இராணுவத்தின்  இந்த தோல்வி நல்லதற்கே! – விடியல் ஆகஸ்ட் 2016

0

 

பொதுவாக தங்கள் நாட்டின் இராணுவம் தோல்வியைத் தழுவுவதை எந்த நாட்டு மக்களும் விரும்புவதில்லை. ஆனால் ஜூலை 1516 தேதிகளில் தங்கள் இராணுவம் சந்தித்த தோல்வியை துருக்கிய மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடினர். துருக்கியில் ஜனநாயகத்தை படுகொலை செய்ய திட்டமிட்ட இராணுவத்தை பொதுமக்கள் வீதிகளில் இறங்கி வீழ்த்தியதுதான் இந்த கொண்டாட்டத்திற்கும் சந்தோஷத்திற்குமான காரணம்.

இராணுவ ஆட்சி கவிழ்ப்புகளுக்கு பெயர் பெற்ற துருக்கியில் கடந்த இரண்டு தசாப்தமாக ஆட்சி கவிழ்ப்புகளுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவை ஆரம்ப நிலையிலேயே துடைத்தெறியப்பட்டன. 2002 முதல் ஆட்சியில் இருந்து வரும் எர்துகானின் நீதி மற்றும் அபிவிருத்திக்கான கட்சியை (ஏ.கே.கட்சி) ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு இராணுவம் முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.

எர்துகான் ஆட்சியில் அமர்ந்த நாள் முதல் துருக்கி முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது. எர்துகானின் சில செயல்பாடுகள், மீது விமர்சனங்கள் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அவற்றையும் தாண்டி உலக முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் நாடுகளுக்கும் நம்பிக்கை அளிக்கும் நாடாக துருக்கி உருவாகியிருப்பதையும் யாரும் மறுக்க முடியாது. இஸ்லாத்தை ஜனநாயகத்திற்கு விரோதமானதாகவும் முஸ்லிம்களை ஜனநாயகத்திற்கு லாயக்கற்றவர்களாகவும் காட்ட முயற்சித்தவர்களுக்கு துருக்கி தகுந்த பதிலடியை கொடுத்து வருகிறது.

ஃபலஸ்தீன் உள்ளிட்ட சர்வதேச முஸ்லிம் விவகாரங்களில் துருக்கியின் நிலைப்பாடு மற்றும் நடவடிக்கைகள் அரபு நாடுகளை ஒப்பிடும் போது பன்மடங்கு மேன்மை வாய்ந்தது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி கூறலாம். அரசியல் ரீதியாக இஸ்லாம் வெற்றி பெறுவதை விரும்பாத சக்திகள் துருக்கியை வீழ்த்துவதற்கு பல முயற்சிகளை கட்டவிழ்த்து விட்டன. ஐ.எஸ். என்ற அடையாளம் தெரியாத பூதத்தின் பெயரில் துருக்கியில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. துருக்கியின் விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் தற்கொலை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. எர்துகான் மற்றும் அவர் ஆட்சிக்கு எதிராக சில வருடங்களுக்கு முன் போராட்டங்களும் நடைபெற்றன.

ஆனால் இவையெல்லாம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காததால் தங்கள் வழமையான பழமையான ஆயுதத்தை இஸ்லாம் மற்றும் துருக்கியின் விரோதிகள் கையில் எடுத்தனர். எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு துருக்கி இராணுவம் அதிகளவில் அரசியலில் மூக்கை நுழைப்பது வழக்கம் . மதச்சார்பின்மையின் காவலர்கள் என்ற முகமூடியுடன் மக்கள் நலனுக்காகவே தாங்கள் ஆட்சிக் கவிழ்ப்புகளை நடத்துவதாக துருக்கிய இராணுவம் இதுவரை காட்டி வருகிறது. நீதி மற்றும் அபிவிருத்தித்கான கட்சி, அரசியலில் இஸ்லாத்தை புகுத்துகிறது என்ற வாதத்தை அவ்வப்போது முன் வைப்பதற்கு சில இராணுவத்தினரும் இஸ்லாத்தின் விரோதிகளும் கூறுவதற்கு தயங்கியதுமில்லை. 2013ல் இதேபோன்ற இராணுவ சதிக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது, அந்த திட்டம் குறித்த தகவல் முன்னரே அறியப்பட்டு கைதுகள் மேற்கொள்ளப்பட்டு அம்முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது.

இச்சூழலில், ஜூலை 1516 நள்ளிரவில் ஆட்சியை கவிழ்ப்பதற்கான தனது முயற்சியை இராணுவத்தின் ஒரு பகுதியினர் மேற்கொண்டனர். ஜனாதிபதி எர்துகான், தனது குடும்பத்தினருடன் மர்மாரீஸ் என்ற கடற்கரை நகரத்தில் விடுமுறையில் இருந்த சமயம் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகள் செய்யப்பட்டன. அரசு தொலைக்காட்சி, ரேடியோ நிலையம், அரசாங்க கட்டிடங்கள் என பெரும்பான்மை இடங்களை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த இராணுவத்தினர், மதச்சார்பின்மையை காப்பாற்றவே இந்த ஆட்சிக் கவிழ்ப்பு என்ற பழைய பல்லவியை பாடினர்.

ஜூலை 15, இரவு 9 மணியளவில் இராணுவ புரட்சி என்ற தங்களின் சதியை இராணுவத்தின் ஒரு பகுதியினர் அரங்கேற்ற ஆரம்பித்தனர். இஸ்தான்புல் நகரின் இரண்டு முக்கிய பாலங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த இராணுவத்தினர் பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சுடவும் செய்தனர். இதில் பஸ்பரஸ் பாலம் இஸ்தான்புல்லை ஐரோப்பாவுடன் இணைக்கும் பாலமாகும். பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய இராணுவ கவச வாகனங்கள் அதே பொதுமக்களை நசுக்கின. ஹெலிகாப்டர்களும் தங்கள் பங்கிற்கு குண்டு மழை பொழிந்தன. நாடாளுமன்ற வளாகத்தில் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

டி.ஆர்.டி. தெலைக்காட்சியை அதிரடியாக கைப்பற்றிய இராணுவத்தின் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதாக அறிவிப்பும் செய்தனர். இராணுவத்தில் இடைநிலையில் உள்ளவர்களே இந்த சதியில் பெருமளவில் ஈடுபட்டனர். நீதித்துறையை சேர்ந்தவர்களும் இவர்களுக்கு ஒத்துழைப்பை கொடுத்தனர். படைத்தளபதி குர்ஸி ஆகார் உட்பட சிலர் இராணுவத்தினரால் சிறைவைக்கப்பட்டனர். விமானங்கள் இவர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டன.

விடுமுறையில் இருந்த எர்துகான் வேறு நாட்டிற்கு தப்பிச் செல்வார் என்றுதான் கிளர்ச்சியாளர்கள் நினைத்தனர். ஆனால் அனைத்து மிரட்டல்களையும் மீறி, இஸ்தான்புல்லின் விமான நிலையத்திற்கு வந்திறங்கினார் எர்துகான். அதற்கு முன்னரே, இராணுவத்தினரின் இந்த

முயற்சிறய முறியடிக்க மக்கள் வீதிகளில் இறங்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார். இதே போன்றதொரு அறிவிப்பை பிரதமர் பினாலி எல்டிரினும் விடுத்தார். பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் அழைப்புகளுக்கு பதிலளித்த மக்கள் உடனடியாக வீதிகளில் இறங்கி இராணுவத்தினரை எதிர் கொண்டனர்.

மர்மரீஸ் ஹோட்டவில் இருந்து தான் வெளியேறிய சில நிமிடங்களிலேயே அப்பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதாக எர்துகான் பின்னர் தெரிவித்தார். ஜனநாயகத்தை காப்பாற்ற வீதிகளில் இறங்குமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்தவர், தானும் மக்களுட்ன் இணைந்து இஸ்தான்புல்லில் போராட்டத்தில் நிற்பேன் என்றும் கூறினார். செவன்ன வார்த்தைகளுக்கு ஏற்ப சில மணித்துளிகளில் இஸ்தான்புல் விமான நிலையத்திற்கு வந்தார். எர்துகானின் உந்வேகமளிக்கும் வார்த்தைகளும் அவரின் தைரியமும் மக்களுக்கு உற்சாகத்தை கொடுத்தன்.

இராணுவ கவச வாகனங்களையும் துப்பாக்கிகளையும் வெறும் கைகளுடன் எதிர்கொண்ட மக்கள், இராணுவத்தினரை மண்டியிட வைத்தனர். ஜனநாயத்தை படுகொலை செய்யும் முயற்சியை ஒரு போதும் அனுமதிக்க  முடியாது என்பதை தங்கள் செயல்கள் மூலம் நிரூபித்த துருக்கி மக்கள், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் ஜனநாயத்தை காக்க வீதிகளில் இறங்கினர். மக்களின் இந்த எழுச்சியை எதிர்பார்க்காத இராணுவத்தினர் வேறு வழியின்றி பொதுமக்களிடம் சரணடைந்தனர். காவல்துறையினரும் பொதுமக்களுடன் இணைந்து இராணுவத்தினருக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். விமான நிலையம், தொலைக்காட்சி அலுவலகம் என அனைத்தையும் இராணுவத்தினரிடமிருந்து பொதுமக்கள் மீட்டனர். நள்ளிரவில் வீதிகளில் இறங்கிய மக்களின் போராட்டம் காரணமாக அன்றைய ஃபஜ்ர் அதானுடன் இராணுவ சதிப்புரட்சியின் தோல்வியும் அறிவிக்கப்பட்டது.

துருக்கி மக்களின் இந்த செயல் அனைவருக்கும் நல்லதொரு பாடமாக இருக்கிறது. எத்தனை வலிமை வாய்ந்த சக்தியாக இருந்தாலும் பொதுமக்களின் வலிமைக்கு முன் ஒன்றும் இல்லாமல் போய்விடும் என்பதை துருக்கி மக்கள் உணர்த்தினர். ‘எகிப்தில் முபாரக்கிற்கு எதிராக போராட்டம் நடைபெற்ற போது நான் அவர்களில் ஒருவனாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். இன்று துருக்கி மக்களில் ஒருவனாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று அல்ஜசீரா பத்திரிகையாளர் ஒருவர் குறிப்பிட்டார். வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் முஸ்லிம்களை இழித்தும் பழித்தும் செய்திகளை வெளியிடும் சர்வதேச ஊடகங்கள் இராணுவத்தின் சதியில் இருந்து சில மணிநேரங்களில் ஜனநாயகத்தை காப்பாற்றிய துருக்கி மக்களை எங்கனம் நோக்கப் போகின்றன?

துருக்கியில் நடைபெற்ற இந்த இராணுவ சதிக்கு எதிர்கட்சிகள் யாரும் ஆதரவளிக்கவில்லை என்பது மிக முக்கியமான விஷயம். அரசாங்கத்துடன் மோதல் போக்குகளை கையாண்டாலும் ஜனநாயத்தின் மீதான எதிர்கட்சிகளின் நம்பிக்கையும் இந்த சதியின் தோல்விக்கு முக்கிய காரணம் என்பதையும் மறுக்க முடியாது.

எர்துகான், நீதி மற்றும் அபிவிருத்திக்கான கட்சி ஆகியோரின் செல்வாக்கு மக்கள் மத்தியில் எந்தளவிற்கு உள்ளது என்பதையும் மக்களின் செயல்பாடுகள் நிரூபித்தன. 173 பொதுமக்கள், 62 காவல்துறையினர், 5 பாதுகாப்பு படையினர் என 240 பேர் இந்த சதி முயற்சியின் போது கொல்லப்பட்டனர். இது தவிர, சதியில் ஈடுபட்ட 24 பேரும் கொல்லப்பட்டனர். இராணுவ அதிகாரிகள் உட்பட ஏறத்தாழ இருபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கலகக்காரர்கள் தங்களின் செயல்பாடுகளுக்கான சரியான விலையை கொடுப்பார்கள் என்று எர்துகான் எச்சரித்துள்ளார். இராணுவத்தின் ஒரு பகுதியினர் இச்செயலில் ஈடுபட்டதாகவும் அவர்கள் நாட்டின் ஒற்றுமையை குறிவைத்ததாகவும் குற்றம்சாட்டினார்.

சில இராணுவ தளபதிகள் சதியில் பங்குபெறாமல் ஜனநாயகத்தின் பக்கம் நின்றனர் என்பதையும் நாம் இங்கு குறிப்பிட வேண்டும். முதலாம் படைத்தளபதி உம்மியத் தோன்தார் என்பவரை தங்களுடன் இணையுமாறு சதிகாரர்கள் அழைப்புவிடுத்து போது, சிந்திக்க அவகாசம் தேவை என்று கூறியவர், எர்துகானுக்கு தகவல்லை வழங்கினார். துருக்கியின் உளவுப் பிரிவு மற்றும் அதன் தலைவர் ஹகன் ஃபீதான் ஆகியோரின் பங்களிப்பும் முக்கியமானது.

அமெரிக்காவில் வசித்து வரும் துருக்கியை சேர்ந்த ஃபத்ஹூல்லாஹ் குலன் இந்த சதி முயற்சிக்கு காரணம் என்றும் எர்துகான் குற்றம்சாட்டினார். குலன் தற்போது அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் வாழ்ந்து வருகிறார். 1999ல் துருக்கியில் இஸ்லாமியவாதிகள் மீது அடக்குமுறைகள் அதிகமான போது, குலன் அமெரிக்காவிற்கு சென்றார். துருக்கியின் இராணுவத்தில் உள்ள சிலருடன் குலனின் ஹிஸ்மத் (ஹித்மத்) அமைப்பை சேர்ந்தவர்கள் தொடர்பில் உள்ளதாக துருக்கி அரசாங்கம் குற்றம்சாட்டி வருகிறது. எர்துகானின் இந்த குற்றச்சாட்டை ஹிஸ்மத் அமைப்பினர் மறுத்துள்ளனர். கல்வி, வியாபாரம், அதிகார வர்க்கம் என அனைத்து துறைகளிலும் இடம்பிடித்துள்ள ஹிஸ்மத் அமைப்பினர் உளவுத்துறையிலும் ஊடுருவி இருக்கலாம் என்று எர்துகான் தெரிவித்துள்ளார்.

அரசியல் முறையை எதிர்க்கும் குலன், ‘ஜிப்ரீல் (அலை) வந்து அரசியலில் ஈடுபடுமாறு கூறினாலும் அதில் ஈடுபடமாட்டேன்’ என்று ஒருமுறை கூறினார். தன்னை ஒரு ஆன்மீக குருவாகவே காட்டி வரும் குலன், அரசியல் பாதை வேண்டாம் என்று கூறினாலும் அவர் அரசியல்தான் செய்து வருகிறார் என்பதை அவரின் செயல்பாடுகள் காட்டுகின்றன. குலனின் செயல்பாடுகள் விமர்சனம் நிறைந்தவை. காஸாவிற்கு துருக்கியில் இருந்து நிவாரண கப்பல்கள் அனுப்பப்பட்ட போது அதனை கடுமையாக விமர்சித்தார். அரபு வசந்தத்திற்கு ஆதரவு, எகிப்பதில் முர்ஸிக்கு ஆதரவு என எர்துகானின் அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்த்தார். ஃபலஸ்தீனில் போராடி வரும் ஹமாஸ் இயக்கத்தையும் குறைகாண குலன் தவறவில்லை.

தன்னை ஒரு ஆன்மீக குரு என்றும் இஸ்லாமியவாதி என்றும் கூறிக்கொள்ளும் குலன், முஸ்லிம்களை விட மதச்சார்பற்றவர்களிடமும் இதர முஸ்லிம் எதிரிகளுடனும்தான் அதிக கரிசனத்தை காட்டி வருகிறார். ‘எனக்கு மறுமையில் மன்றாடும் உரிமை இருந்தால் அதனை எசாவிட் அவர்களுக்கே வழங்குவேன்’ என்று ஒரு முறை குலன் கூறினார். இடதுசாரி ஜனநாயக கட்சியின் தலைவர்தான் இந்த எசாவிட் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். துருக்கி இஸ்லாமிய அறிஞர் பதியுஸ் ஸமான் ஸைது நூர்சியின் வழிவந்தவர் என்று தன்னை கூறிக் கொள்ளும் குலனின் பெரும்பான்மை செயல்பாடுகளை நூர்சியின் சிந்தனை தாக்கத்தினால் உருவான மற்ற அமைப்புகள் ஏற்பதில்லை.

ஃபத்ஹூல்லாஹ் குலன் மீதான குறறச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை அமெரிக்காவிடம் அளித்துள்ளதாக எர்துகான் தெரிவித்துள்ளார். குலனை அமெரிக்கா துருக்கியிடம் ஒப்படைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த சதி முறியடிக்கப்பட்டாலும் இதற்கான மாற்று சதித்திட்டம் ஒன்று இருக்கலாம் என்ற எச்சரிக்கையுடனே உளவுத்துறையும் ஆட்சியாளர்களும் இருந்து வருகின்றனர்.

இந்த சதியை செயல்படுத்தியவர்கள் யார், திட்டத்தை தீட்டியவர்கள் யார், யாருடைய தூண்டுதலின் பெயரில் இவர்கள் செயல்பட்டார்கள் என்ற உண்மைகள் வெளியே வர இன்னும் சில நாட்கள் ஆகலாம். எது எப்படியிருந்தாலும், முறியடிக்கப்பட்ட இந்த சூழ்ச்சி ஜனநாயகத்தை விரும்பக் கூடிய மக்கள், குறிப்பாக சர்வதேச முஸ்லிம் சமூகத்தினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எகிப்தில் வீழ்த்தப்பட்ட இஹ்வானுல் முஸ்லிமீன் தலைமையிலான ஜனநாயக அரச, ஃபலஸ்தீனில் முடக்கப்பட்டுள்ள ஹமாஸ் தலைமையிலான ஜனநாயக அரசு, துனீசியாவில் நெருக்கடிகளுக்கு மத்தியில் பயணித்து வரும் அந்நஹ்தாவின் அரசியல் பயணம் என தொடர்ந்து சோதனைகளையும் இழப்புகளையும் சந்தித்து வரும் சர்வதேச முஸ்லிம் சமூகம் இந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சி குறித்த செய்தி கிடைத்தவுடன் அதிர்ச்சியில் உறைந்தது.

சதி முறியடிக்கப்பட்ட செய்தி கிடைத்தவுடன் துருக்கி மக்களுக்கு இணையான சந்தோஷத்தை சர்வதேச சமூகமும் பெற்றது என்றால் அது மிகையல்ல. இது துருக்கி மக்களுக்கு மட்டுமின்றி அரசியல் இஸ்லாத்தின் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய அறிஞர்கள் துருக்கிக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவிப்பதுடன் அவர்களுக்கான பிரார்த்தனைகளையும் அதிகரித்துள்ளனர்.

அதே சமயம் துருக்கி மற்றும் இஸ்லாத்தின் எதிரிகளுக்கு இது தாங்க இயலா கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இராணுவத்தினரின் முயற்சிகளை பல்வேறு நாடுகளும் கண்டித்தாலும் அவை வெறும் பெயரளவிலான கண்துடைப்புகளாகவே உள்ளன. ஒருவேளை இந்த இராணுவ சதி முயற்சி வெற்றி பெற்றிருந்தாலும் இந்த நாடுகள் எந்த நடவடிக்கையிலும் இறங்கி இருக்காது என்று நாம் தெளிவாகக் கூறலாம். எகிப்தில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்த்துவிட்டு ஆட்சியை பிடித்த அப்துல் ஃபத்தாஹ் சிசியுடள் இவர்கள் பாராட்டி வரும் நட்பு இதற்கோர் சான்று.

இந்த சதி ஏன் தோல்வியை தழுவியது என்ற ஆதங்கமே பல மேற்கத்திய தலைவர்களுக்கும் ஊடகங்களுக்கும் இருப்பதை அவர்களின் வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன. இராணுவ புரட்சியை எவ்வாறு வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்ற தொனியில் ஆலோசனை கூறியவர்களின் எழுத்துகளை தமிழ் நாளிதழ்களும் வெளியிட தவறவில்லை. அரபுலக ஊடகங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. தங்கள் நாடுகளில் இருக்கும் மன்னராட்சி குறித்து வாய் திறக்காத இவர்கள் இராணுவத்தினர் மேற்கொண்ட இந்த சதியை ஜனநாயக புரட்சி என்று அழைத்தனர். ‘இராணுவம் எர்துகானை வீழ்த்தி விட்டது’ என்று தலைப்பிட்டு தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். சில ஊடங்கள் மாத்திரம் இதற்கு விதிவிலக்காக இருந்தன.

இதன் தொடர்ச்சியாகவே தற்போது நடைபெற்று வரும் கைதுகளையும் இடைநீக்கங்களையும் அவர்கள் விமர்சித்து வருகின்றனர். இதனை கடுமையாக கண்டித்துள்ள எர்துகான் புரட்சி முயற்சியை தேசதுரோகமாக பார்க்க வேண்டியது அவசியம் என்றும் அதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் குலன் இயக்கத்தினர் மீதான நடவடிக்கைகளை அவர்களை அழிப்பதற்கான முயற்சியாக பார்க்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

உலகில் எங்கெல்லாம் துரோகமும் அக்கிரமமும் நடைமுறைபடுத்தப்படுகிறதோ அங்கெல்லாம் அமெரிக்காவின் கை இருக்கும் என்பதை வரலாறு நிரூபித்து வருகிறது. ஆனால், இந்த சதியில் சதிகாரர்கள் இன்னும் அதிகமாக இருக்கலாம் என்ற கருத்தே பெரும்பான்மையாக நிலவுகிறது.

‘ரஷ்யா  ஈரான் கூட்டு திட்டத்தில் வளைகுடா நாடொன்றின் நிதி உதவியுடன் எகிப்திய பாணியில் துருக்கியில் சதிக்கான திட்டமிடல்கள் உள்ளதாக’ குவைத் இஸ்லாமிய அறிஞர் அப்துல்லாஹ் நபீஸி ஜனவரி மாதம் தனது டிவிட்டரில் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமிய உலகிற்கு தற்போதுள்ள சூழலில் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்து வரும் துருக்கியின் ஆட்சியை சீர் குலைத்து அங்கு பிரச்சனைகளை கிளப்ப வேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்த சதி தீட்டப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டள்ளது. சமீப ஆண்டுகளில் துருக்கி பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருவதை நாம் கவனிக்கலாம். சிரியா எல்லையில் பதற்றம், அகதிகள் பிரச்சனை, சிறு பிரச்சனைகளையும் பூதாகரமாக்கும் சில உள்ளூர் முகவர்கள், குண்டுவெடிப்புகள், ஐ.எஸ்.தாக்குதல்கள், விமான நிலைய தாக்குதல் என பிரச்சனைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. பிரச்சனைகளுக்குள்ளாக துருக்கியை சூழலவிட்டு அதன் வளர்ச்சியை மட்டுப்படுத்தி அதன் மூலம் உலக முஸ்லிம்களின் நம்பிக்கையையும் முன்னேற்றத்தையும் மட்டுப்படுத்தலாம் என்ற குறுமதியுடனேயே இஸ்லாத்தின் விரோதிகளும் முஸ்லிம் விரோதிகளும் செயலாற்றி வருகின்றனர். இந்த இழிசெயலுக்கு சில முஸ்லிம் நாடுகளும் அதன் ஆட்சியாளர்களும் துணை நிற்கின்றனர் என்பது வெட்கக்கேடானது.

ஆனால் அத்தனை சதிகளையும் முறியடிக்கும் வல்லமை இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் இருக்கிறது என்பதை துருக்கி நிரூபித்துள்ளது. நடுநிசியில், அணிவகுத்து வரும் இராணுவ கவச வாகனங்களுக்கு முன் அணிவகுத்து நின்ற துருக்கி மக்கள் முஸ்லிம்களுக்குள் நம்பிக்கை விதைகளை விதைத்துள்ளனர். இராணுவத்திற்கு உரிய மரியாதையை கொடுக்க வேண்டியது அவசியம்தான். அதற்காக ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் காலில் போட்டு மிதிக்கும் போது அதை பார்த்து வாய்மூடி மௌனமாக இருக்க முடியாது என்பதையும் துருக்கியர்கள் உணர்த்தியுள்ளர்.

பல மணிநேர ஆலோசனைகள், டிரில்லியன் டாலர் செலவு என மிகப்பிரம்மாண்டமாக தீட்டப்பட்ட இந்த சதித் திட்டம் சில மணித்துளிகளில் ஒன்றும் இல்லாமல் போய்விட்டது. ‘அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர். அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராக) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிக மேன்மையுடையவன்‘ (அல்குர்ஆன்: 8:30) என்ற குர்ஆன் வசனத்தின் விளக்கத்தை கண்முன் காண்பது போல் துருக்கி நிகழ்வுகள் அமைந்தன என்றால் அது மிகையல்ல.

Comments are closed.