இஸ்ரேலுக்கு எதிராக வாக்களிக்காத இந்தியா

0

ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்ரேலுக்கு எதிராக நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்தியா வாக்களிக்காமல் இருந்தது ஃபலஸ்தீன விவகாரங்களில் இதுவரை கடைபிடித்து வந்த நிலைக்கு மாற்றமாக உள்ளது. சென்ற வருடம் ஃபலஸ்தீனின் காஸா மீது இஸ்ரேல் நடத்திய கொடிய தாக்குதல் குறித்து ஐக்கிய நாடுகள் சபை சமர்ப்பித்த அறிக்கை மீது நேற்று (ஜூலை 3) வாக்கெடுப்பு நடந்தது.
இஸ்ரேலை கண்டிக்கும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட போது இந்தியா அதில் வாக்களிக்காமல் ஒதுங்கிக் கொண்டது. இந்தியா, கென்யா, எத்தியோபியா, பராகுவே மற்றும் மேசிடோனியா ஆகிய நாடுகள் வாக்களிக்காமல் ஒதுங்கிக் கொண்டன. அமெரிக்கா மட்டும் இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களித்தது. 41 நாடுகள் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தன.
இஸ்ரேலை கண்டிக்கும் தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்காமல் ஒதுங்கிக் கொண்டது இந்திய அரசின் இஸ்ரேல் ஆதரவு போக்கை காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு இஸ்ரேலுடன் நெருக்கமான உறவுகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி விரைவில் இஸ்ரேல் செல்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்னர், மோடி உள்ளிட்ட தலைவர்களிடம் வாக்கெடுப்பில் இருந்து ஒதுங்கி இருக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு கோரிக்கை வைத்ததாக இஸ்ரேல் நாளிதழ் ஹாரட்ஸ் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலின் இந்த அறிக்கை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கம் ஆகியவற்றை போர் குற்றங்கள் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளது. பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதற்காக இஸ்ரேலை இந்த அறிக்கை வன்மையாக கண்டிக்கிறது. அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளுக்கு இத்தீர்மானம் அழைப்பு விடுத்துள்ளது.

Comments are closed.