இளவரசன் மரணம் தற்கொலையல்ல: அவரது உடலை பரிசோதனை செய்த மருத்துவர் அறிக்கை

0

தடவியல் வல்லுனரான மருத்துவர் சம்பத் குமார்,கலப்புத் திருமணத்தால் ஏற்ப்பட்ட மரணம் என்று கூறப்பட்ட இளவரசனின் மரணம் தற்கொலையல்ல என்று கூறியுள்ளார். மேலும் இது தற்கொலையல்ல என்பதை நிரூபிக்க தங்களிடம் போதுமான ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த மருத்துவர் சம்பத் குமார் 1991 ராஜீவ் காந்தி படுகொலையின் போது பிரேத பரிசோதனை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலித் சமூகத்தை சேர்ந்தவரான இளவரசன் வன்னியர் சமூகத்தை சேர்ந்த பெண்ணான திவ்யாவை கடந்த 2013 இல் திருமணம் செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.

இதனையடுத்து 2013 ஆம் ஆண்டு  ஜூலை மாதம் 11 ஆம் தேதி ரயில் தண்டவாளத்தில் இளவரசன் பிணமாகக் கிடந்தார். இளவரசனின் மரணம் கொலை என்றும் தற்கொலை என்றும் இரு வேறு கருத்துக்கள் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இளவரசனின் உடலை பரிசோதனை செய்து அவரது கருத்துக்களை சென்னை உயர் நீதிமன்றத்திடம் தெரிவிக்க மருத்துவர் சம்பத் குமார் அழைக்கப்பட்டிருந்தார். இவர் தனது கருத்துக்களை சிபிசிஐடி இடமும் சமர்பித்தார். தனது பிரேத பரிசோதனை அறிக்கை குறித்து பிரபல செய்தி நிறுவனம் ஒன்றிடம் கருத்து தெரிவிக்கையில், “இளவரசன் கொலை தான் செய்யப்பட்டுள்ளார் என்பதற்கான போதிய தடயங்கள் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றாலும், அவர் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்பதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன” என்று கூறியுள்ளார். மேலும் இளவரசனின் உடலை மூன்று மருத்துவர் குழுக்கள் பிரேத பரிசோதனை செய்த போது எடுக்கப்பட்ட மூன்று படங்களை சுட்டிக்காட்டிய அவர் தனது கூற்றுக்கு வலு சேர்த்துள்ளார்.

முன்னதாக பிரேத பரிசோதனை செய்யப்பட்ட போது இளவரசனின் உடலில் இல்லாத கிரீஸ் கரைகள் மூன்றாவதாக பிரேத பரிசோதனை செய்யப்பட்ட போது இருபது இளவரசன் ரயில் அடிபட்டு தான் உயிரிழந்தார் என்று நிறுவ முயற்சிப்பது போல தெரிகிறது என்று அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாடு காவல்துறையின் கூற்றுபப்டி, திவ்யாவை விட்டு பிரித்து வைக்கப்பட்ட இளவரசன் கோயம்புத்தூர் குர்லா விரைவு ரயிலில் 2013 ஜூலை மாதம் 4 ஆம் தேதி மதியம் 1:20 மணிக்கு விழுந்து தற்கொலை செய்து கொண்டார் என்பதாகும். இளவரசனின் உடலை முதலில் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி தலைமை மருத்துவர் தலைமையிலான மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்று பிரேத பரிசோதனை செய்து அது குறித்து தங்களது கருத்துக்களை வீடியோவில் பதிவு செய்திருந்தது. பின்னர் மேலும் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியை சேர்ந்த மருத்துவர் சம்பத் குமார் மற்றும் SRM பல்கலைகழகத்தின் மருத்துவர்  கே.தங்கராஜ் ஆகிய இரண்டு மருத்துவர்கள் இளவரசனின் உடலை மறு பரிசோதனை செய்ய அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களது அறிக்கை இவர்களுக்கு முன்னர் பரிசோதனை செய்த மருத்துவர்களின் அறிக்கைக்கு முரணாக இருக்க மீண்டும் ஒரு பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு AIIMS இல் இருந்து மூன்று  மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது. இவர்களின் அறிக்கை 2013 ஜூலை மாதம் நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இறுதியாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், AIIMS மருத்துவர்கள், “உயிரிழந்தவர் சம்பவம் நடைபெற்ற போது மதுவின் போதையிலும் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையிலும் இருந்துள்ளார். தற்போதுள்ள காயங்கள் தவறுதலாக ரயிலில் மோதியதால் ஏற்பட்டிருக்க வாய்புகள் உள்ளது. இந்த கருத்தது சந்தர்ப்ப சாட்சியங்களோடு ஒத்துப் போகலாம்.” என்று கூறியிருந்தனர். இதன் அடிப்படையில் இது தற்கொலையல்ல, கொலை என்ற மனுதாரரின் கூற்றை எற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளது.

ஆனால் இளவரசன் ரயில் மோதி உயிரிழந்திருக்க வாய்ப்பில்லை என்பதை மருத்துவர் சம்பத் குமார் தெளிவாக விளக்குகிறார். இது குறித்து கூறிய அவர், இளவரசனின் இடப்பக்க தலையிலும், இடப்பக்க முன்னங்கைகளிலும் மட்டுமே காயங்கள் ஏற்பட்டுள்ளது. சுமார் 60 இல் இருந்து 100  கிலோமீட்டர் வேகத்தில் வரும் ரயிலால் ஏற்படும் காயங்கள் இன்னும் அதிகாமாக இருக்கும், அது அவர் எந்த நிலையில் இருந்தாலும் சரி. தற்போதுள்ள காயங்களின் அடிப்படையில் அவர் ரயில் தண்டவாளத்தின் ஓரத்தில் நின்றிருந்தார் என்று எடுத்துக்கொண்டாலும் அவரது இடப்பக்கம் முழுவதும் காயப்பட்டிருக்கும், குறிப்பாக அவரது இடது தோள்பட்டைகளில் காயங்கள் ஏற்பட்டிருக்கும். ஆனால் அதில் எந்த ஒரு காயமும் இல்லை. அவரது முதுகுத் தண்டில் எந்த காயங்களும் இல்லை. வேகமாக வரும் ரயில் இடித்திருந்தால் கட்டாயமாக முதுகுத்தண்டில் காயங்கள் ஏற்பட்டிருக்கும். இன்னும் அவரது உடல் ரயில் இடித்த வேகத்தில் தொலைவில் வீசப்பட்டிருக்கும். ஆனால் அவரது உடலோ தண்டவாளத்தில் இருந்து வெறும் 1.7 மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்னும் அவர் ரயில் மோதி விழுந்ததால் ஏற்பட்ட காயங்கள் எதுவும் தென்படவில்லை. என்று மருத்துவர் சம்பத் குமார் கூறியுள்ளார்.

ஒரு வேலை அவர் தண்டவாளத்தின் அருகாமையில் படுத்திருக்கலாம் என்று எடுத்துக்கொண்டாலும் அதுவும் சாத்தியமில்லை என்று கூறுகிறார் மருத்துவர். அப்படியிருந்தால் அவரது மண்டை ஓடு முழுமையாக பலத்த சேதமடைந்திருக்கும். ஆனால் இங்கு தலையின் இடப்பக்கத்தில் மட்டுமே காயங்கள் ஏற்பட்டுள்ளன. இன்னும் தலை அசையும் பகுதி என்பதால் அவரது முதுகுத் தண்டும் இதனால் சேதப்படுத்தப்பட்டிருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

பிற மருத்துவர்கள் கூறியது போன்று தண்டவாளத்தில் அருகே இருந்து தலையை அவர் தண்டவாளத்தில் வைத்திருக்கலாமா என்ற கேள்விக்கும் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இளவரசன் அடிப்பட்டதாக கூறப்பட்ட ரயில் வலப்பக்கம் இருந்து வந்துள்ளது. அப்படியானால் அவரது தலையில் வலப்பக்கத்தில் காயங்கள் ஏற்ப்பட்டிருக்க வேண்டும், ஆனால் இங்கு இடப்பக்கத்தில் காயங்கள் ஏற்ப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். அதிலும் கூட அவரது மண்டையோடு இதில் முழுமையாக சேதமடைந்திருக்கும் என்று கூறியுள்ளார்.

இளவரசனின் முன்னங்கைகளில் ஏற்பட்டுள்ள காயங்கள் கைகளின் பிற்பக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் அந்த காயங்கள் அவர் தன்னை தற்காத்துக்கொள்ளும் போது ஏற்ப்பட்ட காயங்களாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தன்னை ஒருவர் தாக்கும் போது தன்னை தற்காத்துக்கொள்ள அவர் கைகளை உயர்த்தியிருக்கலாம் என்றும் அதனால் அங்கு காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இளவரசனின் உடலில் மது உள்ளதாக கூறப்படுவது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், உடலில் உள்ள 100ml ரத்திற்கு 81mg மது இருந்ததாக அறிக்கை தெரிவித்துள்ளது. 50mg க்கு அதிகமாக இருந்தால் மது போதையில் இருந்ததாக குறிப்பிடப்படும். ஆனாலும் இது நபருக்கு நபர் வேறுபடும். ரத்தில் 300mg மது உள்ள ஒருவர் சாதாரணமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். மேலும் AIIMS மருத்துவர்கள் கூறியதில் மற்றொன்று மிகத் தவறாக உள்ளது என்றும் அது இளவரசனின் மார்பில் உள்ள கிரீஸ் கரைகள் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த கரைகள் முன்னர் பிரேத பரிசோதனை செய்த போது பதிவு செய்யப்படவில்லை. மறுமுறை பிரேத பசோதனை செய்த போதும் அது இளவரசனின் உடலில் இல்லை. AIIMS மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்த போது எப்படி அது அங்கே வந்தது. அதுவும் இளவரசன் அணிந்திருந்த சட்டை மற்றும் உள்சட்டையை தாண்டி என்று மருத்துவர் சம்பத் குமார் கேள்வி எழுப்புகிறார். இளவரசனின் உடலை பரிசோதனை செய்த ஐந்து மருத்துவர்கள் இந்த கிரீஸ் கரைகளை பார்க்கவில்லை. அப்படியென்றால் இது எங்கிருந்து எப்படி அவரது உடலில் வந்தது என்ற கேள்வி இங்கு எழுகிறது.

இன்னும் இளவரசன் மரணம் தொடர்பான விசாரணைகளில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதாக அவர் உணர்கிராரா என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டதற்கு, இளவரசன் உடல் இருந்த இடம் 24 ம ணி நேரங்களுக்குள் புதிதாக வெள்ளை அடிக்கப்பட்டுவிட்டது. இன்னும் அவரது இறந்த உடலின் புகைப்படத்தில் உள்ள வெள்ளை நிற சட்டை, தான் அவரது உடலை பரிசோதனை செய்த போது கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார். இன்னும் அவரது சட்டையில் எந்த வித கரைகளோ எதுவும் இல்லாமல் இருந்தது என்றும் அவர் ரயிலில் அடிபட்டு இறந்திருந்தால் அவரது உடைகளில் அழுக்குக் கரைகள் இருந்திருக்கும். ஆனால் இது எதுவும் இல்லாமல் அவரது சட்டை சுத்தமாக காணப்பட்டது என்று கூறியுள்ளார். அவரது சட்டையை குறித்து தான் கேள்வி எழுப்பிய போது இளவரசனின் சட்டை, காலனி, மற்றும் கைகடிகாரம் காணவில்லை என்று கூறப்பட்டது என்று மருத்துவர் கூறியுள்ளார். அவை எங்கே என்ற கேள்விக்கு அவற்றை முதலில் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் தண்டர், ரயில்வே காவல்துறையிடம் கொடுத்ததாகவும், அவர்கள் அதனை அப்பகுதி காவல்துறையினரிடம் கொடுத்ததாகவும், அவர்கள் அதனை மீண்டும் ரயில்வே காவல்துறையினரிடம் கொடுத்ததாகவும் கூறப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் தன்னிடம் வெறும் புகைப்படங்கள் மட்டுமே காண்பிக்கப்பட்டன என்று அவர் கூறியுள்ளார். இத்தகைய தடயங்கள் மூலம் இளவரசன் கொலை தான் செய்யப்ட்டார் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் அவர் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. இது ரயில் விபத்து அல்ல என்று மருத்துவர் சம்பத் குமார் உறுதியாக கூறுகிறார்.

Comments are closed.