இஷ்ரத் ஜஹான் போலி என்கெளண்டர் வழக்கு மனுதாரர் கோபிநாத் பிள்ளை சாலை விபத்தில் பலி

0

இஷ்ரத் ஜஹான் போலி என்கெளண்டர் வழக்கு மனுதாரர் கோபிநாத் பிள்ளை சாலை விபத்தில் பலி

இஷ்ரத் ஜஹான் போலி என்கெளண்டர் வழக்கில் இஷ்ரத் ஜஹானுடன் கொல்லப்பட்ட பிரனேஷ் பிள்ளையின் தந்தை கோபிநாத் பிள்ளை கடந்த வியாழன் அன்று சாலை விபத்தில் உயிரிழந்தார்.

இவர் மருத்துவ பரிசோதனையை முடித்துவிட்டு மருத்துவமனையில் இருந்து திரும்புகையில் இவரது கார் விபத்திற்குள்ளானது என்று பிள்ளையின் முன்னாள் மனைவி தெரிவித்துள்ளார். விபத்து நடைபெற்ற போது பிள்ளையின் சகோதரர் வாகனத்தை ஓட்ட பிள்ளை பின் இருக்கையில் அமர்ந்துள்ளார். அப்போது மற்றொரு காருடன் இவர்களது கார் மோதி கவிழ்ந்து மற்றுமொரு கார் மீது மோதியுள்ளது. இதில் நினைவை இழந்த பிள்ளையை மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர். அங்கு விபத்தில் ஏற்பட்ட காயங்களினால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கோபிநாத் பிள்ளை, தனது மகன் தீவிரவாதி என்ற மத்திய அரசு மற்றும் குஜராத் காவல்துறையின் கூற்றை மறுத்து நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தவர். முன்னர் பத்திரிகையாளர்களிடம் தனது மகன் குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், “என் மகன் ஒருபோதும் தீவிரவாதியாக இருக்க மாட்டான். பிரனேஷ் இஸ்லாதிற்கு மாறியது இஸ்லாம் மீதான காதலால் மட்டுமல்ல, அவன் விரும்பிய பெண்ணை மணமுடிக்கவும் தான்.” என்று அவர் தெரிவித்திருந்தார்.

கடத்த 2016 அக்டோபர் மாதம், “என்னிடம் ஒரு காவலர் கூறிய வரிகள் எனது நினைவில் உள்ளன. “உங்கள் மகன் தீவிரவாதி என்று ஒப்புக்கொள்ளுங்கள். இல்லையென்றால் நாங்கள் கஷ்மீர் அல்லது வேறு எங்கிருந்தாவது ஒருவனை பிடித்து நரேந்திர மோடியை கொலை செய்ய உங்கள் மகனுக்கு மிகப்பெரிய தொகையை கொடுத்ததாக கூற வைத்து விடுவோம்.” என்று கூறினார். என் மகன் இவர்களால் சிக்க வைக்கப்படுள்ளான் என்பது மட்டும் என்னால் தெளிவாக கூற முடியும். அவனது ஆவணங்கள் அனைத்தும் சரி பார்க்கப்பட்டது. அதில் வன்சாராவுடன் அவன் இரண்டு நிமிடங்கள் பேசியதற்கான ஆதாரங்கள் உள்ளன. அவனது உடலை பெறுவதற்கு நான் செல்லும்போது அவனது ஒரு கை தோள்பகுதியில் வெட்டப்பட்டு வெறும் தோலினால் தொங்கிக்கொண்டு இருந்தது. இவர்களுக்கு விஷம் கொடுத்து பின்னர் சுட்டுள்ளனர்.” என்று கோபிநாத் பிள்ளை தெரிவித்திருந்தார்.

இஷ்ரதிற்கும் பிரனேஷிற்கும் உள்ள தொடர்பு குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில், “இஷ்ரத்தின் கல்விக்கு பிரனேஷ் உதவி புரிந்துவந்தான். அவன் ஒரு பெண்ணின் கல்விக்கு உதவி வருவதாக என்னிடம் கூறியிருந்தான். அது ஒரு பெண் என்று மட்டும் எனக்கு தெரியும். அந்த பெண்ணையோ அவரது பெற்றோரையோ நான் சந்தித்ததில்லை.” என்று அவர் தெரிவித்திருந்தார்.

முன்னதாக இஷ்ரத் ஜஹான் போலி என்கெளண்டர் குறித்து குஜராத் உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு விசாரணையில் இது போலி என்கெளண்டர் என்று கண்டறியப்பட்டது. கடந்த மாதம் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இவ்வழக்கில் இருந்து ஓய்வு பெற்ற குஜராத் DGP PP பாண்டே வை விடுவித்தது. இந்நிலையில் பிள்ளை, கடந்த வருடம் டிசம்பரில் பாண்டேவின் விடுவிப்பு மீதான மனுவை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். பாண்டேவின் விடுதலை தன் மகனின் கொலையில் உள்ள சூழ்ச்சிகளை கண்டறிய இடையூறாக இருக்கும் என்றும் இவ்வழக்கில் உண்மையை கண்டறிய அது தடையாக இருக்கும் என்று அவர் தனது மனுவில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.