இஷ்ரத் ஜஹான் போலி என்கௌண்டர் – பிணையில் வெளிவந்த பாண்டே குஜராத் காவல்துறை தலைவராக பதவியேற்றம்

0

குஜராத்தின் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரியும் இஷ்ரத் ஜஹான் போலி என்கௌண்டர் வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்துள்ள பிரிதிவி பால் பாண்டே தற்பொழுது குஜராத் காவல்துறை தலைவராக பதவியேற்றுள்ளார்.

இதற்கு முன்னதாக குஜராத் காவல்துறை தலைவராக பதவி வகித்த பி.சி.தாக்கூர் டில்லிக்கு மாற்றப்பட்டதை அடுத்து பாண்டேவுக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 2013 ஜூலை மாதம் இஷ்ரத் ஜஹான் போலி என்கெளண்டர் வழக்கில் கைது செய்யப்பட்டார் பாண்டே. பின்னர் 19 மாதங்கள் சிறையில் இருந்தவர் கடந்த 2015 பிப்ரவரி மாதம் பிணையில் வெளி வந்தார். இன்னும் இவரது கடவுச்சீட்டு சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றம் வசம் உள்ளது.

தான் பதவி ஏற்றபின் பத்திரிகையாளர்களிடம், ” நான் சட்டப்புத்தகத்தில் உள்ளது போல நடந்துகொள்வேன், காவல்துறை சட்டப்புத்தகத்தை பின்பற்றினாலே போதும், வேறெதுவும் தேவையில்லை ” என்று கூறியுள்ளார்.

பாண்டே பதவியேற்பு குறித்து பாண்டேவின் நெருங்கிய நண்பர் ஒருவர் கூறுகையில், காவல்துறை தலைவராக பாண்டே நியமிக்கப்பட்டுள்ளது எங்களுக்கு ஆச்சர்யமாக உள்ளது. அந்த பொறுப்பிற்கான போட்டியில்( இஷ்ரத் ஜஹான் வழக்கு காரணமாக) அவர் இருக்கிறார் என்றே நாங்கள் நம்பவில்லை. அவர்மேல் இருக்கும் குற்றச்சாட்டுகளை ஒப்பிடும் போது அவருக்கு பதவி கிடைத்துள்ளது ஆச்சர்யமாக உள்ளது என்று கூறியுள்ளார்.

மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த பொழுது அவருக்கு ஆதரவாக மக்களை திருப்ப பல போலி என்கெளண்டர் கொலைகள் நடத்தப்பட்டன. சமீபத்தில் அதில் தொடர்புடையவர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இதே வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் மும்பையில் மட்டுமே இருக்க வேண்டும் என்று பிணை நிபந்தனையில் வெளிவந்த வன்சாராவும் குஜராத் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.