இதுவும் பா.ஜ.க. வின் ஜூம்லாக்கள் போல வெறும் அறிவிப்பாகவே தொடர்கிறது. நாட்டின் பெரும்பான்மை மக்கள் ஸ்மார்ட்போன் பயனாளிகள் இல்லை என்ற போதும் குறைந்தபட்ச ஸ்மார்ட்போன் பயனாளிகளையாவது முழுமையாக உள்ளடக்கி அவர்களுக்கு தடையற்ற சேவை வழக்கினால் நாட்டில் பணப்புழக்கம் சகஜநிலைக்கு திரும்பும்வரை பொதுமக்களுக்கு இது ஒரு இடைக்கால ஆறுதலாக இருக்கும்.

Comments are closed.