இந்துக் கடவுள் சிலைக்கு ஆர்.எஸ்.எஸ்.சீருடை

0

சூரத்தில் உள்ள சுவாமிநாராயன் கோவில் சிலைக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரின் சீருடையை கோவில் நிர்வாகிகள் அணிவித்தது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

இந்துக் கடவுள் சுவாமிநாராயன் சிலைக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சீருடையான காக்கி அரைக்கால் சட்டையும், வெள்ளை சட்டை, கருப்பு தொப்பி மற்றும் கருப்பு ஷூ அணிவித்து சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படம் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

அக்கோவிலின் சுவாமி விஷ்வபிரகாஷ் இது குறித்து கூறுகையில், இந்த ஆடை அப்பகுதி பக்தர் ஒருவரால் சில நாட்களுக்கு முன்னாள் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது என்றும் சாமி சிலையை வெவ்வேறு உடை உடுத்தி அலங்கரிப்பது கோவில் வழக்கம் என்றும் அதனால் இந்த உடுப்பு அணிவிக்கப்பட்டதே தவிர வேற எந்த ஒரு நோக்கமும் இல்லை என்று கூறியுள்ளார். மேலும் இந்த விஷயம் இவ்வளவு பெரிய சர்ச்சைக்கு காரணமாகும் என்று அறிந்திருந்தால் இது நடந்திருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார். இன்னும் அக்கோவில் நிர்வாகிகள் தங்களுக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சங்கர் சிங் வகேலா இந்த நிகழ்வை வன்மையாக கண்டித்துள்ளதோடு இது போன்ற செயல்களில் இருந்து கோவில் நிர்வாகிகள் தங்களை விளக்கிக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

இன்னும் “சிலைக்கு ஆர்.எஸ்.எஸ். சீருடை அணிவித்ததன் மூலம் எதனை நிரூபிக்க நினைக்கிறீர்கள்” என்று கேள்வி எழுப்பிய அவர் “இன்று கடவுள் சிலைக்கு ஆர்.எஸ்.எஸ். சீருடையை அணிவித்துள்ளீர்கள், நாளை பா.ஜ.க வின் சீருடையை அணிவிப்பீர்கள்” என்று கூறியுள்ளார். மேலும் இத்தகைய செயலை செய்தவர் குறித்து தான் மிகவும் வருந்துவதாகவும், இந்நிகழ்வு மிகவும் துரதிருஷ்டவசமானது என்றும் அவர் கூறியுள்ளார்.

Comments are closed.