இராணுவ உயிர்த்தியாகியின் மகளை தத்தெடுத்த IAS-IPS  தம்பதியினர் யூனுஸ்-அஞ்சும்

0

சமீபத்தில் பாகிஸ்தானிய படையினரால் கொலை செய்யப்பட்டு உடல் சிதைக்கப்பட்ட இராணுவ வீரர் பரம்ஜித் சிங்கிற்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது 12 வயது மகளை தத்தெடுத்துள்ளனர் ஹிமாச்சல பிரதேச IAS-IPS தம்பதியினர்.

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் அருகே உள்ள பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணா காட்டி பகுதியில் வைத்து சுபேதார் பரம்ஜித் சிங் கடந்த மே 1 ஆம் தேதி கொல்லப்பட்டார். இவருடன் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் பிரேம் சாகர் என்பவரும் கொல்லப்பட்டார். இவர்களது உடல்கள் பாகிஸ்தானிய படையினரால் சிதைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2010 ஆம் வருடப் பிரிவு IAS அதிகாரி யூனுஸ் கான் மற்றும் 2011 வருடப் பிரிவு IPS  அதிகாரியான அவரது மனைவி அஞ்சும் அரா என்பவர்கள் பரம்ஜித் சிங்கின் 12 வயது மகள் குஷ்தீப் கவுரை தாங்கள் தத்தெடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு நான்கு வயது மகன் ஒருவன் உள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

தாக்குதலில் கொல்லப்பட்ட வீரர் பரம்ஜித் சிங்கின் மனைவியை இந்த தம்பதியினர் தொடர்பு கொண்டு குஷ்தீப் கவுரின் கல்வி முதல் திருமணம் வரையிலான அனைத்து செலவுகளையும் தாங்கள் பார்த்துக் கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார். இந்த காலங்களில் குஷ்தீப் அவரது குடும்பத்தாருடனே இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தம்பதியினர் குஷ்தீபை அவ்வப்போது சந்தித்து அவர்களது பிரச்சனைகளை கேட்டறிந்து அதனை சரி செய்ய இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். குஷ்தேப் IAS அல்லது IPS ஆக விருப்பப்பட்டாலோ அல்லது வேறேதேனும்   துறைகளை தேர்வு செய்தாலோ அதற்கு தாங்கள் உதவி புரிவோம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் தங்களின் இந்த செயல் இந்த நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் அனைவரும்  செய்ய வேண்டிய சிறிய பங்களிப்பு தான் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். குஷ்தீப்பிறகு சிறந்த கல்வி கிடைக்கச் செய்வது மூலம் தாங்கள் இந்த நாட்டின் பொறுப்புள்ள குடிமக்களாக தங்களின் கடைமைகளை செய்வதாக அவர் கூறியுள்ளார்.

இவர்களின் இந்த உதவியால் நெகிழ்ந்து போன பரம்ஜித்தின் சகோதரர் ரஞ்சித் சிங், “இந்த அன்பு மனம் படைத்த தம்பதியினருக்கு எவ்வாறு நன்றி செலுத்துவது என்று எனக்கு தெரியவில்லை” என்று கூறியுள்ளார். மேலும் இவர்களின் இந்த செயல் மலேர்கொட்லா பகுதி முஸ்லிம் ஆட்சியாளர் நவாப் ஷேர் முஹம்மத் கானை தனக்கு நினைவு படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.