இலங்கை ஜனநாயகத்தின் மதிப்பு என்ன?

0

இலங்கை ஜனநாயகத்தின் மதிப்பு என்ன?

கடந்த சில வாரங்களாக இலங்கையில் நிகழ்ந்து வரும் அரசியல் குழப்பங்கள் இராணுவ சதி இல்லாமலே ஜனநாயகத்தை நிலைகுலையச் செய்ய முடியும் என்பதை எடுத்துக் காட்டுகின்றன. கட்டுரை எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் இத்தருவாயில் இலங்கை நாடாளுமன்றம் ஜனாதிபதியால் கலைக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றம் ஜனாதிபதியால் கலைக்கப்பட்டிருப்பது அரசியல் சாசனத்திற்கு தெளிவாக முரணானது என சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

2,500 வருடங்களுக்கு மேற்பட்ட இலங்கை வரலாற்றில் அரசியல், அதிகாரம், நிர்வாக நெறிமுறைகள் உள்ளடங்கிய பாரம்பரியமொன்று இருந்து வருகின்றது. ஆங்கில காலனித்துவத்துக்குப் பிந்தைய இலங்கை, ஆசியாவின் மிக நீண்ட ஜனநாயகங்களுள் ஒன்றாகவும் கருதப்படுகின்றது.

சிங்கப்பூர், 1960இல் மலேசியா ஒன்றிய அரசை விட்டும் திடீரென நீக்கப்பட்டு தனிமைப்படுத்தப் பட்டது. அப்போது அன்றைய சிங்கப்பூர் அதிபர் லீ குவான் யூ ‘நான் சிங்கப்பூரை இலங்கை போன்று மாற்றிக் காட்டுவேன்’ என்று சொன்ன வாசகம் இன்றளவும் இலங்கையர்களால் பழம்பெருமையோடு நினைவுபடுத்தப்படுகின்றது. அந்தளவுக்கு உயர்ந்த உட்கட்டுமான (மிஸீயீக்ஷீணீstக்ஷீuநீtuக்ஷீமீ) வசதிகளோடு ஜனநாயகப் பூர்வமான அரசியல் சாசனத்தையும் கொண்ட தேசமாக இலங்கை சுதந்திரமடையும் போது காணப்பட்டது. தொடர்ச்சியாக தோல்வியடைந்த தலைவர்களின் தவறிய வழிகாட்டலால் ஒரு தேசத்தின் உயர் மதிப்புமிக்க அரசியல் சாசனமும் மீறப்பட்டு அரசியல் இன்று நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கிறது.

பல இனங்கள் கொண்ட இலங்கையை ஒருமைப்பாட்டுடன் நிர்வகிப்பதில் கண்ட தோல்வியின் விளைவாக இச்சிறிய தேசம் 30 வருடங்கள் நீடித்த யுத்தத்தை கண்டது. இன நல்லிணக்கம், அபிவிருத்தி, உட்கட்டுமான வசதிகள் அனைத்தும் இந்த யுத்தத்தில் சிதைந்தன.

மூன்று தசாப்தங்கள் நீடித்த யுத்தத்தில் எந்த ஜனாதிபதிக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பு 2009 இல் ஜனாதிபதியாக இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கிடைத்தது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆயுதப் போராட்டம் இராணுவ ரீதியில் மஹிந்த ராஜபக்க்ஷ காலத்தில் வெற்றிகொள்ளப்பட்டது. தேசத்தின் மீட்பராக சிங்களக் கிராமங்களின் மூலைமுடுக்கெங்கும் மஹிந்த ராஜபக்க்ஷ கொண்டாடப்படுகிறார்.

என்றாலும் இரத்தம் தோய்ந்த வன்முறைப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததன் மூலம் நல்லிணக்கமும் அமைதியும் நிரம்பிய சுபிட்சமான தேசமொன்றைக் கட்டியெழுப்பு வதற்கு கிடைத்த அற்புதமான வரலாற்று வாய்ப்பை அவர் தவறவிட்டார். யுத்த காலத்திலேயே அதிகரித்துவிட்ட ராஜபக்க்ஷ குடும்பத்தின் இரும்புப் பிடி ஆட்சி, யுத்தம் நிறைவுக்கு வந்ததும் மேலும் அதிகரித்தது. ஏறத்தாழ எதிர்க்கட்சிகள் அனைத்துமே பல துண்டுகளாகத் துவம்சம் செய்யப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சிகளைவிட்டும் பிரித்தெடுக்கப்பட்டு ராஜபக்க்ஷ குடும்பத்தின் அரசியல் இலாபங்களுக்கான நாடாளுமன்ற அங்கீகாரத்துக்கு கையுயர்த்தும் பொம்மைகளாக மாற்றப்பட்டனர்.

இந்தியாவை விடவும் பரப்பளவில் 60 மடங்கு குறைந்த இலங்கையை 100க்கு மேற்பட்ட அமைச்சர்கள் மூலம் மஹிந்த ராஜபக்க்ஷ நிர்வகித்து வந்தார். அனைத்து அமைச்சர்களுக்கும் அபரிமித சுகபோகங்கள் வழங்கப்பட்டிருந்த போதிலும் அதிகாரங்கள் அனைத்தும் ராஜபக்க்ஷக்களிடமே குவிந்திருந்தன. பெரும்பாலான இலாகாக்கள் ராஜபக்க்ஷவினரது குடும்ப உறுப்பினர்களது காலடியில் குவிக்கப்பட்டன. அவ்வப்போது, நாடாளுமன்றத்தின் மூலம் சட்டங்களைக் கொண்டு வந்து ராஜபக்ஷகளின் அதிகாரத்தை எல்லைகளற்றதாக்கினர். இதன் உச்சகட்டமாக அரசியல் சாசனத்தில் கொண்டுவரப்பட்ட 18வது திருத்தத்தின் மூலம் இருமுறைதான் ஒருவர் ஜனாதிபதியாகலாம் என்பதை, எத்தனைமுறை வேண்டுமானாலும் ஜனாதிபதியாகலாம் என மாற்றியமைத்து தானும் தனது வாரிசுகளுமே காலாகாலத்துக்கும் ஆட்சிசெய்யும் வகையில் சட்டத்தை மாற்றியமைத்தார். சீனாவின் ஆதிக்கம் தேசத்தின் மூலை முடுக்கெங்கிலும் பரவியது. மஹிந்தவின் மூன்று பிள்ளைகளின் அட்டகாசங்களும் பரவின.

யுத்த காலத்திலும் அதற்கு பிந்திய காலத்திலும் ராஜபக்க்ஷ யுகத்தில் கருத்துச் சுதந்திரம் எள்ளளவுக்கும் இருக்கவில்லை. ஊடக சுதந்திரம் முற்றாக முடக்கப்பட்டிருந்தது. ஊடகவியலாளர்கள் பலர் கொலை செய்யப்பட்டனர். கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களும் கிடைக்காது. ராஜபக்க்ஷக்களது ஆட்சியதிகாரம் 2015 ஜனவரி 8 உடன் நிறைவுக்கு வந்ததன் பின்பு மஹிந்தவின் இளைய சகோதரர் கோட்டாபய வீட்டில் ஆட்கொல்லி சுறாக்கள் வளர்க்கப்பட்டு வந்த தகவல் வெளியானது.

யுத்தம் முடிவுக்கு வந்த குறுகிய காலத்திலேயே, மஹிந்த ராஜபக்க்ஷ அதிகம் விரும்பத்தகாதவராக, குறிப்பாக முஸ்லிம்கள் மத்தியில், மாறினார். இலங்கையின் அறிவுஜீவிகளும் மஹிந்தவுக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே இருந்தனர். தொடர்ந்தேர்ச்சியாக முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் நிகழ்ந்து வந்தன. பள்ளிவாசல்களும் தர்காக்களும் வியாபாரஸ்தலங்களும் தாக்கப்பட்டன; தீக்கிரையாக்கப்பட்டன. இவற்றுக்கு நிறுவன வடிவம் கொடுக்கும் வகையில் பொதுபல சேனா, ராவண பலய உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இனவாத அமைப்புகள் முஸ்லிம்களுக்கு எதிராக இயங்கின. இந்த அமைப்புகளது பரமபிதாவாக கோட்டாபய ராஜபக்க்ஷ காணப்பட்டார்.

2014 ஜூனில் இடம்பெற்ற அளுத்கம -தர்கா நகர் முஸ்லிம்கள் மீதான கொலைவெறி வன்முறைத் தாக்குதல்களில் இவை உச்சத்தை தொட்டன. விலைவாசி உயர்வு, ராஜபக்க்ஷக்களின் எல்லைமீறிய சர்வாதிகாரப் போக்கு, சிறுபான்மையினர் மீதான எல்லையற்ற வன்முறைகள், அபரிமிதமான சீன மயம் அனைத்தும் எதிரணிகளை ஒன்றிணைந்து ஜனாதிபதித் தேர்தலை (2015 ஜனவரி 8) எதிர்கொள்ளச் செய்தது. என்றாலும் மஹிந்தவை எதிர்த்து நின்று களம் காணப்போவது யார் என்ற கேள்விக்கு விடை இருக்கவில்லை.

ஏற்கனவே யுத்தவெற்றியை மூலதனமாக்கி, 2010 ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவை எதிர்க்க யாருமே இல்லாமல் யுத்தத்தை வெற்றிகொண்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை எதிரணிகளது பொது வேட்பாளராக்கி நிறுத்திய போதும் மஹிந்தவின் வெற்றியை சிறிதளவேனும் அசைக்க முடியவில்லை. பின்னாட்களில் தனது தளபதி பொன்சேகாவை சிறையிட்டு ராஜபக்க்ஷவினர் செய்த அத்துமீறல்கள் தனிக்கதை.

2015 ஜனாதிபதி தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் (United National Party – UNP) ரணில் விக்ரமசிங்க, கரு ஜெயசூரிய உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் இருந்தும் மஹிந்தவுக்கு சவாலான போட்டியாளராக நிறுத்துவதற்கு எவரும் இருக்கவில்லை. இதில் ரணில் விக்ரமசிங்க இன்றளவும் மேற்குலகின், குறிப்பாக அமெரிக்காவின் முகவராக இலங்கையின் பாமர மக்களாலும் நோக்கப்படுபவர். கரு ஜெயசூரிய சிறந்த பௌத்தராக மதிக்கப்படுபவர். எனினும் மஹிந்தவின் போட்டியாளராக இவர்களால் வரமுடியவில்லை.

இச்சந்தர்ப்பமே தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. இத்தேர்வு மஹிந்த அணியினருக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. மைத்ரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்க்ஷ போலவே இலங்கை சுதந்திரக் கட்சியின் (Sri Lanka Freedom Party – SLFP) மூத்த அங்கத்தவர். அக்கட்சியின் செயலாளராகவும் அப்போது செயல்பட்டார். யுத்தம் முடிவுக்கு வரும் போது நாட்டை விட்டும் வெளியிலிருந்த மஹிந்த ராஜபக்க்ஷவின் பொறுப்புகளை ஏற்று பொறுப்பு பாதுகாப்பு அமைச்சராக யுத்தத்தை உத்தியோகப்பூர்வமாக முடிவுக்கு கொண்டு வந்தவர். ராஜபக்க்ஷகளுக்கு எதிராக அரசில் செல்வாக்குச் செலுத்தக் கூடியவராகவும் சிங்கள கிராமப்புறங்கள் வரை செல்லக் கூடிய சிங்கள பௌத்தராகவும் கருதப்பட்ட மைத்ரிபால சிறிசேன, எதிரணிகளது பொது வேட்பாளர் திட்டத்துக்கு உடன்பட்டு 2015 ஜனவரி 8ல் மஹிந்தவை வீழ்த்தி ராஜபக்க்ஷ யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். இரண்டு முறைக்கு மேல் ஒருவர் ஜனாதிபதியாக முடியாது என்ற சட்டம் மீண்டும் கொண்டு வரப்பட்டது.

மஹிந்தவும் அவரின் குடும்பமும் ஆட்சிக் கட்டிலை விட்டு அகற்றப்பட்டது போலவே இலங்கை சுதந்திரக் கட்சியிலிருந்தும் மைத்ரிபால சிறிசேனவால் அகற்றப்பட்டனர். மைத்ரிபால சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தைக் கைப்பற்றினார். எனினும் மஹிந்தவின் செல்வாக்குதான் இன்றளவும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களது மத்தியில் காணப்படுகிறது.

மஹிந்தவின் வீழ்ச்சியின் பின்னர் மைத்ரிபாலவுக்கு ஆதரவான சுதந்திரக் கட்சி அங்கத்தினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஏனைய சில சிறு கட்சிகளும் இணைந்து, கடந்த மாதம் 26ம் தேதி மஹிந்த பிரதமராக நியமிக்கப்பட்டு அரசியல் குழப்பநிலைகள் ஏற்படும் வரை, ‘நல்லாட்சி அரசாங்கம்’ என்ற பெயரில் ஆட்சியை முன்னெடுத்து வந்தனர். ஒப்பீட்டு ரீதியில் வளமான கருத்துச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் காணப்பட்டது. விலைவாசி ஏற்றம் பெரியளவு கட்டுப்படுத்தப்படவில்லை என்றாலும் ஓரளவு மேம்படுத்தப்பட்ட வாழ்வை மக்கள் அனுபவித்தனர். இக்காலப்பகுதியில் 2015 ஆகஸ்டு மாதம் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சுதந்திரக் கட்சியின் சார்பாக போட்டியிட்ட மஹிந்த தொடர்ந்து சுதந்திரக் கட்சியின் அதிகமான உறுப்பினர்களது ஆதரவோடும் ஏனைய சில சிங்கள கடும்போக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களோடும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியாக இயங்கினார்.

இலங்கையின் முன்னைய அரசியல் வரலாற்றில் புதிய கட்சிகள் துவங்கிய மூத்த அரசியல்வாதிகள்கூட தேர்தல்களில் தோல்வியுற்று காலப்போக்கில் அரசியலை விட்டும் காணாமல் போன அனுபவங்கள் மஹிந்தவை சுதந்திரக் கட்சியை விட்டும் பிரிந்து போவதற்கு தயங்கச் செய்தன. எனினும் கடந்த பிப்ரவரியில் (10-.02.-2018) இடம்பெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் மஹிந்த தனது பரிசோதனையை நிகழ்த்தி, வெற்றியும் பெற்றார். மஹிந்தவின் ஆதரவாளரான முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தலைமையில் பதிவுசெய்யப்பட்ட இலங்கை பொதுமக்கள் முன்னணி (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன -SLPP. கடந்த மார்ச் மாதம் கண்டி, திகன பகுதியில் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறையில் ஈடுபட்டுக் கைதானோரில் இக்கட்சியின் உள்ளாட்சி உறுப்பினர்கள் அதிகம் இருந்தனர்) மூலமாக தாமரை சின்னத்தில் தனது ஆதரவாளர்களை வெற்றிபெறச் செய்தார்.

இத்தேர்தலில் மஹிந்தவின் புதிய கட்சி ஒட்டுமொத்தமாக 40% வாக்குகளைப் பெற்று முதலிடத்துக்கு வந்தது. ஐக்கிய தேசியக் கட்சி 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்துக்கு வந்தது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் இலங்கை சுதந்திரக் கட்சியால் 12% வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. இத்தேர்தல் முடிவுகள் மஹிந்தவுக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்தன. ஏற்கனவே மீளவும் அதிகார நாற்காலியை நோக்கி கண் வைத்து செயற்பட்ட மஹிந்த தனது நகர்வுகளை வேகமாக்கினார்.

மைத்ரிபால சிறிசேனவின் நிலை திரிசங்கு நிலையானது. கடந்த முறை ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்ட போது மைத்ரிபால சிறிசேன, தான் ஒரு தவணைக்கு மேல் ஜனாதிபதியாகப் போவதில்லை என பகிரங்கமாக தொலைக்காட்சிகளில் தெரிவித்திருந்தார். என்றாலும் இலங்கை சுதந்திரக் கட்சியும் தானும் தனிமைப்படுத்தப்பட்டதோடு உள்ளாட்சித் தேர்தலில் மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டதை தொடர்ந்து தனது அரசியல் எதிர்காலம் பற்றிய கேள்விகளுக்கான விடையை மைத்ரிபால தேட ஆரம்பித்தார். இரண்டாவது முறையும் ஜனாதிபதியாவதற்கான ஆசை மைத்ரிபால சிறிசேனவுக்கு துளிர்விட்டது. அச்சந்தர்ப்பத்தில் 2019 ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்துப் போட்டியிடும் என்ற அறிவிப்பு மைத்ரிபால சிறிசேனவுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது.

இச்சமயம் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு இடையிலான முரண்பாடுகள் துவங்கியிருந்தன. இந்நிலையில் ஜனாதிபதியைக் கொலை செய்ய பிரதமர் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவில் கடமையயாற்றிய ஒருவர் மூலம் பரபரப்புத் தகவல் வெளியிடப்பட்டது. இது தொடர்பான ஆதாரங்கள் எதுவும் இல்லாத நிலையில் இக்குற்றச்சாட்டு போலியானது என்று நிரூபிக்கப்பட்டது. இது மஹிந்த தரப்பினரின் மற்றொரு நாடகமாகும்.

ஏற்கனவே நல்லாட்சி அரசில் இடம்பெற்ற மத்திய வங்கி ஊழல், ரணிலின் வெளிநாடுகளுடனான தொடர்பு போன்ற விவகாரங்களை வைத்து ஜனாதிபதி -& -பிரதமர் முரண்பாடுகள் வெளிப்பட்டாலும், மைத்ரிபால சிறிசேன தனது எதிர்கால அரசியல் நலன்களை நோக்காகக் கொண்டு வேறொருவரைப் பிரதமராக்க முயன்றார். இதற்கான குற்றச்சாட்டுகளில் ஊழல், நாட்டை வெளிச்சக்திகளுக்கு தாரைவார்த்தல் என்பதோடு கொலை முயற்சியும் புதிதாக இணைக்கப்பட்டது. முதலில் கரு ஜெயசூரியவையும் பின்பு ஐக்கிய தேசிய கட்சியின் அடுத்த கட்டத் தலைமையை நோக்கி நகரும் சஜித் பிரேமதாசவையும் அணுகியதாக ஜனாதிபதியே கடந்த 5ம் தேதி மஹிந்த அணியின் பொதுக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். அவர்களில் ஒருவர் பிரதமர் பதவிக்கு ஒத்துக் கொண்டால் மைத்ரிபாலவின் சுதந்திரக் கட்சியும் மஹிந்தவின் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் அதிருப்தியாளர்களும் இணைந்து ஆதரவு தருவர் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டது. என்றாலும் அரசியல் தற்கொலையொன்றுக்கு அவர்கள் தயாராகவில்லை; அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.

இறுதியாக கடந்த அக்டோபர் 26 அன்று மாலை மஹிந்த திடுதிப்பென்று பிரதமராகப் பதவியேற்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு முன்னராக மஹிந்தவின் நெருங்கிய நண்பரான சுப்பிரமணியன் சுவாமி மூலம் இந்தியப் பிரதமர் மோடியை மஹிந்தவும் அவரது மகன் நாமலும் சந்தித்திருந்தனர். மஹிந்த பிரதமராகப் பதவியேற்றதும் நேரடியாக சீனத் தூதுவர் புதிய பிரதமரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இது இந்தியாவுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

சீனா- மற்றும் இந்தியா-, அமெரிக்காவின் பிராந்திய நலன்களுக்கிடையில் தீர்மானிக்கப்படும் இலங்கை அரசியலில் ரணில் அமெரிக்காவுக்கு நெருக்கமாக இருந்து செயற்படுவதனால் மஹிந்தவுக்கு இந்தியா பச்சைக்கொடி காட்டியது. ஆனால் இன்று மஹிந்த தனது பழைய நண்பன் சீனாவை அணுகியுள்ளமை இந்தியாவுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. மஹிந்தவின் அதிகார ஆசைக்குத் தீனியாகவும் சீனாவின் பிராந்திய மேலாதிக்கத்தை வலுப்படுத்தவும் சீனாவின் பின்புலத்தில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் சதியாகவே இந்த பிரதமர் நியமனம் நோக்கப்படுகிறது.

எவ்வாறிருப்பினும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 இல் பெரும்பான்மை உறுப்பினர்களை ஆதரவாகப் பெற்று பிரதமராகப் பதவியிலிருந்த ரணில் விக்ரமசிங்கவைப் பதவி நீக்கம் செய்தது இலங்கை அரசியல் சாசனத்திற்கு முற்றிலும் முரணானதாகும். இதனையடுத்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமருக்கு எழுந்தது. இதற்காக கால அவகாசம் எடுத்துக்கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி, நாடாளுமன்றத்தை நவம்பர் 16 வரை ஒத்திவைத்தார்.

இந்நிலையில் சபாநாயகர் தனக்கிருக்கும் அதிகாரங்கள் மூலம் நவம்பர் 5 மற்றும் 7ம் தேதிகளில் நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அரசியல் குளறுபடிகளால் அது சாத்தியமாகவில்லை. ஏற்கனவே பல அரச இலாகாக்களின் தொழிற்சங்கங்கள் மஹிந்த அணியினரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தன. நல்லாட்சிக் காலத்திலும் அரச அலுவலகங்களில் ராஜபக்க்ஷ குடும்பத்தின் புகைப்படங்கள் இருப்பதை சகஜமாக காண முடியும். இந்த தொழிற்சங்க உறுப்பினர்கள் மூலம் அரச ஊடகங்கள் மற்றும் பல இலாகாக்கள் மிரட்டல் மூலம் இரவோடிரவாக மஹிந்த அணியினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தன.

28ம் தேதி நல்லாட்சி அரசில் பெட்ரோலிய அமைச்சராக இருந்த அர்ஜுன ரணதுங்க அரசு கட்டிடத்தில் தனது வீட்டுச் சாவியைப் பெறுவதற்காகக் காத்திருந்த போது மஹிந்த ஆதரவாளர்கள் பெரும் கும்பலாக வந்து தாக்குதலுக்கு முயன்றனர். விஷேச இராணுவ அணி மூலம் அவர் பாதுகாப்போடு வெளியேற்றப்பட்டார். அப்போது காவல்துறையின் துப்பாக்கிப் பிரயோகத்தில் மஹிந்த ஆதரவாளர் ஒருவர் கொல்லப்பட்டார், மற்றொருவர் காயமடைந்தார். இதனால் தலைநகரம் கொழும்பு அன்றைய தினம் பதற்றத்தால் நிரம்பியிருந்தது. இந்நிலையில் மஹிந்தவின் மகன் நாமல் ஊழல் தடுப்பு விசாரணைப் பிரிவு அலுவலகத்துக்கு செல்லும் புகைப்படங்கள் சில சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தன. அரைக்காற்சட்டையும் டீசர்ட்டும் அணிந்திருந்த நாமல் ராஜபக்க்ஷ தமது மீள்வருகையை கேவலமான முறையில் அடையாளப்படுத்தியிருந்தார்.

ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியிலிருந்த 95 உறுப்பினர்களோடு மைத்ரிபால அணியின் உறுப்பினர்கள் ஆதரவும் ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் அதிருப்தி உறுப்பினர்களின் ஆதரவும் கிடைக்குமெனக் கணக்கிட்ட மைத்ரி- & மஹிந்தவுக்கு அப்படியொரு ஆதரவு கிடைக்கவில்லை. மைத்ரி அணியிலிருந்த முக்கிய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலும் மஹிந்த அதிருப்தியில் இருந்தனர். பின்பு நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தனித்தனியே பேரம்பேசி விலைக்கு வாங்கும் முயற்சியில் இறங்கினர். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து சில உறுப்பினர்கள், சுதந்திரக் கட்சியில் நல்லாட்சி அரசில் அங்கம் வகித்த சில உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து ஓர் உறுப்பினர் ஆகியோரின் ஆதரவையும் மஹிந்த தரப்பு திரட்டிக் கொண்ட போதும் ஆதரவு எண்ணிக்கை105 ஐ தாண்டவில்லை.

பெரும்பான்மையை நிரூபிக்க 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இதன் பின்பும் மஹிந்த அணியினர், இலகுவில் கட்சி மாறக் கூடும் எனக் கருதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை வைத்துக் கொண்டு வலை வீசிக்கொண்டிருந்தனர். கோடிக் கணக்கில் பேரம் பேசப்பட்டது. இவற்றோடு தொடர்புடைய சில ஒலிப்பதிவுகளும் வெளியாகியிருந்தன. இறுதி வரை மஹிந்த அணி, முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு (இரு கட்சிகளில் 13 உறுப்பினர்கள்) தமக்கு கிடைக்குமென நம்பிக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் மஹிந்த அணியின் முக்கியஸ்தரான எஸ்.பி. திஸாநாயக்க முஸ்லிம் கட்சிகள் தமக்கு ஆதரவு தரவில்லையென்றால் தாம் அவற்றில் கை வைப்போம் என பகிரங்கமாக அச்சுறுத்தும் தொனியில் பேசியிருந்தார். என்றாலும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலை பேசப்பட்ட தகவல்கள் வெளிவந்த போதிலும் மஹிந்த பக்கம் செல்லாதது சமூகத்தின் பிரதிநிதித்துவத்தின் நோக்கத்தை அச்சந்தர்ப்பத்தில் பூர்த்தி செய்திருந்தது.

மஹிந்தவுக்கு ஆதரவை வழங்குவதை விட்டும் முஸ்லிம் கட்சிகளை தவிர்க்கச் செய்ததில் சமூக அழுத்தம் முக்கிய பங்குவகித்தது. முக்கியமாக இதன் மூலம் நாட்டின் ஜனநாயகத்துக்கு முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவம் மூலம் ஓர் உத்தரவாதம் வழங்கப்பட்டது. கட்டுரை எழுதப்படும் இத்தருவாயில் முஸ்லிம் உறுப்பினர்கள் உம்ரா கடமைக்கென மக்கா சென்றிருக்கின்றனர்.

மஹிந்தவின் இறுதி நம்பிக்கையாக இருந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையை விரித்ததும் மைத்ரி- & மஹிந்த அணி முற்றாகக் குழம்பிப் போயுள்ளது. மைத்ரி முன்னர் இருந்த சொச்ச அளவிலான ஆதரவையும் இழந்திருக்கிறார். இச்சந்தர்ப்பத்தில், தமது பெரும்பான்மையை நிரூபிக்க வழியற்ற ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நவம்பர் 9ம் தேதியுடன் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் தீர்மானத்தை வெளியிட்டார். எனினும் இலங்கை அரசியல் சாசனத்தின்படி, ஒரு அரசு ஆட்சிக்கு வந்து நான்கரை வருடங்கள் முடியும் வரை ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியாது. அவ்வாறு கலைப்பதற்கு நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் அங்கீகாரத்தை பெற வேண்டும். எனவே இங்கு தொடர்ந்து நாட்டின் உயர்ந்த சாசனமான அரசியல் சாசனம் மீறப்பட்டுள்ளது.

இனவாதத்தை விட்டும் நாட்டைக் காப்பதற்கும் குடும்ப ஆட்சி, அதிகார துஷ்பிரயோகங்களை விட்டும் நாட்டை தூய்மைப்படுத்துவதற்கும் 2015ல் வழங்கப்பட்ட மக்கள் ஆணை அவமதிக்கப்பட்டு இன்று ஒரு சில தனி மனிதர்களது அரசியல் எதிர்கால நோக்கங்கள் முற்படுத்தப்பட்டிருக்கின்றது. இச்சூழலில் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் இடதுசாரிக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியும் (ஜனதா விமுக்தி பெரமுன -JVP) இந்த அரசியல் அநீதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடப் போவதாகவும் அதன் மூலம் மீண்டும் நாடாளுமன்றத்தைக் கூட்டப் போவதாகவும் அறிவித்திருக்கின்றன. கடந்த வாரங்களில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் பேரணிகளில் இலட்சக்கணக்கான மக்கள் சுயமாகப் பங்கேற்று ஜனநாயகத்தைக் காக்கும் தமது ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தனர். மேலும் வெகுஜன மக்கள் அமைப்புகளும் சகல இன மக்கள் மத்தியிலும் இயங்குவது நம்பிக்கை அளிக்கிறது. இலங்கையில் நீதி நிலைநாட்டப்பட்டு ஜனநாயகம் காப்பாற்றப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Comments are closed.