இராணுவத்தில் மோசமான உணவு வழங்கப்படுகிறது என்று புகாரளித்த வீரரின் மகன் துப்பாக்கியால் சுட்டு மரணம்
இராணுவத்தில் உணவு சரியாக இல்லை என்று வீடியோ மூலம் இராணுவ வீரர்களின் கஷ்டங்களை தெரிவித்த எல்லை பாதுகாப்புப் படை வீரர் தேஜ் பகதூர் யாதவின் 22 வயது மகன் மர்மான முறையில் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளார். காவல்துறை இவரது மரணம் தற்கொலை என்று தெரிவித்துள்ளது.
ஹரியானாவின் ரேவாரி மாவட்டத்தில் உள்ள தனது வீட்டில் ரோஹித்தின் உடல் கையில் துப்பாக்கியுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் போது முன்னாள் வீரர் தேஜ் பகதூர் கும்ப மேலாவிற்கு சென்றிருந்தார்.
இது குறித்து காவல்துறை தெரிவிக்கையைல், “எங்களுக்கு ரோஹித் தற்கொலை செய்துகொண்டார் என்று அழைப்பு வந்தது. சம்பவ இடத்திற்கு சென்று பார்க்கையில் அவரது அறை உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்தது. கையில் ஒரு கைத்துப்பாக்கியுடன் அவரது உடல் படுக்கையின் மேல் இருந்தது. கும்ப மேலாவில் பங்கெடுக்கச் சென்ற அவரது தந்தைக்கு தகவல் அளித்துள்ளோம்.” என்று தெரிவித்துள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு எல்லை பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை விமர்சித்து தேஜ் பகதூர் வீடியோ பதிவு செய்திருந்தார். அதில் தேஜ் பகதூர் தனது கையில் ஒரு கருகிப்போன ரொட்டியும், ஒரு தேநீரும் வைத்திருக்கும் நிலையில் இது தான் தங்களது காலை உணவு என்று கூறினார். ரொட்டிக்கு கூடுதலாக ஊறுகாய் கூட இல்லை என்றும் அவர் தெரிவித்தார். மற்றொரு கானொளியில், மோசமான சமையல் நிலையில், ஒரு பாத்திரத்தை காட்டிய அவர் அது தான் பருப்பு என்றும் அதில் வெறும் மஞ்சள் மட்டும் தான் இருக்கிறது என்றும் கூறியிருந்தார். அத்துடன் வீரர்களுக்கு தரப்பட வேண்டிய உணவுப் பொருட்களை வெளி சந்தையில் விற்கப்படும் இராணுவ அதிகாரிகள் மட்டத்தில் நடக்கும் ஊழல் குறித்தும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இவர் அவரது இந்த பதிவுகளையடுத்து பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்பட்டார். இவருக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு உள்ளது என்பதில் தொடங்கி பல்வேறு விதமான குற்றச்சாட்டுகள் இவர் மீது அடுக்கப்பட்டன. இறுதியில் பணியில் இருக்கும் போது இரண்டு அலைபேசி பயன்படுத்தினார் என்றும் சீருடை அணிந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார் என்றும் கூறி இவர் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இவர் எல்லை பாதுகாப்பு பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.