இவ்வளவு பெரிய நாட்டில் இது ஒரு சாதாரண சம்பவம் தான்: கோரக்பூர் சோகத்தை குறித்து அமித் ஷா

0

கோரக்பூர் BRD மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 70 குழந்தைகள் உயிரிழந்த நிகழ்வை ஒரு சாதாரணமான நிகழ்வு என்றும் இவ்வளவு பெரிய நாட்டில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பது இயற்கை தான் என்றும் காங்கிரஸ் ஆட்சியிலும் இது போன்ற நிகழ்வுகள் நடந்திருக்கின்றன என்றும் கருத்து தெரிவித்துள்ளார் பாஜக தலைவர் அமித் ஷா.

இந்த துயர சம்பவத்திற்கு பொறுப்பேற்று உத்திர பிரதேச முதல்வர் அதித்யநாத் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கூறியதை அடுத்து அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர், “இந்த மிகப்பெரிய தேசத்தில் பல சோகங்கள் நடைபெற்றுள்ளன, இது முதன் முறை அல்ல. காங்கிரஸ் ஆட்சியிலும் இது போன்ற நிகழ்வகள் நடைபெற்றுள்ளன.” என்று கூறியுள்ளார்.

மேலும் கூறிய அவர், காங்கிரஸ் கட்சியை போன்று தாங்கள் விசாரணை இல்லாமல் யாரையும் குறை கூறுவது இல்லை என்றும் இது தொடர்பான விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது என்றும் இது தொடர்பாக குறித்த நேரத்தில் விசாரணை நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று அதித்யநாத் உத்தரவிட்டுள்ளதாகவும்  அவர் தெரிவித்துள்ளார். இந்த விசாரணையின் முடிவை மக்களிடையே தாம் அறிவிப்பதாகவும் பின்னர் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த சோகத்திலும் கிருஷ்ண ஜன்மாஷ்டமியை படு விமர்ச்சையாக கொண்டாட வேண்டும் என்று அதித்யநாத் உத்தரவிட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அதற்கு பல எதிர்ப்புகள் எழுந்தன. தற்போது இந்த சோகத்தை ஒட்டி அந்த நிகழ்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

உலகில் நடக்கும் துயர சம்பவங்களுக்கு எல்லாம் தனது வருத்தத்தை தெரிவிக்கும் மோடி இந்த துயர சம்பவத்திற்கு ஏன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை என்ற கேள்விக்கு, மோடி ட்விட்டரில் கருத்துக்களை பதிவு செய்திராத போதிலும் அவர் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார் என்று அமித் ஷா கூறியுள்ளார்.

Comments are closed.