இஷ்ரத் ஜஹான் போலி என்கெளவுண்டர் வழக்கு: குஜராத் காவல்துறை அதிகாரிகளை ராஜினாமா செய்யக் கூறிய உச்ச நீதிமன்றம்

0

இஷ்ரத் ஜஹான் போலி என்கெளவுண்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகளில் இரண்டு மூத்த காவல்துறை அதிகாரிகளான NK அமின் மற்றும் TA பரோட் ஆகியோரை உச்ச நீதிமன்றம் அவர்களது பதவியை ராஜினாமா செய்ய கூறியுள்ளது.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் காவல்துறை கண்காணிப்பாளராக ஓய்வு பெற்ற அதிகாரி அமின், குஜராத்தின் மகிசாகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக ஒப்பந்த அடிப்படையில் ஒரு வருட காலத்திற்கு மீண்டும் பணியமர்த்தப்பட்டார். இவர் சொராபுதீன் ஷேக் மற்றும் இஷ்ரத் ஜஹான் போலி என்கெளவுண்டர் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவராவார்.

மற்றொரு அதிகாரியான T.A.பரோட் அவர் ஓய்வு பெற்ற ஒருவருடம் கழித்து வதோதராவில் மேற்கு ரயில்வே காவல்துறை துணை கண்காணிப்பாளராக பணியமர்த்தப்பட்டார். இவர் இஷ்ரத் ஜஹான் மற்றும் சாதிக் ஜமால் போலி என்கெளவுண்டர் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவராவார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி J.S.கெஹர் மற்றும் நீதிபதி D.Y.சந்திரசூத் அடங்கிய பென்ச், இந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞரின் அறிக்கையை கருத்தில் கொண்டு அந்த இரண்டு அதிகாரிகளையும் அன்றே அவர்களது பதவிகளை ராஜினாமா செய்யும்படி கூறியுள்ளது. அதன் பின்னர் இந்த இரண்டு அதிகாரிகளையும் மீண்டும் பணியமர்த்தியதற்கு எதிராக முன்னாள் IPS அதிகாரி ராகுல் ஷர்மா அளித்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வழக்கறிஞர் வரிந்தர் குமார் ஷர்மா மூலமாக முன்னாள் IPS அதிகாரி ராகுல் ஷர்மா தாக்கல் செய்த மனுவில் குஜராத் காவல்துறை அதிகாரி பி.பி.பாண்டேவிற்கு காவல்துறையின் டிஜி மற்றும் ஐஜி பதவிகள் வழங்கப்பட்டது குறித்து குறிப்பிடப்பட்டிருந்ததோடு N.K.அமின் மற்று T.A.பரோட் ஆகிய அதிகாரிகளுக்கு மீண்டும் பதவி வழங்கியதை எதிர்த்த தனது மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறித்தும் குறிப்பிடப்பட்டிருந்தது.

தனது மனுவில், காவல்துறை அதிகாரி அமின் மீது இரண்டு போலி என்கெளவுண்டர் வழக்குகளில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது என்றும் ஏறத்தாள 8 வருடங்கள் நீதிமன்ற காவலில் கழித்த அவர் விடுவிக்கப்பட்ட உடனேயே அவருக்கு காவல்துறை கண்காணிப்பாளர் பதவி வழங்கப்பட்டுளளது என்றும் ஷர்மா தனது மனுவில் குறிப்பிட்டள்ளார்.

இது போன்றே காவல்துறை அதிகாரி தருண் பரோட் மீதும் கொலை மற்றும் கடத்தல் ஆகிய குற்றங்களுக்காக இரு வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு சுமார் மூன்று வருட காலம் நீதிமன்ற காவலில் இருந்துள்ளார் என்று ஷர்மா குறிப்பிட்டுள்ளார்.

இந்த இரு அதிகாரிகளின் மறு பணிநியமனம் அவர்களின் பணிக்காலத்தில் உள்ள அவர்களின் ஆட்சேபனைக்குரிய நடத்தையை கருத்தில் கொண்ட பின்னும் வழங்கப்பட்டது உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையிலும், பொது நம்பிக்கையின் கோட்பாடு அடிப்படைக்கும் எதிரானது என்று ஷர்மா தனது மனுவில் கூறியுள்ளார். இத்துடன் இது குஜராத் மாநில அரசின் வழிகாட்டுதல்களுக்கும் முரணானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். குஜராத் அரசின் வழிகாட்டுதலின் படி இது போன்ற மறு பணி நியமனங்கள் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.