இஸ்ரத் ஜஹான் வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் ஜாமீன்

0

இஸ்ரத் ஜஹான் போலி என்கௌண்டர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட டி.எஸ்.பி. என்.கே. அமினுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது. இதன் மூலம் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர்.
கேன்ஸர் நோயால் பாதிக்கப்பட்டுள்ள அமினின் உடல்நிலையை கருத்தில் கொண்டும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்றவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை தொடர்ந்தும் அமினுக்கு ஜாமீன் வழங்கியதாக சிபிஐ நீதிமன்ற நீதிபதி கே.ஆர்.உபாத்யாய் தெரிவித்தார். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி அமின் என்று கூறிய சிபிஐ அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதிட்டது.
சிபிஐ நீதிமன்றத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஆஜராக வேண்டுமென்றும் பாஸ்போர்ட்டை நீதிமன்றததில் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
ஜூன் 15, 2004 அன்று இஸ்ரத் ஜஹான் உள்ளிட்ட நால்வர் குஜராத் காவல்துறையால் என்கௌண்டர் செய்யப்பட்டனர். இது குஜராத் காவல்துறையும் உளவுத்துறையும் இணைந்து நடத்திய போலி என்கௌணடர் என்று சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் தெரிவித்திருந்தது.
ஜி.எல்.சிங்கால், பி.பி.பாண்டே, டி.ஜி.வன்சாரா, என்.கே.அமின், தருண் பாரட், அனாஜூ சௌத்ரி மற்றும் ஜே.ஜி.பர்மர் ஆகிய குஜராத் காவல்துறை அதிகாரிகள் இந்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். ஆனால் வழக்கு விசாரணை முறையாக நடத்தப்படாததை தொடர்ந்து இவர்களில் ஒவ்வொருவருக்காக ஜாமீன் வழங்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட 90 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததை தொடர்ந்து சிங்கால், தருண், சௌத்ரி மற்றும் பார்மர் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. பாண்டே மற்றும் வன்சாராவிற்கு பிப்ரவரி மாதம் ஜாமீன் வழங்கப்பட்டது. தற்போது அமினுக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.
சொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கௌண்டர் வழக்கிலும் குற்றம்சாட்டப்பட்ட அமினுக்கு மார்ச் 2013ல் அந்த வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டது.

Comments are closed.