இஸ்ரேலில் மரணித்த இந்திய பெண்: உடலுறுப்பு கடத்தல் மாபியாக்களின் வேலை?

0

இஸ்ரேலில் மரணித்த இந்திய பெண்: உடலுறுப்பு கடத்தல் மாபியாக்களின் வேலை?

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள ஆஷுட்ட அஷ்தோத் மருத்துவமனையில் 38 வயது இந்திய பெண்ணான நேஹா ஷர்மா கடந்த நவம்பர் 26 ஆம் தேதி உயிரிழந்துவிட்டதாக இந்திய தூதரகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இவர் இஸ்ரேலில் கடந்த ஐந்து வருடங்களாக செவிலியராக பணிபுரிந்ததாக கூறப்படுகிறது.

இந்த பெண்ணைக் குறித்து கிடைத்த தகவல்கள் மற்றும் அவரது பாஸ்போர்ட்டில் உள்ள தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட போது அப்படி ஒரு பெண் அவரது கடவுச்சீட்டில் குறிப்பிடப்பட முகவரியில் வசித்ததே இல்லை என்று தெரிய வந்துள்ளது.

ஷர்மாவின் கடவுச்சீட்டில் அவர் அஸ்ஸாம் மாநிலம் உடள்குறி மாவட்டத்தில் உள்ள மேரபில் கிராமத்தை சேர்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மேரபில் கிராம மக்கள் ஷர்மா தங்கள் கிராமத்தை சேர்ந்தவர் அல்ல என்று தெரிவித்துள்ளனர். அப்படியென்றால் குறிப்பிட்ட முகவரியை இருப்பிட சான்றாக கொடுத்து எப்படி நேஹா ஷர்மா இந்திய கடவுச்சீட்டு பெற்றார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் ஷர்மாவின் பாஸ்போர்ட்டில் உள்ள முகவரியில் ஷர்மாவின் பெற்றோர் எவரும் இல்லை என்று தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கூடுதல் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அஸ்ஸாம் டிஜிபி குலத்கர் சைக்கியா தெரிவித்துள்ளார். மேலும் தங்களின் கணிப்புப்படி அப்பெண் உத்திர பிரதேசத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அஸ்ஸாமில் இருந்து வெளியான செய்திகளின் அடிப்படியில் ஷர்மா இந்திய பெண்ணே அல்ல என்றும் அவர் நேபாலின் பிராத்நகரை சேர்ந்த ஜமுனா தாப்பா என்றும் தெரியவந்துள்ளது. மேலும் இவர் போலியான ஆவணங்களை கொண்டு இந்திய கடவுச்சீட்டு பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால் இது அரசு தரப்பில் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இந்திய தரப்பில் நேஹா ஷர்மா குறித்து இவ்வளவு குழபங்கள் இருக்க இஸ்ரேலிலோ குழப்பங்கள் இன்னும் அதிகரிக்கின்றது. நவம்பர் 26 ஆம் தேதி நேஹா ஷர்மா உயிரிழந்ததாக கூறப்பட, அது குறித்த தகவல் நவம்பர் 28 ஆம் தேதி இந்திய தூதரகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. நேஹா ஷர்மா குறித்த தகவலில் குழப்பங்கள் எழ இந்தியா தூதரகம் இஸ்ரேலிய வெளியுறவுத்துறையை நாடியது. ஆனால் இஸ்ரேலிய வெளியுறவுத்துறையோ மருத்துவமனையை நேரடியாக அணுகுமாறு தெரிவித்துள்ளது. இந்திய தூதரக அதிகாரிகள் அஷ்தோத் மருத்துவமனைக்கு செல்ல அவர்களோ தூதரக அதிகாரிகளின் கேள்விகளை வழக்கறிஞர் மூலம் கேட்குமாறு கூறியுள்ளனர். இன்னும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு மருத்துமனை சற்றும் ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மருத்துவமணியில் ஆஸ்துமா காரணமாக உயிரிழந்ததாக கூறப்பட்ட நேஹாவின் உடலில் இருந்து உறுப்புகளை தானம் செய்வதாக அவரது தந்தை ஆவணங்களில் கையெழுத்து இட்டதாக நேஹா ஷர்மாவின் உறுப்புகளை எடுத்த மருத்துவமனை தெரிவித்துள்ளது. மேலும் மருத்துவமணியில் உள்ளவர்கள் இந்திய கடவுச்சீட்டு உள்ள நேஹா ஷர்மாவை நேபாலத்தை சேர்ந்தவர் போல நடத்தியுள்ளதும் தெரிய வந்துள்ளது. ஆவணங்களில் இந்தியர் என்று கூறப்படும் பெண்ணை ஒரு மருத்துவமனையை சேர்ந்தவர்கள் எதன் அடிப்படையில் நேபாலத்தை சேர்ந்தவராக கருதினர் என்று கேள்வி எழுகிறது. மேலும் ஷர்மாவின் உடல் எங்கே என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

இத்துடன் ஷர்மாவின் உடல் உறுப்பு தான ஆவணங்களில் ஷர்மாவின் தந்தை என்று கையெழுதிட்ட நபர் தனது பெயராக புஷ்கர் ராஜ் தாப்பா என்று கையெழுத்திட்டுள்ளார். கடவுச்சீட்டில் புஷ்கர் ராஜ் ஷர்மா என்ற பெயர் ஏன் புஷ்கர் ராஜ் தாப்பா என்று மாறியுள்ளது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இத்துணை குழப்பங்களுக்கு மத்தியில் இந்திய தூதரகம் இஸ்ரேலிய வெளியுறவுத்துறையின் உதவியை நாட அவர்கள் இஸ்ரேலிய காவல்துறையிடம் செல்லுமாறு கூறியுள்ளனர். மேலும் இந்திய தூதரக அதிகாரிகள் வசம் உள்ள தகவல்களை இஸ்ரேலிய காவல்துறை அதிகாரிகளிடத்தில் வழங்கினால் மேற்படி விசாரணை நடத்தப்படும் என்று இஸ்ரேலிய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேலிய அதிகாரிகளிடத்தில் அனைத்து தகவல்களும் பகிர்ந்துகொள்ளப்படும் என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.