இலங்கை குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 300ஐ தாண்டியது: அதிரடி நடவடிக்கை எடுக்க முப்படைகளுக்கு முழு அதிகாரம்!

0

இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் என 8 இடங்களில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்தின் பதற்றம் தணிவதற்குள் நேற்று மதியம் 9வது குண்டு வெடித்தது. விமான நிலையம், பஸ் நிலையம் அருகே மேலும் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதால் பதற்றம் அதிகரித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய, முப்படைகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில் அவசரநிலையை பிரகடனப்படுத்தி அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். இது நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதற்கிடையே, குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 300ஐ தாண்டி உள்ளது.  இலங்கை தலைநகர் கொழும்புவில் 3 தேவாலயங்கள், 3 நட்சத்திர ஓட்டல்கள் என 8 இடங்களில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்துச் சிதறின. இந்த பயங்கர தாக்குதலில், ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் உடல் சிதறி பலியாயினர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அசம்பாவிதங்களை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

உலகையே உலுக்கிய இந்த சம்பவத்தை நடத்தியவர்களை பிடிக்க பாதுகாப்பு படையினரும் போலீசாரும் தீவிர விசாரணையில் களமிறங்கினர். அவசரநிலை பிரகடனம்: இந்நிலையில், உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அவசர நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக அதிபர் மைத்ரிபால சிறிசேனா தலைமையிலான தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று கூடியது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் முப்படை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், நள்ளிரவு 12 மணி முதல் நாட்டில் அவசரநிலையை பிரகடனப்படுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முப்படைகளுக்கும், போலீசாருக்கும் கூடுதல் அதிகாரம் வழங்கும் விதமாக,  தீவிரவாத தடைச்சட்டத்துடன் சம்மந்தப்பட்ட சட்ட விதிமுறைகளுக்கான அவசர நிலையை பிரகடனப்படுவதாக அதிபர் சிறிசேனா கூறினார். இதன்படி அவசரநிலை பிரகடனம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

Comments are closed.