இறைசிக்காக மாடு விற்க தடை: மேகாலயாவில் மற்றுமொரு பாஜக தலைவர் கட்சியில் இருந்து விலகல்

0

மத்திய பாஜக அரசு இறைச்சிக்காக மாடுகளை விற்பதை நாடு முழுவதும் தடை செய்து உத்தரவு பிறப்பித்தது. இந்த தடைகுப் பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டாலும் பாஜக வில் உள்ள தலைவர்கள் சிலரே இந்த உத்தரவுக்கு எதிராக களம் இறங்கினர்.

இந்த உத்தரவை கண்டித்து ஜூன் மாதம் 1 ஆம் தேதி பாஜக தலைவர் பெர்னார்ட் மரக் கட்சியில் இருந்து வெளியேறினார். அப்போது, “பாஜக இந்த மாட்டிறைச்சி பிரச்சனை மூலம் மக்களின் உணர்வுகளை புண்படுத்துகின்றது. ஆதிவாசி சமூகத்திற்கென்று தனிச் சட்டங்கள் உள்ளன. பாஜக அவர்களிடம் இந்துத்வத்தை திணிக்க நினைக்கிறது” என்று அவர் கூறியிருந்தார். மேலும் ஜூன் 10 தேதி தான் மாட்டிறைச்சி விருந்து ஒன்று நடத்தப்போவதாகவும் அவர் தெரவித்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது மற்றுமொரு பாஜக தலைவரும் கட்சியின் இந்த முடிவை எதிர்த்து பாஜகவில் இருந்து விலகியுள்ளார். வடக்கு காரோ மலைப்பகுதியின் பாஜக தலைவர் பச்சு மரக் என்பவர் மாட்டிறைச்சி விவகாரத்தில் காரோஸ் மக்களின் உணர்வுகளை தன்னால் விட்டுக்கொடுக்க முடியாது என்று கூறி கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

ஒரு வார காலத்திற்குள் மாட்டிறைச்சி தடை காரணமாக பாஜகவில் இருந்து விலகும் இரண்டாவது தலைவர் இவர். இவரது ராஜினாமா அங்கு சட்டமன்ற தேர்தல் நடக்க ஒரு வருட காலம் இருக்கும் நிலையில் ஏற்பட்டுள்ளது.

மாட்டிறைச்சி உண்பது காரோ இன மக்களின் பண்பாடு மற்றும் பாரம்பரியம் என்றும் காரோ பகுதியை சேர்ந்த தான் தன் சமூக மக்களின் உணர்வுகளை பாதுகாக்கும் பொறுப்பு உடையவர் என்றும் பாஜக வின் மதசார்பு கொள்கைகளை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக மோடியின் மூன்று வருட ஆட்சியினை கொண்டாடும் பொருட்டு இவர் மாட்டிறைச்சி விருந்து ஒன்றை ஏற்பாடு செய்யவிருந்தார் என்று கூறப்படுகிறது. ஆனால் அவரின் இந்த முடிவை கட்சி மேலிடம் கண்டித்ததை அடுத்து அதனை அவர் கைவிட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இவரது இந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்த பாஜக வின் மேகாலயா பொறுப்புதாரியான கோலி, மரக்கின் ராஜினாமாவை தான் வரவேற்பதாக கூறியுள்ளார். மேலும் அவர் மீது கட்சியின் நடவடிக்கைகள் துவங்கிவிட்டது என்றும் மரக் கட்சிக்கு எதிராக பணியாற்றி வந்தவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாஜக வின் மாநில தலைவர் லிங்தோ, மரக் தனது கருத்துக்கள் மூலம் மக்களை திசை திருப்பப் பார்கிறார் என்றும், பாஜக அரசியல் சாசனத்திற்கு எதிரான எதையும் மக்கள் மீது திணிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் மாட்டிறைச்சி மீதான தடை வடகிழக்கு மாநிலங்களுக்கு இல்லை என்றும் உத்திர பிரதேசத்தின் நடப்பது போன்று இங்கு மாட்டிறைச்சி கடைகள் மூடப்படாது என்றும் அப்பகுதி பாஜக தலைவர்கள் கூறிவந்தனர். கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் இந்த மாநிலங்களில் மாட்டிறைச்சி என்பது மக்களின் அன்றாடம் உணவுவகைகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.