இஸ்ரேலுடன் நெருக்கம் காட்டும் எகிப்து இராணுவ அரசு

0

– இப்னு ஹாஜா

நான்கு வருடங்களுக்கு முன்பு  எகிப்து தூதரகத்தில் பறந்து வந்த இஸ்ரேல் தேசியக்கொடி  போராட்டக்குழுவைச் சேர்ந்த இளைஞர் ஒருவால்   கிழித்து வீசப்பட்டது. மக்கள்  புரட்சி வெற்றிபெற்றதை உணர்த்தும் சம்பவமாக அது பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது கெய்ரோ நகரில் கட்டப்பட்டுள்ள புதிய இஸ்ரேல் தூதரகத்தில்  எந்த எதிர்ப்பும் இன்றி  இஸ்ரேல் தேசியக்கொடி  பறந்து வருகிறது. 2011 – ஜனவரி 25 புரட்சியின் போது, இஸ்ரேல் தூதரகத்தை மூடுமாறும் எகிப்தியர்கள் கோரினர்.  இஸ்ரேல் தூதரகம் நோக்கி  பேரணி சென்ற இளைஞர்கள் இராணுவத்தால் அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் தடுப்புகளை தகர்த்து தூதரகத்தை அடைந்தனர்.

அப்போது,அகமது அல் ஷஹாத் என்ற இளைஞர் அங்கிருந்த உயர்ந்த கட்டிடத்தின் மீது ஏறி 21வது தளத்தில் இருந்த இஸ்ரேல் தூதரகத்தின் கொடிகளை அகற்றி அதனை மக்கள் மீது வீசினார். அதனை மக்கள் தீயிட்டு கொளுத்தி, தங்களது புரட்சி வெற்றி பெற்றதை கொண்டாடினர்.  இதன் மூலம் தங்களின் பரம எதிரியான இஸ்ரேலிற்கும், அவர்களை இத்தனை ஆண்டுகளாக ஆதரித்து புகழிடம் அளித்து வந்த துரோகிகளுக்கும் தக்க பாடம் கற்பித்ததாக எண்ணி மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால், கால ஓட்டத்தில், தற்போது காட்சிகள் மாறியுள்ளன. எகிப்து நாட்டில் இஸ்ரேல் தூதரகம் புதிய நவீன கட்டிடத்தில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டின் தூதர் நான்-கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நாடு திரும்பயுள்ளார்.   எகிப்து வரலாற்றில் ஜனநாயக ரீதியாக தேர்தல் நடைபெற்று அதில்  முதல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஃப்ரீடம் அண்ட் ஜஸ்-டிஸ் கட்-சி-யின் முகம்மது முர்சி.  மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் 29 ஆண்டுகளாக  சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த,   ஹோஸ்னி முபாரக்கை  ஆட்சியில் இருந்து அகற்ற எகிப்து மக்கள் நடத்திய புரட்சி உலகின் கவனத்தை ஈர்த்தது.

 இஸ்லாமியவாதிகள், தொழிற்சங்கத்தினர், இடதுசாரி அமைப்புகளை சேர்ந்-த-வர்-கள்  18 நாட்கள் நடத்திய மக்கள் எழுச்சி போராட்டம். முபாரக்கை  வீட்டுக்கு அனுப்பியது.  ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள இராணுவம் மூலம் பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டதில் சுமார் ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.  இடைக்கால அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றதை தொடர்ந்து நடைபெற்ற அதிபர் தேர்தலில் முகம்மது முர்சி வெற்றி பெற்று எகிப்தின் முதல் ஜனநாயக அதிபர் என்ற பெருமையை பெற்றார். தொடர்ந்து அவர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள், இஸ்ரேலை  கலக்கத்தில் ஆழ்த்தின. நீண்ட நெடுங்காலமாக இஸ்ரேல் ஆதரவு நாடாக  செயல்பட்டு வந்த எகிப்து அதன் போக்கில் இருந்து மாறியது. இவரது ஆட்சிக்கு தொடக்கத்தில் ஆதரவு கரம் நீட்டுவது போல் காட்டிக்கொண்ட அமெரிக்கா, திரைமறைவில் பல சதிகளை அரங்கேற்றியது. இதற்கு காரணம் இஸ்ரேல்.

யூதர்களை எதிர்த்து பல்லாண்டு காலமாக வீரப்போர் புரிந்து வரும் ஹமாஸ் இயக்கம், இஹ்வானுல் முஸ்லிமீன் பெற்ற அரசியல் வெற்றி காரணமாக வலுப்பெறும் என்பதை உணர்ந்த இஸ்ரேல் முர்ஸியின் ஆட்சியை கவிழ்க்க பல திட்டங்களை மேற்கொண்டு தற்போது, அதில் வெற்றியும் பெற்றுள்ளது. முர்சியின் ஆட்சி மக்கள் எண்ணங்களை, விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் இல்லை எனக் கூறி, போலி தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புகள் மூலம் எகிப்து இராணுவத்தின் துணையுடன் ஆங்காங்கே கூலிப்படைகள் மூலம் போராட்டங்கள் என்ற பெயரில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

 இதன் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகமான நிலையில், அல்லது மேற்கத்திய ஊடகங்களால் இத்தகைய போராட்டங்கள் பூதாகரப்படுத்தப்பட்ட நிலையில், 2013 ஆம் ஆண்டு எகிப்து இராணுவ ஜெனரல் அப்-துல் ஃபத்தாஹ் அல் சிசி தலைமையிலான இராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பை அரங்கேற்றியது.

எகிப்து அரசியல் அமைப்பு சட்டத்தை நீக்கி உத்தரவிட்டார் அல் சிசி. அதிபர்  முர்சி உள்ளிட்ட சகோதரத்துவ அமைப்பின் முன்னணி தலைவர்கள் கைது செய்யப்பட்டதோடு, அந்நாட்டின் உச்ச நீதிமன்ற நீதிபதி அட்லி மன்சூர் இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்த ஜனநாயக படுகொலையை சில அரபு நாடுகள் மட்டுமே கண்டித்தன. இதற்கு பின்னணியாக இருந்த அமெரிக்கா தனது கவலையை மட்டும் தெரிவித்தது.

அதே நேரம் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள்  மறைமுகமாக இராணுவத்திற்கு பல்வேறு உதவிகளை செய்தன. அரபு வசந்தத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த போராட்டம் தங்களது நாடுகளுக்கும் பரவி அதன் மூலம் மன்னராட்சிக்கு ஆபத்து வந்து விடும் என்பதே இவர்களின் இந்த சதிச் செயலுக்கு காரணம். துருக்கி நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சி ஒன்று அண்மையில் வெளியிட்ட ஆடியோ ஆதாரம் ஒன்றில், முர்சியின் ஆட்சியை அகற்ற ஐக்கிய அரபு அமீரகம் பெருமளவு பொருளாதார உதவிகளை  வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

எகிப்து இராணுவம், அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள்  மட்டுமின்றி, சவூதி அரேபயா, போன்ற அரபு நாடுகள் இணைந்து முர்சியை ஆட்சியை விட்டு அகற்ற பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டன. அதிபராக பதவி ஏற்று ஒரு ஆண்டு மட்டுமே கடந்த நிலையில், முர்சி எகிப்து மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவில்லை என்ற  கருத்து திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. பரப்பப்பட்டது.  செயற்கையான போராட்டங்கள்,  திட்டமிட்டு  பிரம்மாண்ட போராட்டங்களாக சித்தரித்து, ஊடகங்களில் பூதாகரப்படுத்தும் வேலைகளும் முழு வீச்சில் நடைபெற்றன.

 இதன்விளைவாக 2013ஆம் ஆண்டு ஜுலை 3 ஆம் தேதி முகமது முர்சியை இராணுவம் அதிபர் பதவியில் இருந்து நீக்கி அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டது. முபாரக்கை ஆட்சியில் இருந்து விரட்டும் பேராட்டத்தின் போது, முர்சி பல்வேறு சட்டவிரோத காரியங்களில் ஈடுபட்டதாகக் கூறி  பல்வேறு  வழக்குகள் தொடுக்கப்பட்டு, மரண தண்டனை, ஆயுள் தண்டனை என அடுக்கடுக்கான தண்டனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைவர்கள்,  தொண்டர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கைதாகி சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.

முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் தலைவர் முகமது பெல்தாகியை சிறையில் அடைத்துள்ள இராணுவம், அவரது மகளை கொடூரமான முறையில் கொலை செய்தது. அவரது தந்தை மற்றும் சகோதரரையும் பொய்குற்றச்சாட்டில் கைது செய்தது. அவரது 16 வயது மகனை கூட விட்டுவைக்காமல் அவரையும் கைது செய்தது. இவை ராணுவம் அங்கு நடத்தும் அட்டூழியங்களுக்கு சில எடுத்துக்காட்டுகள் தான்.

அமெரிக்கா, இஸ்ரேலின் விருப்பங்களுக்கு ஏற்ப அதிபர் சிசி ஆட்சி நடத்தி வருகிறார். தற்போது, நாடாளுமன்றத் தேர்தலை நடத்தப்போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். முன் எப்போதும் இல்லாத அளவிற்கு எகிப்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 568ஆக உயர்த்தியுள்ள அல் சிசி, அதில் 5 ச-தவீத உறுப்பனர்களை நியமிக்கும் அதிகாரம் அதிபருக்கு அளித்து சட்டத்தை திருத்தியுள்ளார். இந்த தேர்தலை  ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் கட்சி புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. எகிப்தில் ஜனநாயகத்தை  மீண்டும் கொண்டுவருவதற்கான முயற்சி தொடரும் என்றும் அறிவித்துள்ளது.

Comments are closed.