இஸ்ரேலின் நாற்ற குண்டுகளுக்கு இந்தியாவில் நாற்றம் போதவில்லை.

0

கஷ்மீர் பள்ளத்தாக்கில் போராட்டக்காரர்களை ஒடுக்க அரசு பயன்படுத்தி வந்த பெல்லட் குண்டுகள் குறித்து பெரும் சர்ச்சை ஏற்பட்டதை தொடர்ந்து மக்களுக்கு பாதிப்பு வராத மாற்று வழிகளை ஆலோசிக்குமாறு அரசுக்கு பல தரப்பில் இருந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் ஃபலஸ்தீனில் போராட்டக்காரர்களை ஒடுக்கவும் மக்களை தங்கள் வீட்டில் இருந்து அப்புறப்படுத்தவும் இஸ்ரேலிய இராணுவம் பயன்படுத்தி வந்த நாற்ற குண்டுகளை இந்தியா இஸ்ரேலிடம் இருந்து வாங்கியது. இந்த நாற்ற குண்டு எனப்படுவது தண்ணீரில் கலக்கப்பட்டு போராட்டக்காரர்கள் மீது பீய்ச்சி அடிக்கப்படும். அழுகிய உடல்களைப் போலவும் குப்பைகளைப் போலவும் உள்ள இதன் துர்நாற்றம் அடங்க சில நாட்கள் பிடிக்கும். இந்த நாற்றம் தாங்காமல் மக்கள் அத இடத்தைவிட்டு வெளியேறிவிடுவார்கள்.

முன்னதாக கண்ணீர் புகை குண்டுகள், மிளகாய் குண்டுகள், ஸ்டன் குண்டுகள், வண்ண புகை குண்டுகள், ரப்பர் தோட்டாக்கள், தோள்களில் எரிச்சலூட்டும் ரசாயன குண்டுகள், ஆகியன இந்திய இராணுவத்தால் பயன்படுத்தப்பட்டு அவை எதிர்பார்த்த பலனை அளிக்காததை தொடர்ந்து தற்போது இந்த நாற்ற குண்டுகளை இந்தியா நம்பியிருந்தது. ஆனால் நாற்றத்திற்கு பழகிப் போன இந்திய மூக்குகளில் இது எத்தகைய மாற்றங்களையும் செய்யவில்லை என்றும் இதுவும் இந்தியாவில் பலனளிக்காது என்றும் தற்போது கூறப்பட்டுள்ளது.

இந்த நாற்ற குண்டுகளை மத்திய ரிசர்வ் காவல் படை டில்லியில் வைத்து சோதனை முயற்சியாக தங்களின் வீரர்கள் மீது பயன்படுத்தியது. ஆனால் அங்கிருப்பவர்கள் ஒரு அடி கூட நகரவில்லை என்று கூறப்படுகிறது.

ஒரு சராசரி இந்தியன் வாழ்கையின் பெரும்பாலான தருணங்களில் நாற்றத்தில் வாழ பழகிக் கொண்டமையால் இந்தியர்களுக்கு இயல்பாகவே நாற்றத்தை தாங்கிக் கொள்ளும் சக்தி ஏற்ப்பட்டு விட்டது என்றும் அதனால்  இந்த நாற்ற குண்டு இந்தியர்கள் மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்ற முடிவிற்கு அதிகாரிகள் வந்துள்ளனர்.

ஆண்டுக்கு 60 மில்லியன் டன்கள் குப்பைகளை உருவாக்கும் நாடாகவும், முறையான கழிப்பிட வசதிகள் கூட நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு கிடைக்கப்பெறாத நிலையிலும், மிக மோசமாக பராமரிக்கப்படும் பொது கழிப்பிடங்கள் மற்றும் குப்பைகளை தெருவிலேயே கொட்டும் பழக்கம் உள்ள இந்தியர்களை பாவப்பட்ட நாற்ற குண்டு என்ன செய்திட முடியும் என்று வேடிக்கையாக கேள்வி எழுப்பபடுகிறது.

Comments are closed.