இலங்கையில் மீண்டும் பயங்கரம்: கொழும்பு நீதிமன்றத்தில் இன்று குண்டு வெடிப்பு!

0

கடந்த ஞாயிற்றுக்கிழமை, இலங்கையில் மொத்தம் 8 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டதில் 350க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இந்த நிலையில், இலங்கையில் அதுவும் குறிப்பாக தலைநகர் கொழும்பில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனங்கள் சுற்றித் திரிவதாக தகவல்கள் வெளியாகி பீதியை ஏற்படுத்தின.

கொழும்பு திரையரங்குகள் அருகே பைக்கில் வைக்கப்பட்ட வெடிகுண்டு ஒன்று நேற்று கண்டுபிடிக்கப்பட்டு, பாதுகாப்புடன் வெடிக்க வைக்கப்பட்டது. முன்னதாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் செல்லும் பாதையில் பைப் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று, காலை கொழும்பு நகரிலிருந்து, சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள பூகொட நீதிமன்ற வளாகத்தில் திடீரென குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் பின் பகுதியில், உள்ள காலி இடத்தில் குப்பைகள் கொட்டும் இடத்தில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதி என்பதால், இந்த குண்டு வெடிப்பில், யாருக்கும் காயம் இல்லை என்று முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.