இன்றுவரை இந்திய குடிமகன்: நாளை?

0

இன்றுவரை இந்திய குடிமகன்: நாளை?

அஸ்ஸாம் மாநிலத்திற்கான தேசிய குடிமக்கள் பதிவேடு எனப்படும் என்.ஆர்.சி. ஆகஸ்ட் 31 அன்று வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் ஏறத்தாழ 19 இலட்சம் மக்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. பட்டியல் வெளியானதில் இருந்து 120 நாட்களுக்குள் உரிய ஆவணங்களுடன் வெளிநாட்டினர் தீர்ப்பாயங்களை இவர்கள் அணுகி தங்களை இந்திய குடிமகன் என்று நிரூபிக்க வேண்டும். அஸ்ஸாமில் தற்போது 100 வெளிநாட்டினர் தீர்ப்பாயங்கள் உள்ளன. இன்னும் 1000 தீர்ப்பாயங்களை அரசாங்கம் விரைவாக அமைக்கவுள்ளது. இதில் பணி செய்யும் அனுபவமற்ற அதிகாரிகளிடம் இந்த மக்கள் தாங்கள் இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்க வேண்டும்.

தவறுபவர்கள் தடுப்பு முகாம்களில் அடைக்கப்படுவார்கள். எத்தனை நாட்கள் அல்லது ஆண்டுகள் இவர்கள் தடுப்பு முகாம்களில் அடைக்கப்படுவார்கள், அதற்கு பின் இவர்கள் எங்கு அனுப்பப்படுவார்கள் என்பது குறித்தெல்லாம் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் முடிவு செய்யவில்லை. மியான்மரின் ராகின்னே மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் நடைபெறுவதற்கு முன் அவர்கள் இத்தகைய தடுப்பு முகாம்களில்தான் அடைக்கப்பட்டார்கள். அஸ்ஸாமில் தடுப்பு முகாம்களை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், தடுப்பு முகாம்களில் முஸ்லிம்களை அடைத்து நிரப்பலாம் என்ற பா.ஜ.க.வின் கணக்கு தற்போது பொய்யாகியுள்ளது. இன்றுவரை இந்திய குடிமகன்: நாளை?

அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக வந்து குடியேறியவர்கள் அஸ்ஸாமின் வளங்களையும் அங்குள்ள மக்களின் வேலைவாய்ப்புகள் மற்றும் இன்ன பிற சலுகைகளையும் தட்டிப் பறிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு பல்லாண்டுகளாக முன்வைக்கப்பட்டு வருகிறது. இதற்கு மத சாயம் பூசி ஆதாயம் அடைந்தது பாரதிய ஜனதா கட்சி. 1985இல் ராஜீவ் காந்தி தலைமையிலான அரசாங்கம், மாநில அரசு மற்றும் அஸ்ஸாம் போராட்டக்காரர்களுக்கு இடையில் அஸ்ஸாம் ஒப்பந்தம் கையெழுத்தானது. 1951இல் மேற்கொள்ளப்பட்ட என்.ஆர்.சி.யை புதுப்பிக்க வேண்டும் என்பது போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கை. மார்ச் 24, 1971ற்கு முன்னர் அஸ்ஸாமிற்கு வந்தவர்களும் அவர்களின் சந்ததியினரும் மட்டுமே இந்திய குடிமக்களாகவும் ஏனையவர்கள் அத்துமீறி நுழைந்தவர்களாகவும் கருதப்படுவார்கள் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதனை அடிப்படையாகக் கொண்டு அஸ்ஸாம் மாநிலத்திற்கு மட்டும் பிரத்யேகமாக என்.ஆர்.சி. நடைமுறை உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் 2013இல் தொடங்கப்பட்டது. சொல்வதற்கும் கேட்பதற்கும் எளிதாக இருந்தாலும் தங்களை இந்திய குடிமக்கள் என்று நிரூபிக்க அஸ்ஸாம் மக்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. பேரிடர்களில் இருந்து தங்களின் ஆவணங்களை பாதுகாப்பதில் தொடங்கி அனுபவமற்ற அதிகாரிகள் முன் விளக்கம் அளிப்பது வரை உடல், மன மற்றும் பொருளாதார ரீதியாக அம்மக்கள் பெரும் அவஸ்தைகளை அனுபவித்தனர். இந்த நடைமுறைக்காக அரசாங்கம் செலவு செய்த மொத்த தொகை 1200 கோடி.

அஸ்ஸாமிற்குள் அத்துமீறி நுழைந்தவர்கள் அனைவரும் முஸ்லிம்கள், அவர்கள்தான் அஸ்ஸாமியர்களின் உரிமைகளை தட்டிப்பறிக்கிறார்கள் என்பது பா.ஜ.க.வின் நெடுநாள் கூச்சல். இதனை மையமாக வைத்துத்தான் அம்மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தார்கள் என்றால் அது மிகையல்ல. என்.ஆர்.சி. பட்டியலில் முஸ்லிம்கள்தான் இடம்பெறுவார்கள் என்று கனவு கண்டு கொண்டிருந்த சங்பரிவார்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்து வருகிறது தற்போது வெளி வரும் தகவல்கள். பட்டியலில் இடம்பெறாத 19 இலட்சம் மக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வங்க மொழி பேசும் இந்துக்கள் என்ற தகவலை சங்பரிவார்கள் எதிர்பார்க்கவில்லை. எதிர்பார்த்த அளவிற்கு முஸ்லிம்களின் பெயர்கள் பட்டியலில் இடம்பெறாததால் இந்த பட்டியலை ஏற்க மாட்டோம் என்று தற்போது கூறிவருகின்றனர்.

அஸ்ஸாமில் குழப்பங்கள் நீடித்துக் கொண்டிருக்க, நாடு முழுவதும் என்.ஆர்.சி.யை கொண்டு வரப்போவதாக செப்டம்பர் 18 அன்று அறிவித்தார் அமித் ஷா. அப்போது அஸ்ஸாமிற்கும் சேர்த்து மீண்டும் என்.ஆர்.சி. நடத்தப்படுமாம். என்.ஆர்.சி. அஸ்ஸாமிற்கு பிரத்யேகமாக கொண்டுவரப்பட்ட நடைமுறை. அதை இந்தியா முழுவதும் அமல்படுத்துவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

அமித்ஷாவின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, என்.ஆர்.சி.யை மேற்கொள்வதில் உள்ள நடைமுறை சிக்கல், அதற்கான செலவு, பட்டியலில் இடம்பெறாதவர்களின் நிலை ஆகியவை குறித்து சிலர் கேள்விகளை எழுப்பி இது சாத்தியமற்றது என்று வாதிடுகின்றனர். இன்னும் பலர், குறிப்பாக முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த சில தலைவர்களும் மார்க்க அறிஞர்களும் முஸ்லிம்கள் தங்களின் அனைத்து ஆவணங்களையும் தயார்படுத்தி வைக்க வேண்டும், பாதுகாக்க வேண்டும் என்று தொடர் அறிவிப்புகளை வழங்கி வருகின்றனர். ஆவணங்களை சரியாக வைப்பது நல்லதுதான். ஆனால் அதைக் கொண்டு ஆர்.எஸ்.எஸ். திருப்தி அடையுமா? எழுத்தாளர் அருந்ததி ராயின் வார்த்தைகளில் சொல்வ தென்றால், பாபரி மஸ்ஜிதிற்கே உரிய ஆவணங்கள் இல்லை என்று கூறி விட்டார்கள். ஒரு ஏழை விவசாயி அல்லது சாலையோர வியாபாரியிடம் என்ன ஆவணம் இருக்க முடியும்?

என்.ஆர்.சி.யை நடைமுறைபடுத்துவதிலும் பல நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. ஆனால் இது குறித்தெல்லாம் பா.ஜ.க.விற்கோ அதன் தாய்ச்சபையான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கோ எந்த கவலையும் கிடையாது. ஆவணங்கள் சரியாக இருந்தாலும் முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டும் என்பதுதான் அவர்களின் திட்டம். அதற்கு சிறந்த உதாரணம், அஸ்ஸாம். நடைமுறை சாத்தியக்கூறுகள் குறித்து இந்த பாசிசவாதிகளுக்கு எவ்வித அக்கறையும் கிடையாது, அதனால் மக்கள் படும் அவலங்களையும் அவர்கள் கண்டுகொள்வது கிடையாது என்பதற்கு பணமதிப்பிழப்பு நடவடிக்கை நல்ல உதாரணம்.

என்.ஆர்.சி. இந்தியா முழுவதும் நடைமுறைபடுத்தப்படும் என்ற அறிவிப்பே மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எவ்வித ஆதாரங்களும் இன்றி சமூக வலைதளங்களில் பரப்பப்படும் செய்திகள் இந்த அச்சத்தை இரட்டிப்பாக்கியுள்ளன. ஆவணங்களை தயார் செய்வதிலும் இருக்கும் ஆவணங்களை பாதுகாப்பதிலும் மக்கள் இப்போதே கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டனர். உரிய ஆவணங்கள் இல்லையோ என்ற அச்சத்திலும் தெளிவற்ற நிலையிலும் சிலர் தற்கொலை செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேற்குவங்கத்தில் அதிகம் இவ்வாறு தற்கொலை செய்பவர்கள் முஸ்லிம்கள் மட்டுமல்ல என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

முஸ்லிம்கள் இல்லாத இந்தியா அல்லது முஸ்லிம்கள் அடிமைகளாக வாழும் இந்தியா… இதுதான் ஆர்.எஸ்.எஸ்.யின் இலக்கு. இதனை செயல்படுத்த அவர்கள் பயன்படுத்தும் ஒரு கருவி என்.ஆர்.சி. மற்றொரு கருவி, குடிமக்கள் சட்டத்திருத்த மசோதா. ஜூலை 15, 2016இல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா மக்களவையில் ஜனவரி 8, 2019 அன்று நிறைவேற்றப்பட்ட போதும் எதிர்கட்சிகளின் எதிர்ப்பு மற்றும் வட கிழக்கு மாநிலங்களின் கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவில்லை. தற்போது அதனை மீண்டும் கொண்டு வந்து நிறைவேற்றுவதில் பா.ஜ.க. முனைப்பாக உள்ளது.

‘என்.ஆர்.சி. மற்றும் குடிமக்கள் திருத்த மசோதா ஆகிய இரண்டும் வெவ்வேறானவை, அவை இரண்டையும் குழப்பிக் கொள்ள வேண்டாம்’ என்று அறிவுரை வழங்குகிறார் அமித் ஷா. இவை இரண்டும் வெவ்வேறானவை என்பதை நாமும் அறிந்துள்ளோம். ஆனால் அவை ஒன்றோடொன்று தொடர்புடையது என்பதையும் நாம் அறிவோம்.

இந்தியாவின் குடியுரிமைக்கு யாரெல்லாம் தகுதியானவர்கள் என்பதை அரசியல் சாசனத்தின் ஷரத்துகள் 5 முதல் 11 வரை தெளிவுபடுத்துகின்றன. அரசியல் சாசனத்தின் ஏனைய ஷரத்துகள் ஜனவரி 26, 1950இல் நடைமுறைக்கு வந்த போதும் இந்த ஷரத்துகள் இந்திய அரசியல் சாசனம் ஏற்றுக் கொள்ளப்பட்ட தினமான நவம்பர் 29, 1949 அன்றே நடைமுறைக்கு வந்தன. இந்தியாவில் பிறந்தவர் குடியுரிமைக்கு தகுதியானவர், இந்தியாவில் பிறக்கவில்லையென்றாலும் பெற்றோர் இந்தியாவில் பிறந்திருந்தால் ஒருவரால் இந்திய குடியுரிமை பெற முடியும். ஜூலை 19, 1949ற்கு முன் ஒருவர் இந்தியாவிற்கு வந்திருந்தால் (அவரின் பெற்றோர் அல்லது பெற்றோரின் பெற்றோர் இந்தியாவில் பிறந்திருந்தால்) அவருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும். மார்ச் 1, 1947ற்கு பிறகு பாகிஸ்தானிற்கு சென்று அதன் பின் மீள்குடியேற்ற அனுமதியுடன் இந்தியா திரும்பியவர்களுக்கும் இந்திய குடியுரிமை வழங்கப்படும். ஜனவரி 26, 1950 மற்றும் ஜூன் 30, 1987ற்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் பிறந்தவர் இந்திய குடிமகனாவார். ஜூன் 30, 1987 மற்றும் டிசம்பர் 2, 2004ற்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களின் பெற்றோர்களில் ஒருவர் இந்திய குடிமகனாக இருந்தால் அவரும் இந்திய குடிமகன்தான். அதற்கு பின் பிறந்தவர்களில் பெற்றோர் இருவரோ அல்லது ஒருவர் இந்திய குடிமகனாக இருந்து மற்றவர் சட்டவிரோத குடியேற்றவாசியாக இல்லாமல் இருந்தால் அவரும் இந்திய குடிமகனே. இந்திய வம்சாவளியை சேர்ந்த வெளிநாட்டில் வாழும் ஒருவரும் இந்திய குடியுரிமையை கோர முடியும். இவை இந்திய குடியுரிமையை பெறுவதற்கு இந்திய அரசியல் சாசனம் வழங்கும் வழிமுறைகளாகும்.

ஆனால் குடியரிமை சட்டம் 1955இல் திருத்தங்களை கொண்டு வரத்துடிக்கும் பா.ஜ.க. அரசாங்கம், குடியுரிமைக்கு மத சாயத்தை பூசுகிறது. பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த இந்துகள், கிறிஸ்தவர்கள், பார்சிகள், சீக்கியர்கள், பௌத்தர்கள் மற்றும் சமணர்கள் இந்தியாவில் குடியுரிமை பெறலாம். டிசம்பர் 14, 2014ற்கு முன் இந்தியாவிற்கு வந்திருக்க வேண்டும், ஆறு வருடங்கள் இந்தியாவில் தங்கியிருக்க வேண்டும் (11 வருடங்கள் இந்தியாவில் தங்கியிருக்க வேண்டும் என்று தற்போதைய சட்டம் கூறுகிறது). இதுதான் அவர்கள் குடியுரிமை பெறுவதற்கான நிபந்தனை. இந்நாடுகளை சேர்ந்த முஸ்லிம்களுக்கு இச்சலுகை கிடையாது. மத அடிப்படையில் பாரபட்சம் காட்டக் கூடாது என்ற அரசியல் சாசனத்தின் பதினான்காவது ஷரத்திற்கு முற்றிலும் எதிரானது பா.ஜ.க.வின் இந்த முயற்சி. ஆனால் அரசியல் சாசனத்திற்கு பா.ஜ.க. கொடுக்கும் மதிப்பு நாமறிந்ததே.

ஜனவரி 1, 1966 மற்றும் மார்ச் 24, 1971ற்கு இடைப்பட்ட காலத்தில் அஸ்ஸாம் மாநிலத்திற்குள் நுழைந்தவர்கள் வெளிநாட்டினராக கருதப்படுவர் என்றும் அவர்கள் வெளிநாட்டினர் பதிவு சட்டம், 1939இன் கீழ் தங்களை பதிவு செய்ய வேண்டும் என்றும் அஸ்ஸாம் ஒப்பந்தம் கூறுகிறது. அரசியல் சாசனத்தையே ஓரமாக வைப்பவர்கள் அஸ்ஸாம் ஒப்பந்தத்தையா கண்டு கொள்ளப் போகிறார்கள்? இந்த மூன்று அண்டை நாடுகளில் வாழும் சிறுபான்மையினர் அங்கு மத ரீதியாக அடக்குமுறைகளை எதிர்கொள்வதாகவும் அவர்களை காப்பதற்கே இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது என்றும் பா.ஜ.க. கூறுகிறது.

இந்த மூன்று நாடுகளில் ஆப்கானிஸ்தானுடன் இந்தியாவிற்கு எல்லை கிடையாது. ஆனால் இந்தியாவுடன் எல்லையை பகிர்ந்துள்ள மியான்மரில் முஸ்லிம்கள் படும் அவலங்களை உலகறியும். உலகில் பெருமளவில் இன ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டவர்கள் ரோகின்கியா அகதிகள் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை தெரிவிக்கிறது. ஆப்கானிஸ்தானை பட்டியலில் இணைத்த பா.ஜ.க. அரசு மியான்மரை ஏன் இணைக்கவில்லை? அவர்களின் தெளிவான முஸ்லிம் விரோத போக்கை தவிர வேறென்ன காரணமாக இருக்க முடியும்? திபெத்தில் இருந்து வரும் அகதிகளுக்கு பதிவு மற்றும் அடையாள சான்றிதழ் வழங்கும் இந்திய அரசாங்கம் ரோகின்கியா அகதிகளை சந்தேகக் கண் கொண்டுதான் பார்க்கிறது.

அஸ்ஸாமில் என்.ஆர்.சி. மேற்கொள்ளப்பட்ட சமயத்திலும் பட்டியலில் இடம்பெறாத இந்துக்கள் கவலை கொள்ள வேண்டாம், அவர்களுக்கு குடியுரிமை சட்டதிருத்த மசோதா மூலம் இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்றும் அமித் ஷா ஆறுதல் கூறினார். அதாவது, சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று என்.ஆர்.சி.யால் அறிவிக்கப்பட்டவர்களுக்கு சட்டப்பூர்வ குடிமகன் அந்தஸ்து வழங்கப்படும்! ஆக, அஸ்ஸாமின் பூர்வ குடிகளை காப்பது இவர்களின் நோக்கமல்ல என்பதையும் முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டும் என்பதுதான் இவர்களின் திட்டம் என்பதும் தெளிவாகிறது. பள்ளிப் பாடப் புத்தகத்தில் ‘ஆரியர்கள் வருகை, முகலாயர் படையெடுப்பு’ என்று படித்தோமே, அதே போல் வங்கதேசத்தில் இருந்து வந்த இந்துக்கள் அகதிகள், முஸ்லிம்கள் வந்தேறிகள்.

ஆனால் அமித் ஷாவின் இந்த வார்த்தைகளை அஸ்ஸாமில் உள்ள இந்துக்களே எதிர்க்கின்றனர். அத்துமீறி நுழைந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்பதுதான் அவர்களின் கோரிக்கை. அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் குடியுரிமை சட்டதிருத்த மசோதாவிற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அங்குள்ள அரசியல் தலைவர்களும் இதனை எதிர்த்துள்ளனர். தங்கள் மாநிலத்தின் அல்லது பகுதியின் மக்கள் தொகை அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறி என்.ஆர்.சி.யை ஆதரித்த அதே அணியினர், பூர்வகுடிகளின் கலாசார, அரசியல் மற்றும் சமூக விவகாரங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறி குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்க்கின்றனர். இதனால், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள சில பகுதிகளுக்கு இந்த மசோதாவில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று சற்று இறங்கி வந்துள்ளார் அமித் ஷா. எதற்கெடுத்தாலும் ஒரே நாடு ஒரே… என்று நீட்டி முழுங்குபவர்கள் இப்போது இறங்கி வரக் காரணம் என்ன?

நாட்டின் குடிமகன் என்பதை நிரூபிக்கும் பாரத்தை எந்த நாடும் அதன் மக்கள் மீது சுமத்தியது கிடையாது. அதேபோல் மதத்தின் அடிப்படையில் குடியுரிமையை வழங்கும் பாரபட்சத்தையும் எந்த நாடும் இதுவரை காட்டவில்லை. இவை இரண்டையும் செய்யத் துடிக்கும் மத்திய பா.ஜ.க. அரசாங்கம் இந்தியாவை அவர்களின் இலக்கான இந்து ராஷ்டிராவை நோக்கி வேகமாக இழுத்துச் செல்வதையே இவை காட்டுகின்றன. ‘‘இந்தியா ஒரு இந்து ராஷ்டிரம். இதில் பேசுவதற்கு ஒன்றும் இல்லை’’ என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அக்டோபர் மாதம் கூறியதை இங்கு நினைவூட்டுகிறோம். இது முஸ்லிம்களுடன் மட்டும் நின்றுவிடாது. ஏனென்றால் கிறிஸ்தவர்கள், தலித்கள், கம்யூனிஸ்ட்கள்… அனைவரும் ஆர்.எஸ்.எஸ்.ற்கு எதிரிகள்தான். [/groups_member] … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.