இஷ்ரத் ஜஹான் வழக்கு:பி.பி.பாண்டே குஜராத் டிஜிபி பணியில் இருந்து விலகல்

0

இஸ்ரத் ஜஹான் போலி என்கெளவுண்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குஜராத் காவல்துறை அதிகாரி பி.பி.பாண்டே வை அவர் சிறையில் இருந்து பிணையில் வெளிவந்ததும் குஜராத் அரசு காவல்துறை டி.ஜி.பி யாக பணியமர்த்தியது. மேலும் அவரது பணியை ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கவும் செய்தது.

இந்நிலையில் இவரை இந்த பணியில் அமர்த்தியது தொடர்பாகவும் அவருக்கு வழங்கப்பட்ட பணிவுயர்வு மற்றும் பணிநீட்டிப்பையும் எதிர்த்து பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் குஜராத் அரசு உடனடியாக பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

இதற்கு குஜராத் சார்பில் ஆஜரானா வழக்கறிஞர் துஷார் மேத்தா, பாண்டே குஜராத் காவல்துறையில் 30 வருடங்கள் பணியாற்றியுள்ளார் என்றும் அதனால் இது குறித்து பதிலளிக்க சிறிது அவகாசம் தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இவ்வழக்கில் மனுதாரர் (முன்னாள் மும்பை காவல்துறை ஆணையர் ஜூலியோ ஃபிரான்சிஸ் ரிபீரியோ) சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், பாண்டே ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும் அவருக்கு மீண்டும் பிணை வழங்கப்பட்டு, பணி வழக்கப்பட்டு, பணிவுயர்வும் அளிக்கப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார். இதனையடுத்து குஜராத் அரசு விரும்பினால் தான் தனது பதவியில் இருந்து விலகுவதாக பி.பி.பாண்டே கூறியுள்ளார்.

2004 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் தேதி மும்பையை சேர்ந்த 19 வயது இஷ்ரத் ஜஹான் மற்றும் ஜாவித் ஷேக், அம்ஜத்அலி அக்பரலி ரானா, ஜீஷான் ஜோஹர் ஆகியோர் மோடியை கொலை செய்ய வந்ததாக கூறி காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் இது போலி மோதல் தாக்குதல் என்று தெரியவந்தது. பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ. க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் பாண்டே பிணையில் விடுதலையானதும் 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குஜராத் ஊழல் எதிர்ப்பு படை இயக்குனராக மீண்டும் பணியில் இணைக்கப்பட்டார். பின்னர் கடந்த வருடம் ஏப்ரல் 16 ஆம் தேதி குஜராத் காவல்துறை டி.ஜி.பி.யாக பதவியளிக்கப்பட்டார்.

Comments are closed.