இஸ்ரத் ஜஹான் வழக்கு: ஜாமீன் கோரி காவல்துறை அதிகாரி வழக்கு

0

இஸ்ரத் ஜஹான் போலி என்கௌண்டர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள காவல்துறை அதிகாரி என்.கே. அமின் ஜாமீன் கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளார். இதே வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரி டி.ஜி. வன்சாராவிற்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி தனது கோரிக்கையை வைத்துள்ளார்.
‘இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி வன்சாரா என்று குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜூன் 13, 2004 அன்று இஸ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு நபர்களை கொலை செய்வதற்கு வன்சாரா, பி.பி.பாண்டே மற்றும் உளவுத்துறை தலைவர் ராஜேந்திர குமார் ஆகியோர் திட்டம் தீட்டினர். இவை அனைத்திலும் சம்பந்தப்பட்டவர் வன்சாரா. சிபிஐயின் கூற்றின்படி அவர்தான் அனைத்தையும் முடிவு செய்துள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில் அமினுக்கும் ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று அமினின் வழக்கறிஞர் தினேஷ் திவாரி வாதாடினார்.
ஜூன் 15, 2004 அன்று நடத்தப்பட்ட என்கௌண்டரில் இஸ்ரத் ஜஹான், ஜாவித் ஷேக், அம்ஜத் அலீ ராணா மற்றும் ஸீஸான ஜோஹர் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொலை செய்வதற்காக வந்த லஷ்கர் இ தய்பா தீவிரவாதிகள் என்று இவர்களை குஜராத் காவல்துறை கூறியது. ஆனால் இது குஜராத் காவல்துறை மற்றும் உளவுத்துறையால் இணைந்து நடத்தப்பட்ட போலி என்கௌண்டர் என்று சிபிஐ கூறியுள்ளது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வன்சாரா மற்றும் பாண்டே ஆகியோர் பிப்ரவரி மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தற்போது சிறையில் உள்ள ஒரே நபர் அமின் மட்டும்தான்.

Comments are closed.