இந்திய இராணுவ நியமனத்தில் அரசியலா? மூத்த அதிகாரி முஹம்மத் ஹாரிஸ் இருக்க பிபின் ரவாதிற்கு முன்னுரிமை

0

இந்திய இராணுவ தளபதியாக ஜெனெரல் பிபின் ரவாத் நியமனம் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் மற்றும் கம்மியுனிஸ்ட் கட்சிகள் பெரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இவரைவிட பணியில் மூத்த அதிகாரிகள் ஜெனெரல் முஹம்மத் ஹாரிஸ் மற்றும் ஜெனெரல் பிரவீன் பக்ஷி என்ற இருவர் இருக்க இவருக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது குறித்து பல சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இதற்கு முன்னதாக பணியில் மூத்த அதிகாரி இருக்க வேறொருவர் இராணுவ தளபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டது 1983 இல் இந்திரா காந்தி ஆட்சியில் இருக்கும் போது நடைபெற்றது. அப்போது மூத்த அதிகாரியான ஜெனெரல் சின்ஹா இருக்க அவருக்கு பதில் ஏ.எஸ்.வைத்யா இராணுவ தளபதியாக தேந்தெடுக்கப்பட்டார். ஏ.எஸ்.வைத்யா மிகவும் கவுரவிக்கப்பட்ட இராணுவ அதிகாரி என்பதனால் இந்திரா காந்தியின் இந்த முடிவிற்கு பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெனெரல் சின்ஹா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

தற்போது பணியில் மூத்த அதிகாரிகள் இருக்க ஜெனெரல் பிபின் இராணுவ தளபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. அதில் ஒரு காரணமாக இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறப்படுகிறார். அஜித் தோவலும் தற்போது இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டிருக்கும் ஜெனெரல் ரவாத்தும் ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. அதே போன்று தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய உளவு பிரிவான “ரா” அமைப்பின் தலைவரான அணில் தஸ்மனாவும் அஜித் தோவலின் மாவட்டமான கர்வால் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜெனெரல் ரவாதின் பதவி நியமனத்திற்கு மற்றொரு காரணமாக கூறப்படுவது, ஜெனெரல் முஹம்மத் ஹாரிஸ்-ஐ இந்திய இராணுவ தளபதியாக நியமிப்பதில் இருந்து தடுப்பதற்காக என்பதாகும். பணி மூப்பின்படி ஜெனெரல் முஹம்மத் ஹாரிஸ் இராணுவ தளபதியாக நியமிக்கப் பட்டிருப்பாரேயானால் இந்திய வரலாற்றில் முதல் முஸ்லிம் இராணுவ தளபதியாக அவர் இருந்திருப்பார்.

இது குறித்து இந்த மூன்று அதிகாரிகளையும் பயிற்றுவித்தவரான ஜெனெரல் ஹச்.எஸ்.பனாக் குறிப்பிடுகையில், “புதிய இராணுவ தளபதியை நியமனம் செய்வது அரசின் வேலை. இதற்கு முன்னதாக ஒரு முறை மட்டுமே பணியில் மூத்த அதிகாரியை விடுத்து மற்றொருவர் இராணுவ தளபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால் இராணவ தளபதியின் பணி குறித்து எதுவும் தெரியாத அரசின் இந்த முடிவு எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஜம்மு காஷ்மீரில் பணியாற்றியது எவ்விதத்திலும் சிறப்பானது இல்லை. நாளை போர் என்று ஒன்று வருமேயானால் அது வெட்டவெளிகளிலும் பாலைவனங்களிலும் நடக்கலாம். அப்போது என்ன ஆகும்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசு தரப்பில் இருந்து, ஜெனெரல் ரவாத் கடந்த முப்பது வருடமாக பல போரட்ட பகுதிகளில் முதற்கட்ட அனுபவம் பெற்றவர் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் ஜெனெரல் ரவாத்தை அறிந்த அதிகாரிகளோ அதனை மறுத்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பாத அதிகாரி ஒருவர், ஜெனெரல் ரவாத்தின் ஜம்மு கஷ்மீர் குறித்த அறிக்கைகள் எல்லாம் மிகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் 2007 இல் ராஷ்ட்ரிய ரைஃபிளஸ் பிரிவு 5 உடனான அவரது செயல்பாடு ஆர்வமற்றதாகவே இருந்தது என்றும் தேசிய பாதுகாப்பு அமைப்பில் உள்ள அவரது தொடர்புகளே அவருக்கு இந்த பதவியை பெற்றுத்தந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

மேலும் இது ரவாதிற்கு ஒன்றும் புதிதல்ல என்றும் கூறப்படுகிறது. அவரது பணிக்காலத்தில் அனைத்து பிரிவிலும் சிறப்பித்தமைக்காக வழங்ப்படும் கவுரவ வாள் பதக்கம் தகுதி தர வரிசையில் ஐந்தாவதாக வந்த போதும் இவருடைய தொடர்புகள் காரணமாக இவருக்கு வழங்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மற்றொரு அதிகாரி, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வு ஒரு கேலிக்கூத்து என்று கூறியுள்ளார். “இவருக்கு முந்தைய இரு அதிகாரிகளை விடுங்கள், தற்போது இவருக்கு இந்த பதவி எப்படி கிடைத்தது என்று அனைவருக்கும் தெரியும். அதனால் மற்ற அதிகாரிகளும் ஆளுங்கட்சியுடன் தங்களை நெருக்கமாக்கிகொள்ள முனைவார்கள். இது இராணுவத்தில் மோசமான ஒரு வழக்கத்தை புகுத்தி இராணுவத்தையும் அரசியலாக்கிவிடும்” என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் சி.பி.ஐ. தலைவர் பதவி நியமனத்திலும் இது போன்று பணியில் மூத்த அதிகாரிகளை விடுத்து பா.ஜ.க அரசிற்கு நெருக்கமானவர்கள் நியமிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.