இந்திய இளைஞர்களில் 62% பேர் இணையதள குற்றங்களால் பாதிக்கப்படலாம்: சைமன்டெக்

0

மொபைல் மற்றும் கணினி பாதுகாப்பு மென்பொருள் தயாரிக்கும் நிறுவனமான நோர்டான் சைமன்டெக் நிறுவனம் மொபைல் போன்கள் பயன்படுத்தும் இந்திய இளைஞர்களின் நிலை குறித்து ஆய்வு ஒன்று மேற்கொண்டது. இதில் 62% இந்தியர்கள் இணையதளம் தொடர்பான குற்றங்களால் பாதிக்கப்படலாம் என்றும் 54% பேர் இது போன்ற குற்றங்களில் ஈடுபட அதிக வாய்ப்புள்ளது என்று அறிவித்துள்ளது.

16 வயதிற்கு மேலானவர்களில் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லட் பயன்படுத்தும் 1005 இந்தியர்களை உள்ளடக்கிய இந்த ஆய்வு வெவ்வேறு பாதிப்புகளுக்கான சாத்தியக்கூறுகளை விளக்குகிறது.

இதில் 36% பேர் தங்களை குறித்த அந்தரங்க தகவல்களை கசியவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும், வைரஸ் போன்ற பாதிப்பில் 33% பேர் பாதிக்கப்படலாம் என்றும் , பழிவாங்கும் நோக்கில் வெளியிடப்படும் ஆபாசப்படங்களினால் 24% பாதிக்கப்படலாம் என்றும் இணையதள பின்தொடர்தல் மூலம் 22% பாதிக்கப்படலாம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 12% பேர் கேட் ஃபிஷ்ஷிங் என்று கூறப்படும் ஃபேக் ஐடி பயன்படுத்துவோரிடம் சிக்கிக்கொள்ள வாய்ப்புகள் அதிகம் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

இத்தகைய பாதிப்புகள் பெரும்பாலும் நம்பகத்தன்மை இல்லாத தளங்களில் இருந்து ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்து நிறுவத்தால் ஏற்படுகிறது என்று சைமன்டெக் இன் இந்திய மேலாளர் ரிதேஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “அவர்கள் அனுபவமற்றவர்கள். ஒரு 13 வயது சிறுவன் / சிறுமிக்கு எது நல்ல ஆப் எது கெட்ட ஆப் என்பது குறித்து தெரிய வாய்ப்பில்லை. மேலும் எங்கு கிரெடிட் கார்ட் தகவல்களை பகிர வேண்டும் எங்கு பகிர கூடாது என்றும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களது நண்பர் யாரோ ஒருவர் இது ஒரு சிறந்த ஆப் என்று சொல்வதை கேட்டு தங்கள் போன்களிலும் நிறுவுபவர்கள் இவர்கள்.” என்று இவர் கூறியுள்ளார்.

மேலும் இது போன்ற பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பாதுகாப்பு மென்பொருட்களை நிறுவுவதோடு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஸ்மார்ட்போன்களை அவ்வப்போது சோதனையிட வேண்டும் என்றும் அவர்களது ஸ்மார்ட்போன் பழக்க வழக்கங்களை கவனிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Comments are closed.