இந்துப் பெண் மீது காதல்: முஸ்லிம் வாலிபர் மரத்தில் கட்டி வைக்கப்பட்டு அடித்துக் கொலை

0

ஜார்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில் 20 வயது முஸ்லிம் வாலிபர் ஒரு இந்துப் பெண்ணை காதலித்ததற்காக கிராம மக்களால் மரத்தில் கட்டிவைக்கப்பட்டு அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

முஹம்மத் சாலிக் என்ற அந்த நபர் கும்லா பகுதியின் ராசா காலனியில் வசித்துவருபவர். இவர் கடந்த ஒரு வருடமாக அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் இந்துப் பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ராம் நவமியின் போது அந்தப் பெண் இவரை சந்திக்க வேண்டும் என்று அழைத்ததாக கூறப்படுகிறது. ஏதேனும் பிரச்சனை ஆகிவிடும் என்ற அச்சத்தில் முதலில் இதற்கு சாலிக் மறுப்பு தெரிவித்துள்ளார். பின்னர் அப்பெண் வற்புறுத்தவே அப்பெண்ணை காண சென்றுள்ளார்.

அப்போது அவரை அங்கு கண்ட அப்பெண்னின் அண்டை வீட்டார்கள் அவரை சூழ்ந்துகொண்டு தாக்கியுள்ளனர். பின்னர் அவரை மரத்தில் கட்டி வைத்து பல மணி நேரமாக கடுமையாக தாக்கியுள்ளனர். சாலிக் தாக்கப்படுவது குறித்து அவற்றின் தந்தைக்கு தகவல் கிடைக்கவே அவர் காவல்துறையிடம் இதனை தெரிவித்துள்ளார். காவல்துறையினர் அங்கு சென்ற போது சாலிக் மிக மோசமாக காயமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். அவரை சர்தார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து ராஞ்சி RIMS மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் படி மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் அவர் அங்கு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக மூன்று பேரை கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த கொலை ஜார்கண்டில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு மேலும் வலு சேர்ந்த்துள்ளது. உத்திர பிரதேசத்தை ஒட்டி ஜார்கண்டிலும் ரோமியோ எதிர்ப்புப் படை உருவாக்கப்பட்டதற்கும், இறைச்சி கூடங்களை அடைத்ததற்கும் பல எதிர்ப்புகள் எழுந்து வந்துள்ளன. தற்போது இந்த கொலையின் மூலம் அங்கு மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.

இதனையடுத்து நிலைமையை மோசமடையாமல் தவிர்க்க காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Comments are closed.