இஸ்ரத் ஜஹான் வழக்கு: முன்னாள் உளவுத்துறை அதிகாரிகளை விசாரிக்க மத்திய அரசு அனுமதி மறுப்பு

0

இஸ்ரத் ஜஹான் போலி என்கௌண்டர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அதிகாரிகளை சிபிஐ விசாரிப்பதற்கு மத்திய அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது. இவர்களை விசாரிப்பதற்கு மத்திய அரசாங்கத்திடம் சி.பி.ஐ.யால் வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சி.பி.ஐ. சூழ்நிலை ஆதாரங்களை மட்டுமே சமர்ப்பித்துள்ளதாக கூறி மத்திய உள்துறை அமைச்சகம் இந்த கோரிக்கையை நிராகரித்துள்ளது. உளவுத்துறை அதிகாரிகளான ராஜேந்தர் குமார், எம்.கே.சின்ஹா, டி.மிட்டல் மற்றும் ராஜீவ் வான்கடே ஆகியோர் இஸ்ரத் ஜஹான் போலி என்கௌண்டரில் சம்பந்தப்பட்டுள்ளதாக சி.பி.ஐ. குற்றம்சாட்டியது. சம்பவம் நடைபெற்ற போது குஜராத் மாநில உளவுத்துறை இணை இயக்குநராக இருந்த ராஜேந்தர் குமார் மீது சி.பி.ஐ. கொலை குற்றமும் சுமத்தியது. இவரிடம் இரண்டு முறை விசாரணையும் நடத்தப்பட்டது.
உளவுத்துறை அதிகாரிகளை விசாரிப்பதற்கு மத்திய உளவுத்துறை தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது. மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக இஸ்ரத் ஜஹான் தாயார் சார்பாக ஆஜராகும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரத் ஜஹானும் மற்ற மூவரும் ஜூன் 2004ல் அஹமதாபாத் நகரில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனை போலி என்கௌண்டர் என்று சி.பி.ஐ. தெளிவாக கூறியது. ஆனால், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைத்து காவல்துறை அதிகாரிகளும் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.