இந்திய வங்கிகளிடம் இருந்து 11,400 கோடிகள் மோசடி செய்த மோடி

0

இந்திய வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது மனைவி, சகோதரர், மற்றும் தொழில் பங்குதாரர்கள் ஆகியோர் பஞ்சாப் தேசிய வங்கியிடம் இருந்து சுமார்  11,000 கோடி ரூபாய்களை மோசடி செய்ததாக தெரிய வந்துள்ளது.

2011 ஆம் ஆண்டில் இருந்து  இவர்கள் செய்து வந்த இந்த மோசடிக்கு பஞ்சாப் தேசிய வங்கியின் ஊழியர்களும் உடந்தை என்று தற்போது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த வங்கி மட்டுமல்லாது இவர், அலஹாபாத் வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி போன்ற வங்கிகளிலும் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. மோடியின் இந்த மோசடி, இந்தியா வங்கிகள் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பொருளாதாரத்தை இது வெகுவாக பாதிக்கும் என்றும் நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.

நிரவ் மோடியின் நிறுவனம் கடந்த மாதம் பஞ்சாப் தேசிய வங்கியிடம் கடன் தொகை பெற புரிந்துணர்வு கடிதம் வின்னப்பித்த்துள்ளது. வழக்கமாக இவர்களுக்கு முறையான ஆவனங்கள் இல்லாமல் கடன் பெற உதவும் வங்கி அதிகாரி ஓய்வு பெற்ற காரணத்தினால் அது வேறொரு அதிகாரியின் கவனத்திற்கு சென்றுள்ளது. இது வங்கி சாதாரணமாக அனுமதிக்கும் கடன் தொகையை விட கூடுதலான காரணத்தால் அவர்கள் கேட்கும் கடன் தொகைக்கான 100%  உத்திரவாதத்தை வங்கி தரப்பில் இருந்து கேட்டுள்ளனர். இது எதுவும் இல்லாமலே தங்கள் நிறுவனம் முன்னதாக கடிதம் பெற்றது என்று மோடியின் நிறுவன தரப்பில் இருந்து கூறப்பட பஞ்சாப் தேசிய வங்கி விழித்துக்கொண்டுள்ளது. இதனையடுத்து நடைபெற்ற விசாரணையில் முதலில் மோடியின் நிறுவனத்தால் தங்களுக்கு 280 கோடி ரூபாய் இழப்பு என்றும் பின்னர் நடைபெற்ற விசாரணையில் மொத்தமாக 11,400 கோடி ரூபாய்களை மோடி மோசடி செய்துள்ளார் என்று அந்த வங்கி தெரிவித்தது. மேலும் இந்த மோசடிக்கு உடனதையாக இருக்கலாம் என்று கருதப்படும் தங்கள் வங்கியின் 11 ஊழியர்களையும் அது பணிநீக்கம் செய்தது.

இவ்வளவு பெரிய இமாலைய மோசடியை செய்த நபர் மிக வசதியாக அவரது மனைவி மற்றும் சகோதரருடன் இந்தியாவி விட்டு தப்பிச் சென்றுள்ளார். ஜனவரி 1 ஆம் தேதியே இந்தியாவை விட்டு இவர் தப்பிச் சென்றதாக அரசு தரப்பில் இருந்து கூறப்பட்ட நிலையில், கடந்த ஜனவரி 23 ஆம் தேதி சுவிச்சர்லாந்தில் நரேந்திர மோடி பங்குபெற்ற தொழிலதிபர்கள் மாநாட்டில் நிரவ் மோடியும் பங்குபெற்று நரேந்திர மோடியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். இது இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

மோசடி மன்னன் நிரவ் மோடியை சோட்டா மோடி என்றும் நிரவ் மோடி இந்தியாவில் இருந்து தப்பிச் செல்ல பாஜக உதவியுள்ளது என்றும் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. நிரவ் மோடியை சோட்டா மோடி என்று அழைப்பது நரேந்திர மோடியை அவமதிப்பதாக உள்ளது என்று பாஜக கூறியுள்ளது. மேலும் 2011 இல் இருந்து 2014  வரையிலான காங்கிரஸ் ஆட்சியில் தான் நிரவ் மோடி இந்த மோசடிகளில் ஈடுபட்டுள்ளார் என்றும் அவர் மோசடி செய்ய உதவிய புரிந்துணர்வு கடிதங்கள் அப்போது தான் வழங்கப்பட்டன என்றும் பாஜகவின் மத்திய சட்ட அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

ஆனால் சிபிஐ தாக்கல் செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின்படி பாஜக ஆட்சியில் உள்ள 2017 ஆம் ஆண்டில் சுமார் 8 புரிந்துணர்வு கடிதங்கள் நிரவ் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் பாஜக ஆட்சியில் இருந்த கடந்த இரண்டு ஆண்டுகளில் இது போன்று மொத்தம் 293 புரிந்துணர்வு கடிதங்கள் வழங்கப்பட்டுளளது என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது. இந்த புரிந்துணர்வு கடிதங்கள் என்பது கடன் அல்ல. வெளிநாட்டு வங்கிகள் கடன் வழங்குவதற்கு இந்த வங்கி அளிக்கும் உத்திரவாதமாகும். தற்போது நிரவ் மோடியிடம் இவ்வளவு பணம் உள்ளதா அல்லது அதன் நிகர் மதிப்பிலான சொத்துக்கள் எதுவும் உள்ளதா என்று எந்த வித உத்திரவாதமும் பெறாமல் இந்த கடிதங்களை இந்திய வங்கி வழங்கியதால் நிரவ் மோடி வெளிநாட்டு வங்கியிடம் இருந்து பெற்ற கடன்களுக்கு இந்த வங்கிகள் பொறுப்பாளிகள் ஆகியுள்ளன. இன்னும் நிரவ் மோடி பெற்ற இத்தகைய கடிதங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்றும் இதில் நடைபெறும் கூடுதல் விசாரணைகளில் அது தெரியவரும் என்று தெரிவித்துள்ளது. லலித் மோடி, மல்லையா வரிசையில் பாஜக நிரவ் மோடி விசயத்திலும் கோட்டைவிட்டுள்ளது. இதன் பாதிப்பும் முன்பு போல இந்திய மக்கள் மீது தான் சுமத்தப்படும் என்று மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.

Comments are closed.