இந்திய தலைநகரத்தில் பட்டினியால் இறந்த மூன்று குழந்தைகள்

0

தலைநகரத்தில் பட்டினியால் இறந்த மூன்று குழந்தைகள்

முன்னேற்றத்தை தேர்தல் பிரச்சாரமாக முழங்கி ஆட்சிக்கு வந்த பாஜகவின் ஆட்சிக்காலம் முடியும் நிலையில் தேசத்தின் தலைநகரில் மூன்று குழந்தைகள் பட்டினியால் உயிரிழந்துள்ளனர். இறந்த குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் தொடர்ச்சியாக ஒன்பது நாட்களுக்கு அவர்கள் உணவின்றி பட்டினியாக இருந்தது தெரியவந்துள்ளது.

கடந்த செவ்வாய்க் கிழமையன்று எட்டு வயது மான்ஸி நான்கு வயது ஷிகா, மற்றும் இரண்டு வயது பருள் ஆகிய மூன்று குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக புது டில்லியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் உணவின்றி பட்டினியினால் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தேசத்தின் தலைநகரத்தில் இத்தகைய மரணத்தை எதிர்பார்க்காத அதிகாரிகள் முதல் பிரேத பரிசோதனை அறிக்கையில் நம்பிக்கையற்று பட்டினிச் சாவை உறுதி செய்ய மீண்டும் பிரேத பரிசோதனை செய்துள்ளனர்.

இது குறித்து லால் பகதூர் ஷாஷ்திரி மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் அமிதா சக்சேனா கூறுகையில்,”எங்கள் மருத்துவமனையில் நடைபெற்ற மருத்துவ தடவியல் சோதனையில் இந்த குழந்தைகள் பட்டினியால் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. அந்த குழந்தைகள் கொடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு ஆளாகியுள்ளனர். அவர்களது உடம்பில் சிறிது கூட கொழுப்புச் சத்து இல்லை.” என்று தெரிவித்துள்ளார். மேலும், “அவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்காக நாங்கள் திறந்த போது அவர்களின் வயிர், சிறுநீர்ப்பை மற்றும் குடல் பகுதி காலியாக இருந்தது. அந்த குழந்தைகள் கடந்த 8 இல் இருந்து 9 நாட்களுக்கு எதுவும் உண்டதற்கான எந்த ஒரு தடயமும் இல்லை.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இவர்களின் நிலை குறித்து காவல்துறை கருத்து தெரிவிக்கையில், இந்த குழந்தைகளின் தந்தையான மங்கள் சிங் என்பவரை காணவில்லை என்றும் இவர்களின் தாயார் பீனா மனநோயால் பாதிக்கப்பட்டவர் என்றும் இதனால் இந்த குழந்தைகள் தங்களை தாங்களே பார்த்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது. இறந்த குழந்தைகளின் தாயார் பீனா காவல்துறை கேட்கும் எந்த ஒரு கேள்விக்கும் பதிலளிக்க தடுமாறுகிறார் என்று காவல்துறை தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

இந்த பட்டினிச்சாவு குறித்து தொழிலாளர் இயக்கம் ஒன்றைச் சேர்ந்த நிகில் தேய் என்பவர் கருத்து தெரிவிக்கையில், “இது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட துயரம்” என்று தெரிவித்துள்ளார். மேலும், “பட்டினிச்சாவுகள் இந்தியாவில் பல கிராமகளில் சத்தமில்லாமல் நடந்து வருகின்ற போதிலும் இந்த சாவுகள் பணம், வசதி மற்றும் அனத்து வசதிகளும் கிடைக்கப்பெற்ற தேசத்தின் தலைநகரில் நடந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

இன்னும்,”1% மக்களின் கைகளில் பணம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பொருளாதார படிநிலையில் கீழ் உள்ள மக்களுக்கு மிகவும் குறைவாகவே கிடைக்கின்றது. இது குறித்து நமது பொது விநியோக அமைப்புகள் கவலைப்பட வேண்டும். “ என்று அவர் தெரிவித்துள்ளார்.

முன்னர் ஆதார் இல்லாததால் உணவுப் பொருள் வழங்க மறுக்கப்பட்ட நிலையில் பட்டினியால் மக்கள் உயிரிழந்த நிகழ்வுகள் இங்கு குறிப்பிடத்தக்கது. (பார்க்க செய்தி)

Comments are closed.