இயக்குனர் பன்சாலி, நடிகை தீபிகா படுகோன் தலையை வெட்டுபவர்களுக்கு 10 கோடி ரூபாய் பரிசு:ஹரியான பாஜக தலைவர் அறிவிப்பு

0

இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் பத்மாவதி. இந்த படத்திற்கு இந்துத்வவாதிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பின் போதே அந்த திரைப்பட தளத்தை ராஜ்புத் கிராந்தி சேனா என்கிற அமைப்பை சேர்ந்தவர்கள் சேதப்படுத்தினார்கள்.

தற்போது தீபிகா படுகோன் மற்றும் இயக்குனர் பன்சாலி ஆகியோரின் தலையை வெட்டிக் கொண்டு வருபவர்களுக்கு ஐந்து கோடி ரூபாய் தருவதாக ராஜ்புத் சமூகத்தை சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார். இந்நிலையில், அந்த நபரின் செயலை பாராட்டிய ஹரியான பாஜக தலைவர் சுராஜ் பால் அமு, தீபிகா மற்றும் பன்சாலியின் தலையை துண்டிக்க கொடுக்கப்படும் பரிசுத்தொகை மட்டும் குறைவு என்று கூறியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அவர், “தீபிகா மற்றும் பன்சாலியின் தலையை துண்டிக்க ஐந்து கோடி ரூபாய் பரிசளிப்பதாக அறிவித்த மீரட் இளைஞரை நான் பாராட்டுகின்றேன். நாங்கள் அந்த காரியத்தை செய்பவர்களுக்கு பத்து கோடி ரூபாய் தருகிறோம். மேலும் அவர்களின் குடும்பங்களின் தேவைகளையும் நாங்கள் கவனித்துக்கொள்கிறோம்.” என்று கூறியுள்ளார்.

இந்த பிரச்சனைகளின் காரணமாக இந்த திரைப்படத்தின் வெளியீடு தற்போது தள்ளிப்போடப் பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால் தாங்களாகவே முன்வந்து தான் இந்த முடிவை எடுத்திருப்பதாக திரைப்பட தயாரிப்பு நிறுவனமான வியாகாம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த திரைப்படம் வரலாற்றை திரித்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறி இந்த திரைப்படத்திற்கு ராஜ்புத் கிராந்தி சேனா அமைப்பு தடை கோரியது. ஆனால் இந்த திரைப்படம் ராஜபுத்திரர்களின் வீரத்தையும், கண்ணியத்தையும், அவர்களின் கலாச்சாரத்தையும் பெருமையுடன் விளக்கியிருப்பதாக இந்த திரைப்படத்தை தயாரித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் இந்த திரைப்படம் முழுமையாக இல்லை என்று திரைப்பட தணிக்கை குழு கூறியுள்ளது. ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, இந்த திரைப்படம் எந்த சமூகத்தின் உணர்வுகளையும் புண்படுத்தும் விதத்தில் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே வெளியிடப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஸ்மிர்த்தி இராணியிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இந்தப் படத்திற்கு எதிரான மிரட்டல்களை திரைத்துறையை சார்ந்த பலர் படைப்புச் சுதந்திரத்திற்கு எதிரானது என்று கண்டித்துள்ளனர்.

Comments are closed.