இறந்த பசுவின் உடலை அகற்ற மறுத்ததால் தலித் கர்பிணிப்பெண்  மீது தாக்குதல்

0

குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள மோடா கர்சா கிராமத்தில் இறந்த பசுவின் உடலை அகற்றகோரி தலித் குடும்பத்தினரை உயர் சாதியினர் சிலர் வற்புறுத்தியுள்ளனர். இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவிக்கவே கர்பிணிப் பெண் ஒருவர் உட்பட அந்த தலித் குடும்பத்தை சேர்ந்த அனைவரையும் உயர் சாதியினர் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட தலித் குடும்பம் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அவர்களுக்கு பாதுகாப்பும் கொடுக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையின் படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாக்குதலுக்கு உள்ளானவர்களிடம் பசுவின் சடலத்தை கடந்த வெள்ளிக்கிழமை இரவு அகற்றக் கோரியுள்ளனர். ஆனால் அவர்கள் அதனை அடுத்தநாள் காலை செய்வதாக கூறியுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த உயர் ஜாதியினர் அந்த தலித் குடும்பத்தின் வீட்டினுள் நுழைந்து அக்குடும்பத்தினரை கடுமையாக தாக்கியுள்ளனர். இன்னும் அந்த வீட்டில் இருந்த கர்ப்பிணிப்பெண் ஒருவரின் வயிற்றிலும் கடுமையாக தாக்கியுள்ளனர். அவர்களை தாக்கும் போது அந்த உயர் ஜாதியினர், ஜாதியை கூறி தாக்குதலுக்கு உள்ளனவர்களை தூற்றியதாகவும் தெரிகிறது. இறுதியில் அவர்களை கொலை செய்துவிடுவதாக மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக நட்வர்சிங் சவ்ஹான், மக்னுசிங் சவ்ஹான், நரேந்திரசிங் சவ்ஹான், யோகிசிங் சவ்ஹான், பாபர்சிங் சவ்ஹான் மற்றும் தில்கர்சிங் சவ்ஹான் என்ற ஆறு பேரை காவல்துறை கைது செய்துள்ளது. இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 315 இன் கீழும் இன்னும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான கொடுமை சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Comments are closed.